நீட் தேர்வு... ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை என்ன சொல்கிறது?



நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆராய கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்று அமைத்தது.
இந்தக் குழுவில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன்
உள்ளிட்ட ஒன்பது பேர் இடம்பெற்றனர். இந்தக் குழு பல்வேறு தரவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் கூடிய 165 பக்க அறிக்கையை கடந்த ஜூலை 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. சமீபத்தில் இந்த அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குழு பெற்றோர், கல்வியாளர்கள், பொது அமைப்புகள் எனப் பலரிடமிருந்து பொதுக் கருத்தைக் கேட்டது. அப்படியாக, மொத்தம் 86 ஆயிரத்து 342 பேரின் கருத்துகள் வந்து சேர, இதில் 65 ஆயிரத்து 7 பேர் நீட் தேர்வுக்கு எதிராக பதிவு செய்திருப்பது இந்த அறிக்கையின் வழியாகத் தெரியவந்துள்ளது. மட்டுமல்ல. மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை நீக்குவதற்கு சட்ட வழிமுறைகளை மாநில அரசு  மேற்கொள்ள வேண்டுமென அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் மசோதா கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த அறிக்கையின் அம்சங்கள் குறித்து கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். 
‘‘இந்திய அளவிலும், தமிழக அளவிலும் கல்வி தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி போகிறவர்களுக்கு 1984ல் நுழைவுத்தேர்வு அறிமுகமானது. அந்த நுழைவுத்தேர்வு சுமார் 20 ஆண்டுகளாக இருந்தது. அதற்குமுன்பு நேரடியான மதிப்பெண்கள் மூலமும், நேர்முகத்தேர்வின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கும் முறைகள் இருந்தன.  

2006ல் முனைவர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நுழைவுத்தேர்வின் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அது மாணவர்களுக்கு சாதகமா? பாதகமா? அனைவருக்குமான தேர்வாக அது இருக்குமா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவர், ‘வசதி படைத்த குடும்பங்களில் இருந்து வரக்கூடிய குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு சாதகமாக இருக்கிறது.
பல காலங்களாகக் கல்வி மறுக்கப்பட்டு பின்தங்கிய சமூகத்திலிருந்து வரக்கூடிய, பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு இது சவாலாக இருக்கிறது. இவர்கள்தான் பெரும்பகுதி மக்கள். இது நியாயமான அணுகுமுறை கிடையாது. அதனால், பள்ளிக்கல்வியை வலுவாக்கி அதன் மதிப்பீட்டின் அடிப்படையில் உயர்கல்விக்கு சேர்க்கை நடத்த வேண்டும். அதுவே நியாயமான முறை’ என அறிக்கை தந்தார்.

அதன் அடிப்படையிேலயே தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்கு போனார்கள். அப்போது உயர்நீதிமன்றம் இந்தச் சட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியது. பிறகு, மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இந்தச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் இருக்கிறது.
இதன்பிறகு 2016ல் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டு பிரிவு 10டி சேர்க்கப்பட்டு நீட் அறிமுகமானது. இது 2017ல் இருந்து நான்காண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. 2016ல் இருந்து இந்தியா முழுவதும் இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நீட் மாணவர்கள் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது? சமூகத்தில், பொருளாதாரத்தில், கல்வியில், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், மாநில உரிமையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது? இதனால், பல்கிப் பெருகும் பயிற்சி மையங்களின் தன்மை என்ன? அதனுடைய சாதக, பாதகங்களை ஆய்வு செய்யவே இந்தக் குழுவை அமைத்தார்கள்.  இக்குழு கொடுக்கப்பட்ட குறைந்த நேரத்திற்குள் இரவுபகலாக உழைத்து ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம்.

மருத்துவக் கல்வியின் நோக்கம் என்ன? அதற்கும் நீட் தேர்விற்கும் உள்ள தொடர்பு? மருத்துவக் கல்வியை முடித்தவர்கள் சுகாதாரத் துறைக்குள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதில் நீட் ஏற்படுத்திய தாக்கம் என்ன? வெளிநாடுகளில் இத்தகைய தேர்வு முறை எப்படியானதாக இருக்கிறது? முதல் தலைமுறை மாணவர்களின் நிலை? எனப் பல்வேறு விஷயங்களை இந்தக் குழு கணக்கில் எடுத்துள்ளது.  

குறிப்பாக, கற்றல் செயல்பாட்டிற்கு முற்றிலும் எதிராக நீட் நடைமுறை இருப்பதாக அறிக்கையில் சொல்லியிருக்கிறது. நீட் தேர்வு மாணவர்களை பள்ளி வகுப்பறையில் நடக்கக்
கூடிய கற்றல் செயல்பாட்டிலிருந்து விலக்கி, சந்தையில் பயிற்சிக் கூடங்களில் பயிற்சி பெறக்கூடியவர்களாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிடுகிறது.

இது எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், துறை சார்ந்த வல்லுநர்கள் கிடைப்பது சவாலாகிவிடும் எனவும் சொல்லியிருக்கிறது. இதை கல்வியாளர்கள் நீட் வந்ததிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஏனெனில், பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கும்போதே நீட்டிற்கான பயிற்சியை மாணவர்கள் தொடங்கிவிடுகிற நடைமுறை பெருகி வருகிறது.

அதை இந்தக் குழு குறிப்பிட்டு இருக்கிறது.அடுத்து, இந்தக் குழு எத்தனை பேர் நீட் வேண்டும் எனச் சொல்கிறார்கள், எத்தனை பேர் வேண்டாம் எனச் சொல்கிறார்கள் எனப் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. வேண்டுமெனச் சொல்பவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்; வேண்டாம் என நினைப்பவர்கள் என்ன காரணத்தை முன்வைக்கிறார்கள் என்பதையே ஆய்வு செய்திருக்கிறது. இதில் அதிகமான பேர் வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.  

இதிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கிற தகவல்கள் என்னவெனில், சமூகத்தில் தலைமுறை தலைமுறையாகப் படிக்கிற வாய்ப்பு யாருக்குக் கிடைத்திருக்கிறதோ அவர்கள் நீட்டின் மூலமாக அதிகளவில் பலன் அடைந்திருக்கிறார்கள். சமூகத்தில் யாருக்கெல்லாம் தலைமுறை தலைமுறையாக படிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லையோ அத்தகைய பிரிவினருக்கு இது சவாலாக அமைந்திருக்கிறது. நீட் இவர்களை, ‘இது நமக்கான தேர்வே கிடையாது’ என ஒதுங்கிப் போகச் செய்திருக்கிறது எனத் தரவுகளுடன் அறிக்கையில் சொல்லியிருப்பது வேதனையாக இருக்கிறது’’ என்கிறவர் தொடர்ந்தார்.   

‘‘அடுத்து, பல்வேறு நாடுகளில் பள்ளிக் கல்வியை முடித்தபிறகு உயர்கல்வி போவதற்கு எத்தகைய நடைமுறையை பின்பற்றுகிறார்கள் என ஆய்வு செய்திருக்கிறார்கள். உயர்கல்வி செல்வதற்கான தேர்வுகள் எந்தெந்த வகையில் நடக்கிறது எனவும் ஆய்வில் சொல்லியுள்ளனர். முக்கியமாக, இந்த ஆய்வில் இரண்டு விஷயங்களை சொல்கிறார்கள்.

ஒன்று, ஒவ்வொரு நாட்டிலும் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வி செல்வதற்கு ஒவ்வொரு வகையில் இத்தகைய தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்வுகள் எதுவும் அந்தந்த நாட்டின் அரசால் நடத்தப்படவில்லை. அந்த நாட்டின் எல்லா பல்கலைக்கழகங்களும் ஒரே தேர்வைத்தான் பின்பற்ற வேண்டும் என எந்த பல்கலைக்கழகத்தின் மீதும் திணிக்கப்படவுமில்லை.

ஒவ்வொரு நாட்டிலும் ஓர் அமைப்பு இந்தத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வை மாணவர் சேர்க்கைக்கு ஒரு கூறாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, இதுவே தகுதியாக எந்த நாட்டிலும் கிடையாது என ஆய்வறிக்கையில் சொல்லியிருக்கின்றனர்.  

இரண்டாவது, அந்தந்த நாடுகளில் இந்தத் தேர்வு முறையை ஆய்வு செய்து, மறுபரிசீலனைக்கும் உட்படுத்தி இருக்கிறார்கள். இதனால், சில நாடுகள் இத்தகைய தேர்வுகளைக் கைவிட்டிருப்பதாகவும் ஏ.கே.ராஜன் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இத்தகைய தேர்வுகள் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்விக்கு நடக்கிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடக்கக்கூடிய இந்தத் தேர்வுமுறை, இதுவரை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. நீட் தேர்வு ஐந்தாண்டுகளாக நடந்து வருகிறது. இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த போதுமான காலம்தான்.

இதை தேசிய தேர்வு முகமை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல; தேசிய தேர்வு முகமையிடம் இது சம்பந்தமான எந்தத் தரவுகளும் இல்லை.

அதாவது, சமூகத்தில் எத்தனை பிரிவு மக்கள் இருக்கிறார்கள்? யார் யாரெல்லாம் நீட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள்? எப்படி தேர்வை எதிர்கொள்கிறார்கள்? இதற்காகப் பயிற்சி மையத்திற்கு போகிறார்களா, இல்லையா? பயிற்சி மையம் செல்கிறவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி பெறுகிறார்கள்? முதல்முறை எத்தனை பேர்? இரண்டாவது முறை எத்தனை பேர்? இப்படி எந்தத் தகவல்களும் அவர்களிடம் இல்லை. அவர்கள் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.  

நீட் மூலமாக இந்திய அரசு என்ன சொல்ல வருகிறது என்றால், பாடத்திட்டத்தின் அடிப்படையில் வரும் மதிப்பெண்கள் தகுதியைத் தீர்மானிக்காது என்பதே. இது கல்வி செயல்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. அதே பாடத்திட்டத்தில் தேசிய தேர்வு முகமை ஒரு தேர்வை நடத்தினால் அது தகுதியாக மாறுகிறது. ஆக, ஓர் அரசாங்கம் ஒரு தேர்வை நடத்தி மதிப்பீடு சான்றிதழ் தந்தால் அது தகுதி கிடையாது என்றும்,  இன்னொரு முகமை அதே பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தினால் அது தகுதியாகும் என்பதும் எப்படி சரியாகும்?

அடுத்ததாக, நீட் தேர்வுக்கான பயிற்சிக் கூடங்கள் பல்கிப் பெருகி 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் சுழலும் ஒரு துறையாக மாறியிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தவிர, ஒரு பயிற்சி மையத்திற்குப்போய் ஓராண்டு அல்ல; தொடர்ந்து போய் எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர். இதனை ரிபீட்டர்ஸ் எனக் குறிப்பிடுகிறார்கள். இவர்கள்தான் இப்போது அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். முதல் தலைமுறையாக எழுதுகிறவர்கள் இந்த நீட் பயிற்சிக்கு எப்படி தொடர்ந்து செலவு செய்ய முடியும்? ஆக, எந்த அடிப்படையில் பார்த்தாலும் நீட் எந்த நியாயத்தையும் கொடுக்கவில்லை.

அடுத்து, நீட் வணிக மையத்தை ஒழிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், நீட்டிற்கு முன் நன்கொடையாக பணம் வசூலித்தார்கள். இப்போது கல்விக் கட்டணத்தையே உயர்த்திவிட்டார்கள். தனியார் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவக் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிட்டது.  சரி, தகுதியானவர்கள் வருகிறார்களா எனக் கேட்டால் அதுவும் நடக்கவில்லை. நீட் தேர்வில் மதிப்பெண் இருந்தும் பணம் கட்ட முடியாதவர்கள் பின்வாங்கும்போது, மதிப்பெண் குறைந்தவர்கள் பணம் இருந்தால் அந்த இடத்திற்கு எளிதாகப் போக முடிகிறது. இது மோசமான முன்னுதாரணம்.

அடுத்து, இப்போது நீட் முதுநிலை எழுதுகிறவர்களுக்கு எந்தவிதமான பணி அனுபவங்களும் தேவையில்லை என இருக்கிறது. இதனால், எம்பிபிஎஸ் முடித்ததும் பிஜி நீட்டுக்குத்தான் தயாராகின்றனர். இது பொது சுகாதாரத் துறையை வலு இழக்கச் செய்யும் நடவடிக்கையாக இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறந்த மருத்துவர்கள் கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாக இந்த அறிக்கை தெளிவாகச் சொல்கிறது. மருத்துவமும், மருத்துவக் கல்வியும் மாநிலப் பட்டியலில் இருக்கிறது. பல்கலைக்கழகத்தை ஒழுங்குபடுத்துதல் என்கிற விஷயமும் மாநிலப் பட்டியலிலேயே வருகிறது. இந்த ஒழுங்குபடுத்துதலினுள்தான் மாணவர் சேர்க்கை நடைமுறையும் வரும்.

பொதுப்பட்டியல் எனப்படும் மூன்றாவது பட்டியல்படி இந்திய அரசைப் பொறுத்தவரை தரத்தை தீர்மானித்தல் மட்டுமே செய்ய முடியும். அதனால், மாணவர் சேர்க்கை
என்பதை மாநில பட்டியலுடன் இணைத்தே பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் மாநிலத்திற்கு இருக்கக்கூடிய உரிமையின்படி நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்கு சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என இந்தக் குழு நிறைவாக பரிந்துரைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில் சட்டப்பேரவையும் மசோதா நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.எனவே, இந்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தையும் மக்களாட்சி மாண்புகளையும் உணர்ந்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க ஒப்புதல் வழங்க வேண்டும்...’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பேராச்சி கண்ணன்