ஊர்: தமிழ்நாடு... வயது: 14... கண்டுபிடிப்பு: சோலார் அயர்ன் வண்டி...



ஊர்: தமிழ்நாடு... வயது: 14...

கண்டுபிடிப்பு: சோலார் அயர்ன் வண்டி...

இறுதிப் பட்டியலுக்கு இவரை தேர்ந்தெடுத்தவர்: பிரிட்டிஷ் இளவரசர்!

பரிசுத்தொகை: ரூ.10 கோடி...

வினிஷா உமாசங்கர்... திருவண்ணாமலையைச் சேர்ந்த 14 வயதே நிரம்பிய பள்ளி மாணவியான இவர், இப்போது ஓர் அறிவியல் கண்டுபிடிப்பால் உலகையே தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், சுற்றுச்சூழல் பிரச்னைக்கு ஒரு தீர்வை இவரின் அறிவியல் வடிவமைப்பு தரும் என்பதை கருத்தில் கொண்டு ‘எர்த்ஷாட்’ பரிசுக்கான இறுதிப்பட்டியலுக்கு இந்த மாணவியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு நம்பிக்கையான தீர்வைத் தருபவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ‘எர்த்ஷாட்’ என்கிற பரிசு அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நபர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் 50 நபர்கள் இந்தப் பரிசைப் பெறுவார்கள். அதேநேரம், உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு ஐம்பது தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கிறார்கள்.

பரிசுத் தொகையாக ஐந்து பேருக்கு தலா பத்து கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. பரிசு வழங்கும் கவுன்சிலில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், ஜோர்டான் ராணி ராணியா அல் அப்துல்லா, இந்தியாவின் இந்திரா நூயி உள்ளிட்டவர்கள் உள்ளனர். இந்தாண்டு இறுதிப்பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 15 பேர்களில் இரண்டு பேர் இந்தியர்கள். அதிலொருவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர்.

இவரின் சோலார் மின்சக்தியில் செயல்படும் அயர்ன் வண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே அயர்ன் வண்டிக்காக ஸ்வீடனைச் சேர்ந்த சில்ட்ரன்ஸ் கிளேமேட் ஃபவுண்டேஷன் அமைப்பிடம் இருந்து ‘சில்ட்ரன்ஸ் கிளேமேட்’ பரிசைத் தட்டி பெரும்கவனத்தை ஈர்த்திருந்தார் வினிஷா. இப்போது எர்த்ஷாட்டின் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வாகியிருக்கிறார்.

‘‘எனக்கு ஐந்து வயசாக இருக்கும்போதே அறிவியிலில் அதீத ஆர்வம் வந்திடுச்சு. அதுக்கு காரணம் அப்பாவும், அம்மாவும்தான். அவங்க என் பிறந்தநாளுக்கு அறிவியல் சார்ந்த என்சைக்ளோபீடியாவை பரிசா கொடுத்தாங்க. அதை படிச்சேன். அப்புறம், எட்டு வயசாகும்போது காலநிலை சம்பந்தமான பிரச்னைகள் தெரிய வந்துச்சு. அதுகுறித்து நிறைய வாசிச்சேன். இதுக்கு ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. ஆனா, எந்த ஐடியாவும் வரல. தொடர்ந்து முயற்சி செய்திட்டே இருந்தேன்.

பனிரெண்டு வயசுல சோலார் அயர்னிங் வண்டிக்கான யோசனை வந்துச்சு. என் வீட்டருகே ஒரு அயர்னிங்காரர் தன்னுடைய அயர்ன் பாக்ஸை கஷ்டப்பட்டு தூக்கி அதில் நிலக்கரியை நிரப்பிட்டு இருந்தார். பிறகு, வேலை முடிஞ்சதும் மாலை அதிலுள்ள சாம்பலை வெளியில் தூக்கிப் போட்டுருவார். இதை பள்ளிக்கு போகும்போதும் வரும்போதும் தினமும் பார்ப்பேன். அதிலிருந்து வரும் புகையால் மூச்சுப் பிரச்னை எல்லாம் அவருக்கு ஏற்படும். அந்தப் புகை, கார்பன் மோனாக்சைடை உருவாக்கும். அது நச்சுத்தன்மை வாய்ந்தது. வெளியேறும் சாம்பல் காற்றில் கலந்து மாசினை அதிகரிக்கும். அதனால, மத்தவங்களுக்கும் பிரச்னை. அப்புறம், நிலக்கரிக்காக நாம் மரத்தைத்தான் வெட்டணும். காடுகள் அழிய இதுவும் ஒரு காரணமாகுது.

இப்படியா சுற்றுச்சூழல் பிரச்னை உருவாகுது. அதனால, சோலார் அயர்னிங் வண்டி உருவாக்கினால் என்னனு நினைச்சேன். சோலார் பேனல் எப்படி வேலை செய்கிறது உள்ளிட்ட பல விஷயங்களை புத்தகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் வழியா தெரிஞ்சுக்கிட்டேன்...’’ என்கிறவர், தன் சோலார் அயர்னிங் வண்டி பற்றிக் குறிப்பிட்டார்.  

‘‘அயர்னிங் வண்டியின் கூரை சோலார் பேனலால் ஆனது. இது ஒவ்வொரு  மணி நேரத்திற்கும் 250 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி பண்ணும். ஐந்திலிருந்து ஆறு மணிநேரத்தில் பேட்டரி சார்ஜாகிடும். அது ஆறு மணி நேரம் அயர்ன் பாக்ஸிற்கு தேவையான மின்சாரத்தை வழங்கும்.

இதில் கூடுதலா செல்போனையும் சார்ஜ் செய்துக்க பிளக் பாயிண்ட் இணைச்சிருக்கேன்...’’ என உற்சாகமாகச் சொல்லும் வினிஷா உமாசங்கர், ‘‘என்னுடைய ஆசையெல்லாம் இந்த அயர்னிங் சோலார் வண்டியை இங்கே உற்பத்தி செய்து குறைந்தவிலையில் விற்க வேண்டும். அதுவும், ஆண்டுதோறும் வெயில் அதிகமுள்ள ஆசியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதுதான்...’’ என நம்பிக்கை மிளிரச் சொல்கிறார்.

பி.கே