நீரின்றி அமையாது உலகு...



7. மழை நீர்... உயிர் நீர்..!

கருமேகங்கள் சூழ்ந்து வானில் இருந்து சிறு சிறு சாரலாக பெய்யும் மழை, மெல்ல சரம் சரமாக மண்ணில் விழும்போது உயிர்கள் துளிர்த்து சிலிர்க்கும். மழை விண்ணின் கொடை... மழைநீரை சேமிப்போம் நிலத்தடி நீரை உயர்த்துவோம்... என்ற வாசகங்களைப் படித்திருப்போம். அதை சிந்தித்து செயல்படுத்தியிருக்கிறோமா..?பெரும்பாலும் இல்லை என்ற பதில்தான் வரும். கோடைகாலத்தில் ஒரு குடம் நீருக்கு ஏங்கும் நாம் பருவகாலங்களில் கொட்டும் மழைநீரை பல வழிகளில் வீணடித்து வருகிறோம். அதை சேமித்து வைக்க என்ன முயற்சி எடுத்துள்ளோம்?

எல்லாவற்றையும் அரசு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நம்மால் எப்படி செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.தென்மேற்குப் பருவமழை முடிந்து இன்னும் சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை தமிழ் நாட்டில் தொடங்கிவிடும். இந்தத் தருணத்தில் மழையைக் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம்.இப்போது உலகில் மூவரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. நிலத்தடி நீரின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2050ம் ஆண்டு தண்ணீருக்காக உலகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

அர்ஜென்டினாவில் தண்ணீர் தொடர்பாக நடந்த ஐநா மாநாட்டின்போது ஒரு சொட்டு தண்ணீருக்கான விலை ஒரு சொட்டு பெட்ரோலின் விலையை விட அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் கூறினர். இந்திய நீர் தேவையின் 70 சதவீத பங்கை பருவமழை தருகிறது. குறிப்பாக பருவமழையை நம்பி நெல், கரும்பு, சோளம், பருத்தி, சோயாபீன்ஸ் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இந்தியா வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214 கி.மீ நீளத்திலும், மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் வரை 2933 கிமீ அகலத்துடனும் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த நிலப்பரப்பில் பெய்யும் மழையும் அதன் அளவுகளும் வித்தியாசமாகவே உள்ளன.

அசாதாரண மழை பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, இமயமலைப்பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகிறது. இந்தியாவில்  மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சியில் 1100 செ.மீ மழை பொழிகிறது. இது உலகில் அதிக மழை பொழியும் இடம் என்ற பெருமையை ஒரு காலத்தில் பெற்றிருந்தது. ஆனால், இப்போது வருடத்திற்கு 5 மாதங்கள் மழை இல்லாமல் தண்ணீர் தேடி அங்குள்ளவர்கள் அலையும் அவலம் உள்ளது.

சிரபுஞ்சிக்கு அருகேயுள்ள மாசின்ராம் (Mawsynram) அதிக மழைப் பொழிவைப்பெறும் இடமாக மாறியுள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 1186 செமீ மழை பெய்கிறது. உலகின் அதிக மழைப்பொழிவைப் பெறும் மற்றொரு இடம் வட பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவுகளின் மவுண்ட் வேய்-ஏல்-ஏல் (Waialeale). 350 நாட்கள் பொழியும் மழையில் ஆண்டுக்கு 1143 செ மீ மழை இங்கு பதிவாகிறது.

பருவமழைக் காலங்களில், மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில், மழைப் பொழிவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. முன்பு 10 முதல் 12 நாட்களில் பெய்யும் மழை, இப்போது இரண்டு அல்லது மூன்று நாட்களில் கொட்டித் தீர்க்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இங்கு, மழையை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாளில் 2.5 மி.மீ வரை மழை பெய்தால் அன்றைய நாளில் மழை பெய்தது என்றும்; 2.5 - 7.5 மிமீ வரை பெய்தால் லேசான மழை என்றும்; 7.6 - 35.5 மிமீ வரை பெய்தால் மிதமான மழை என்றும்; 35.6 - 64.4 மிமீ வரை பெய்தால் பலத்த மழை என்றும்; 64.5 - 124.4 மிமீ வரை பெய்தால் மிக பலத்த மழை என்றும்; 124.5 மிமீக்கு மேல் பொழிந்தால் அது அசாதாரண பலத்த மழையாகவும் கணக்கிடப்படுகிறது.

அதே நேரத்தில், மழைத்துளியின் விட்டம் 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருந்தால் அது தூறல் என்றும் அதுவே 0.5 மில்லி மீட்டருக்கும் அதிகம் என்றால் மழை என்றும், 4 முதல் 6 மில்லி மீட்டருக்கு மேல் இருப்பது கனமழை என்று அழைக்கப்படுகிறதுஅறிவியல் கணக்குப்படி சுமார் 20 மிமீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிக் கொள்ள முடியும்.
உலகின் ஆண்டு சராசரி மழை அளவு 80 செமீ. இந்தியாவின் ஆண்டு சராசரி மழை என்பது 120 செமீ. தமிழகத்தின் சராசரி மழையளவு 97 செமீ. தமிழகத்தின் மொத்த மழை அளவில் 47 சதவிகிதம் வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கிறது.

ஆற்று நீரை கடலில் கலக்க விடாமல் அணைகளை எழுப்பி முழுவதுமாக சேமிப்பதாக வைத்துக்கொள்வோம். இதனால் ஆறுகளுக்கு அருகிலுள்ள நிலத்தடி நீர் சேமிப்பு பெரிதும் பாதிக்கப்படும். தமிழகத்தில் சுமார் 116 அணைகள் இருக்கின்றன. அவற்றில் போதுமான அளவு நீரைச் சேமித்துவிட்டு மீதியிருக்கும் ஆற்றுநீரை அதன் போக்கில் விட்டுவிடுவது சிறந்தது. இதன் மூலம் நிலத்தடி நீர் பெருகும். வறட்சிக் காலங்களிலும் இந்த நீர் உபயோகப்படும். ஏனெனில் அனைத்து நீரையும் நம்மால் சேமித்து வைத்துவிட முடியாது.

இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் கடந்த 115 ஆண்டுகளில் இந்திய பருவ மழையின் பொழிவுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதன் வழியாக வறட்சி உருவாகும் வாய்ப்பு 10 முதல் 26 சதவீதம் உள்ளதாக கணிக்கப்படுகிறது. மத்திய மற்றும் தீபகற்ப இந்திய பகுதிகளில் வறட்சி ஏற்பட அதிக சாத்தியமுள்ளது. இந்திய அளவில், இயல்பான மழை அளவை விட பத்து சதவீதம் குறைவாக இப்போது பெய்து வருகிறது. கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், மேகாலயா ஆகிய பகுதிகளில் உருவாகும் வறட்சிகள் கவலையை அளிக்கின்றன.

கேரளா, தமிழ்நாடு, சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் வறட்சி நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.இதில் தமிழ்நாட்டில், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் வறட்சிக்கான சாத்தியம் 15 - 20 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டின் ஆண்டு மழை அளவில் 48 சதவீதத்தை அளிக்கும் வடகிழக்குப் பருவமழையின் 100 வருட அளவுகளை (1910 - 2010) பார்க்கையில், மழையின் சராசரி அளவின் வேறுபாடு மிகக் குறைவாக - 27.3 சதவீதமாக உள்ளது. இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. தென் மாநிலங்களில் இந்த வேறுபாடு 30 முதல் 40 சதவீதமாக உள்ளது.
1961 முதல் 2010 வரை பதிவான தென் மேற்குப் பருவ மழை அளவின்படி, ஆண்டுக்கு சராசரியாக 88 செமீ மழை பெய்கிறது.

தென் மேற்குப் பருவ மழையும் வட கிழக்குப் பருவ மழையும் மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால், தமிழ்நாட்டுக்கு மொத்தம் நான்கு மழைப் பருவங்கள் உள்ளன. தென்மேற்குப் பருவமழை ஜூனிலிருந்து செப்டம்பர் வரையும், வடகிழக்குப்பருவமழை அக்டோபரிலிருந்து டிசம்பர் வரையும், குளிர் கால மழை ஜனவரி - பிப்ரவரி மாதங்களிலும், மார்ச் முதல் மே வரை கோடை மழையும் பெய்யும்.  தமிழகத்தின் மொத்த மழை அளவில் தென் மேற்குப் பருவமழையால் 32 சதவீதமும், வடகிழக்குப் பருவமழையால் 45 சதவீதமும், குளிர் கால மழையால் 5 சதவீதமும், கோடை மழையால் 15 சதவீதமும் கிடைக்கின்றன.

தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம்பாகம்தான், வடகிழக்குப் பருவமழை. இது அக்டோபர் இரண்டாம் வாரம் தொடங்கி டிசம்பர் மூன்றாம் வாரம் வரை நீடிக்கும். தமிழக கடற்பகுதியில் 60 சதவீதமும், உட்பகுதியில் 40 முதல் 50 சதவீதமும் மழை பெய்யும். இந்தக் காலகட்டத்தில்  காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் உருவானால்தான் நல்ல மழை கிடைக்கும்.தமிழகத்தில் கோடை மழை குறைந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் குறைந்து வருவதே காரணம். காடுகளில் மரங்கள் குறைந்ததால் இலைவழி நீராவிப்போக்கு சரிந்து, மழைக்கான சூழலை உருவாக்க முடியவில்லை என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

பெய்ய வேண்டிய மழையில் 25 சதவீதத்திற்கு மேல் குறைந்தால் அது வறட்சி என்று அழைக்கப்படுகிறது. மழைக் காலங்களில், பெய்யும் மொத்த மழையில் 81 சதவீதம் கடலில் பெய்கிறது. 19 சதவீதம் மட்டுமே நிலத்தில் பெய்கிறது. கடலில் பெய்யும் மழையை கொஞ்சம் நிலத்தின் பக்கம் திருப்புவதற்கு தாவரங்கள் தேவைப்படுகின்றன. ஆக, மனிதனின் வாழ்வியல் தேவைகளுக்காக காடுகளினால் உண்டாகும் மழை அவசியமாகிறது. அமேசான் காடுகளில் 2000 மில்லி மீட்டருக்கு மேல் பெய்யும் மழையில் 74 சதவீத மழை நீரை அமேசான் காடுகளே உருவாக்குகின்றன.

தமிழக நில அமைப்பில் நீர் ஊடுருவும் தன்மை கொண்ட மண் வாகு வெறும் 27 சதவீதம் மட்டுமே உள்ளது. நிலத்தின் அடியில் பலவிதப் பாறைகள் இருப்பதால் மீதமுள்ள 73 சதவீதத்தில் நீர் ஊடுருவும் தன்மை குறைவாக உள்ளது. இதனால் தமிழகத்தில் வறட்சிக்கு இலக்காகும் பரப்பு 64% ஆகியிருக்கிறது.

கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, ராமநாதபுரத்தின் ஒரு பகுதி ஆகியவற்றின் நிலப்பகுதியில் நீர் ஊடுருவும் தன்மை மிகவும் குறைவு. காஞ்சி புரம், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரத்தின் மற்றொரு பகுதி ஆகியவை ஓரளவு இலகுவான பாறை அடுக்குகள் கொண்டவை என்பதால் முந்தைய பகுதிகளை விட நீர் ஊடுருவும் திறன் சற்று கூடுதலாகும்.

நீர் ஊடுருவும் தன்மை கொண்ட 27 சதவீத நிலப்பகுதி அனைத்தும் ஆற்று வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் முப்பத்தி மூன்று ஆற்றுவழிநிலங்கள் உண்டு. இந்த 27 சதவீத பகுதிகளில் சேமிக்கப்படும் நீராதாரமே தமிழகத்தின் எதிர்காலத் தேவையின் நீர் வங்கியாக இருக்கும். ஆனால் அதிலிருந்து 60 சதவீத நீரை உறிஞ்சி எடுத்து
வருகிறோம்.

ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பு உள்ள காடு அதன் நிலத்தடியில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் கன மீட்டர் நீரை நிறுத்தி வைத்துக் கொள்ளும். இந்தியாவின் 40 சதவீத நீர் வளம், காடுகளிடமிருந்து கிடைக்கிறது. இத்தனைக்கும் இங்குள்ள காடுகளின் பரப்பு வெறும் 20 சதவீதம் மட்டுமே.

இதே அளவு நீர்வளத்தை அணைகளில் தேக்கிவைக்க ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டி வரும். காடு என்பது இயற்கை அணை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டில் பெய்யும் 97 செமீ மழையை 6 கோடி மக்களும் 10 சதவீத அளவிற்கு சேமித்தால் நாளொன்றுக்கு 139 லிட்டர் நீரை பயன்படுத்த முடியும். ஒரு தனி நபருக்கு உலக நலவாழ்வு நிறுவனம் பரிந்துரைக்கும் அளவான 135 லிட்டரை விட இது நான்கு லிட்டர் அதிகம்.

சென்னை என்பது மழை நீர் பற்றாக்குறை நகரம் அல்ல. இங்கு ஆண்டுக்கு ஆயிரத்து 260 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் 1,000 மில்லி மீட்டருக்குக் குறையாமல் மழை பெய்துள்ளது. நகருக்குள் மட்டும் சராசரியாக 17 டிஎம்சி மழை பெய்கிறது. மழை நீரை முறையாக சேமித்தால் குடிநீர் தட்டுப்பாடு இங்கு ஏற்படாது.
சென்னையைப் பொறுத்தவரை மழை அளவில் 16 சதவீதம் நிலத்தின் கீழ் சேமிப்பாக மாறவேண்டும்.

ஆனால், வெறும் 4 சதவீதம் மட்டுமே சேமிக்க முடிகிறது. அந்த அளவுக்கு தரை முழுவதும் கான்கிரீட் போடப்பட்டு மழைநீர் மண்ணுக்குள் இறங்காத விதத்தில் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். 500 சதுர அடி பரப்புள்ள 20 ஆயிரம் அடுக்குமாடி வீடுகளின் மாடிகளில் பெய்யும் மழை நீரை முழுவதும் கிணற்றிலோ குளத்திலோ சேமித்தால் அது மேட்டூர் அணையின் கொள்ளளவுக்கு சமமாகும் என்கிறார் வரதராஜன்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் ஆண்டு மழையளவு ஆயிரத்து 350 மில்லி மீட்டர். இதன்மூலம் இங்குள்ள 3500 ஏரிகளை தூர்வாரி 150 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்.அரசை எதிர்பார்க்காமல் மக்களே முன்முயற்சி எடுத்து நீர் சேமிப்பை செயல்படுத்தினால் நிச்சயமாக  சென்னை நகருக்கு தேவையான நீரை யாரிடமும் எதிர்பார்க்காமல் பயன்படுத்திக்கொள்ள முடியும். நீர்சேமிப்புடன் நீர்  மேலாண்மையில் இறங்கினால் தமிழ்நாடு தண்ணீர் வளமிக்க மாநிலமாக மாறும்.

(தொடரும்)

- பா.ஸ்ரீகுமார்