கள்ளபார்ட் னா திருடனாகவும் இருக்கலாம் ... திருடன் வேஷம் போடுகிறவனாகவும் இருக்கலாம்!



ஆக்‌ஷன் ஸ்டைலிஸ்ட் அரவிந்த் சுவாமி, டான்சர் ரெஜினா என கலகல கலர்ஃபுல்லாக ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருந்தது ‘கள்ளபார்ட்’. ‘‘நான்கு வருடக் காத்திருப்பு... இதோ சந்தோஷமா சென்சாருக்கு அனுப்பியாச்சு...’’ மனம் நிறைவாக சொல்கிறார் இயக்குநர் ராஜபாண்டி.

பெயருக்கும் கதைக்கும் என்ன தொடர்பு?

அந்தக் கால மேடை நாடகங்கள்ல ‘ராஜபார்ட்’, ‘ஸ்திரீபார்ட்’, ‘கள்ளபார்ட்’னு மெயின் கேரக்டர்களை சொல்வாங்களே... அதிலே இருந்து எடுத்ததுதான் இந்த ‘கள்ளபார்ட்’. எனது முந்தைய படங்களான ‘என்னமோ நடக்குது’ ஒரு பேங்க் திருட்டு, ‘அச்சமின்றி’ கல்விக் கொள்ளை... இந்த சாயல் இல்லாத வேற ஒரு வித்யாசமான கதை சொல்ல முயற்சி செய்திருக்கேன்.  

அரவிந்த்சுவாமி ஹீரோவா? வில்லனா?

பொதுவாகவே ‘கள்ளபார்ட்’ கேரக்டரை ரெண்டு விதமா பார்க்கலாம். திருடனாகவும் இருக்கலாம், திருடன் வேஷம் போடுகிறவனாகவும் இருக்கலாம். அப்படியான சிக்கலான கேரக்டர் மற்றும் அதைச் சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர்தான் கதை. அரவிந்த்சுவாமிக்கு இதிலே ஹார்டுவேர் இன்ஜினியர் கேரக்டர். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

வாரா வாரம் ஒரு படம்னு ரெஜினா பிஸி ஹீரோயின் ஆகிட்டாங்க..?

நாங்க படம் ஆரம்பிச்சது 2018ல. அப்ப ரெஜினா ஹீரோவுக்கு ஜோடியா டூயட், ரொமான்ஸ்னு இருந்தாங்க. இன்னைக்கு ரெஜினா பண்ணாத கேரக்டரே இல்லைங்கற அளவுக்கு விதவிதமா கதைகள், கேரக்டர்கள்ல நடிக்கறாங்க. ஆனா, எத்தனை கேரக்டர்கள் செய்தாலும் ‘கள்ளபார்ட்’ பாத்திரம் ரெஜினாவுக்கே உரிய கேரக்டர். படத்திலே அவங்க ஜும்பா டான்ஸர் கம் மாஸ்டர். இந்தக் கேரக்டருக்கு சரியா பொருந்தினாங்க.

அரவிந்த்சுவாமி - ரெஜினா காம்போ பத்தி சொல்லுங்க..?

பாஸ், படத்திலே ரெண்டு பேரும் ஜோடி இல்ல! ஆனா, படமே அவங்க ரெண்டு பேர்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் மாஸ் காட்டியிருக்காங்க. முக்கிய கேரக்டர்ல ஹரீஷ் பேரடி நடிச்சிருக்கார். பேபி மோனிகாவுக்கு ஒரு தனித்துவமான கேரக்டர். இந்தப் படத்திலே மொத்தமாகவே மிகச் சில கேரக்டர்ஸ்தான்.

அரவிந்த் சுவாமி போன்ற அனுபவசாலி நடிகரை இயக்கியதில் என்னென்ன சவால்கள் இருந்தன?

முதல் ரெண்டு நாட்கள்தான் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ஆனா, அவர் எங்ககிட்ட மிங்கிள் ஆகிட்டார். ஒரு பெரிய நடிகர், அனுபவசாலி இப்படி எங்கேயும் அவர் நடந்துக்கலை. அவரே நட்பு ரீதியா சில ஐடியாக்கள் சொல்வாரு, ஆனாலும் கதைக்குள்ள தலையிட்டதே இல்லை.

ஏன் படம் வர இவ்வளவு காலதாமதம்?

விரக்தியின் உச்சத்துக்கு போயி திரும்பி வந்திருக்கேன். காரணம், வெறுமனே 10 நாட்கள் ஷூட்டிங்கிற்காக படம் காத்திருக்கு. அந்த பத்து நாட்கள் ஷூட்டிங்கில்தான் பாட்டு, ஆக்‌ஷன்னு நிறைய விஷயங்கள் இருக்கு. என்ன ஆகும், படம் முழுமையாகுமா... ஆகாதா... அடுத்த படத்தை ஆரம்பிக்கலாமா வேண்டாமா... இப்படி அத்தனை கேள்விகளை புரட்டிப் போட்டுடுச்சு. அடுத்த கதை ஆரம்பிச்சாலும் எங்கே போனாலும் இந்தப் படம் பத்தின கேள்வி வரும்.

எல்லாம் ஓகே ஆகி பட ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்னு நினைச்சா அரவிந்த்சுவாமி கெட்டப் சேஞ்ஜ் ஆகி ‘தலைவி’ படத்திலே பிஸி. ரெஜினாவுக்கும் கால்ஷீட் பிஸி. மறுபடியும் எல்லாம் கூடி வரும் போது கொரோனா... ரெண்டு வருடங்கள். இப்ப படம் முழுமையானதே எனக்கு பெரிய சந்தோஷம். ஓர் இயக்குநரா என் நிலமையே இப்படின்னா பணம் போட்ட தயாரிப்பாளர் நிலைய யோசிச்சுப் பாருங்க. எனவே தியேட்டரா... ஓடிடி யா...னு இன்னமும் முடிவாகல. தயாரிப்பு தரப்புதான் அதை முடிவு செய்யணும்.

நிவாஸ் கே.பிரசன்னா மியூசிக். ‘தெகிடி’ படத்தின் இசை எனக்கு ரொம்ப பிடிச்சது. இந்தக் கதைக்கு அவர் சரியாக பொருந்தினார். என் நண்பர் இளையராஜா எஸ் எடிட்டிங். படத்தைப் பொறுத்தவரை நான் ஷூட்டிங் முடிச்சிட்டேன், சென்சாருக்கும் கொடுத்தாச்சு. ரிலீசுக்கான பேட்ச் வேலைகள்ல இருக்கேன். அடுத்த படத்துக்கான கதைகளும் எழுத ஆரம்பிச்சிட்டேன்.
படம் மட்டுமில்ல... ரெண்டு வெப் சீரீஸ்களுக்கான கதைகள் கூட எழுதியாச்சு. கூடிய சீக்கிரம் அந்த வேலைகளும் ஆரம்பிச்சுடுவோம். ஒரு படத்திற்கான கதை ஓகே ஆகி, அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.

இந்தக் காத்திருப்பு பொறுமை... அபரிமிதமான பொறுமையைக் கத்துக்கொடுத்திருக்கு. சில நல்ல விஷயங்கள் நடக்கணும்னா சில நேரத்திலே காத்திருப்புகள் நடக்கத்தான் செய்யும். அதை எப்படி சந்திக்கணும்ங்கறத கத்துக்கொடுத்திருக்கு.

ஷாலினி நியூட்டன்