பெல்பாட்டம்



திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘பெல்பாட்டம்’. கடந்த வாரம் ‘அமேசான் ப்ரைமி’லும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. எழுபது, எண்பதுகளில் படத்தின் கதை நிகழ்கிறது. அடிக்கடி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் தீவிரவாத கும்பலால் கடத்தப்படுகின்றன. இந்தியா பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதிகளை விடுதலை செய்து, லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் மட்டுமே விமானத்தையும், பயணிகளையும் விடுவிக்கிறது அந்தக் கும்பல்.  

இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராகிறார். அவரது ஆட்சியின்போது தில்லியிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று கடத்தப்படுகிறது. அதிலிருந்த 200க்கும் மேலான பயணிகள் பிணைக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர். இந்தச் சம்பவம் இந்திராகாந்தியை அதீத உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. விமானக்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உயர்மட்டத்தில் இருப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பெல்பாட்டம் எனும் குறிப்பு பெயரில் இருக்கும் இரகசிய உளவாளி ஒருவனால் பிணைக்கைதிகளை மீட்க முடியும் என்று இந்திராகாந்திக்கு ஆலோசனை வழங்குகிறார் ஒருவர்.

கடத்தப்பட்ட விமானத்தையும், பயணிகளையும் பெல்பாட்டம் எப்படி மீட்கிறார் என்பதே கிளைமேக்ஸ்.உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. பெல் பாட்டமாக அதகளம் செய்திருக்கிறார் அக்‌ஷய் குமார். படத்தின் இயக்குநர் ரஞ்சித் திவாரி.