சிவகுமார் என்கிற பெயருக்கும் சிவகுமார் பொண்டாட்டி ... என்கிற பாடலுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியதா..?



இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என படத்துக்கு படம் புது அவதாரம் எடுக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ‘சிவகுமாரின் சபதம்’ படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ‘‘நினைச்ச மாதிரி தியேட்டர் ரிலீஸ்...’’ மன நிறைவாக பேசத் துவங்கினார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. 
அடுத்து என்ன அவதாரம்?நம்ம கையில் எதுவுமே இல்ல. எதையும் யோசிக்காம நானும் ஜீவாவும் வாழ்க்கைய ஆரம்பிச்சோம். வாழ்க்கை என்னென்ன வாய்ப்புகள் கொடுக்குதோ அந்த பாதையிலேயே நானும் ஜீவாவும் போய்க்கிட்டு இருக்கோம். அடுத்து என்ன அவதாரம் என்பது என் கையில் இல்ல. காலம் என்ன சொல்லுதோ... என்ன வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குதோ அதைச் செய்ய தயாரா இருக்கேன்.

இப்பவரைக்கும் என்னென்ன சவால்கள், கேள்விகள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு?

ஒரு கேள்வியும் இல்ல. ஆல்பம், பாடல் மேக்கிங்ல இயக்குநரா ஒரு குழுவை எப்படி வழிநடத்தணும்னு ஏற்கனவே கத்துக்கிட்டு இருந்ததுனால ஒரு ஐந்து நிமிட பாடலுக்கு எந்த அளவுக்கு மெனக்கெடுறோமோ அதையே கொஞ்சம் அதிகமா கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு கலைஞனா என்னால மக்களை சந்தோஷப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே இருக்கு. அதை இப்பவரைக்கும் பூர்த்தி செய்துட்டு இருக்கேன்னு நம்புறேன்.

ஒரு கலைஞனா சினிமா துறைக்குள் நுழையும் போது என்ன கனவுகளோடு வந்தீங்க... இளம் கலைஞரா எதை மாத்த நினைச்சீங்க?

கலைக்கும், கலைஞனுக்கும் தவறு, சரினு எதுவும் கிடையாது. ஒவ்வொரு கற்பனைக்கும் அவன்தான் பொறுப்பு. சரி, தவறு என்கிற கோட்பாட்டுக்குள்ள கலையை கொண்டு வந்தா அது கலையே கிடையாது.

என்னைப் பொறுத்தவரைக்கும் என் கற்பனை எனக்கு சரி... அப்படித்தான் ஒவ்வொரு கலைஞனுக்கும். எதையும் மாத்தணும், எதையும் சரி செய்யணும்ங்கற எண்ணம் எல்லாம் கிடையாது. சரி செய்கிற அளவுக்கு நானும் இன்னும் வளரல, சரி செய்கிற அளவுக்கு இங்கேயும் பிரச்னைகள் இல்ல.

‘சிவகுமாரின் சபதம்’ எப்படி வந்திருக்கு... அது என்ன சபதம்..?

அது என்ன சபதம் என்பதுதான் முழுப் படமும். இதுவரைக்கும் வெளியான டிரைலர், பாடல்கள் எல்லாமே ஜாலி மோடில் இருக்கும். ஆனா, டிரைலரில் இல்லாத ஒரு சென்டிமென்ட், நெசவாளர்கள் வாழ்க்கை, காஞ்சிபுரம்... இப்படி நிறைய விஷயங்களை படத்தில் பார்க்கலாம். ஒரு மிடில்கிளாஸ் பையனுக்கும் அவனுடைய தாத்தாவுக்குமான உணர்வுப் போராட்டம்தான் கதை. ஒரு காதல் நிமித்தமும் அவன் வாழ்க்கையில எடுக்கிற சபதமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் படம். அந்தக் காதலுக்காக அவன் மொத்த குடும்பமும் என்ன செய்யுது... சிவகுமார் என்ன செய்கிறான்... என்பதே க்ளைமாக்ஸ்.  

பெரும்பாலும் உங்கள் படங்களில் இளைஞர்களுக்கு ஏதேனும் ஒரு மெசேஜ் இருக்கும்... இந்தப்படத்தில் என்ன மெசேஜ்?

காஞ்சிபுரம்... அங்குள்ள நெசவாளர்கள்... பின்புலத்தில் இருக்கிற கடினமான வாழ்க்கைப் போராட்டம்... இப்படி உணர்வுகள் சூழ இந்தப் படம் இருக்கும். அதிகம் கருத்து சொல்லாம அட்வைஸ் எதுவும் கொடுக்காம ஜாலியா எப்படி சொல்லணுமோ அப்படிச் சொல்ல முயற்சி செய்திருக்கேன்.

‘சிவகுமார்’ என்கிற பெயருக்கும் ‘சிவகுமார் பொண்டாட்டி’ என்கிற பாடலுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியதா சொல்றாங்களே..?

உண்மையாவே அப்படி எதுவுமே நடக்கல. நிறைய செய்திகள் நானும் படிச்சேன். ஆனா, அந்த மாதிரி சர்ச்சைகள் எதுவும் இல்ல. என்னுடைய பெயர் படத்தில் சிவகுமார்...  என்னுடைய காதலியை முதல் சந்திப்பிலேயே மனைவியா பார்க்கறேன். அதனால் ‘சிவகுமாரின் பொண்டாட்டி...’ பாடல். அவ்வளவுதான்.

உங்க படத்தின் ஹீரோயின்கள் மட்டும் ரொம்ப தனித்துவமாய் இருக்காங்களே..?

தேடல்தான். குறிப்பா எனக்கு தமிழ் தெரிஞ்ச பெண்கள் தேவை அப்படின்னு நினைச்சு தேர்வு செய்தேன். அதனுடைய விளைவுதான் ஆத்மிகா துவங்கி இப்ப மாதுரி வரை. எல்லாரும் நல்லா தமிழ் பேசுவாங்க. ‘சிவகுமாரின் சபதம்’ மாதுரி, பாண்டிச்சேரி பொண்ணு. பார்க்கிறதுக்கு வட இந்திய பொண்ணு மாதிரி தெரிஞ்சாலும் அவங்க தமிழ்ப் பொண்ணு.
இந்தப் படத்தில் மொத்தம் 13 புதுமுகங்களை அறிமுகப்படுத்தறோம். ‘மீசைய முறுக்கு’ படத்திலாவது விவேக் சார், யூ டியூப் பிரபலங்கள்னு தெரிஞ்ச சில முகங்கள் இருந்தாங்க. ஆனா, இந்தப் படத்தில் அத்தனை பேரும் புதுசு. திறமை... திறமையை மட்டுமே நம்பி களமிறங்கறோம். உங்க ஆதரவு எங்களுக்கு தேவை.

அது என்ன மண்டை மேலே கர்லிங் ஹேர்?

படத்தில் என்னுடைய பெயர் பட்டர்ஃபிளை மண்டையன். அந்த மண்டை காரணமும் படத்திலேயே இருக்கும். பெரும்பாலும் காஞ்சிபுரம், அதைச் சுற்றி இருக்கிற பசங்க ஹேர் ஸ்டைல் இப்படி இருப்பதைப் பார்த்தேன். அதனால் இந்த சுருள்முடி. பெரிய பந்தாவான வாழ்க்கையோ நாலு மாடி கட்டடமோ, காரோ எல்லாம் அந்தப் பசங்க எதிர்பார்க்க மாட்டாங்க. சாதாரணமா தினம் தினம் வாழ் க்கை, அவங்களுக்குன்னு ஒரு தொழில் அல்லது ஒரு வேலை இருக்கும். அதன் போக்கில் வாழ்வாங்க. அந்தக் கேரக்டர் டிசைன்தான் சிவகுமார்.

இரண்டு வருடம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒவ்வொருவர் வாழ்க்கையையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கு. அத்தனையையும் மறந்துட்டு ரிலாக்ஸா, குடும்பமா, நண்பர்களா இந்தப் படத்தை என்ஜாய் செய்யலாம்.

படம் எடுக்கும்போது தியேட்டர்தான்னு முடிவு செய்துட்டீங்களா?

ஓடிடியை நான் குறை சொல்லல .அது சூழலுக்கான ஒரு டெக்னாலஜி. ஆனா, எப்பவுமே தியேட்டர்தான் ஸ்பெஷல். என்னைக் கேட்டால் ஓட்டி ஓட்டி பார்க்கிறது ஓடிடி... ஓர் இடத்தில் உட்கார்ந்து பார்க்கிறது தியேட்டர். இதத்தான் சொன்னேன். தயாரிப்பாளர் சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன் சாரும் என்னுடைய வேண்டுகோளுக்கு ஓகே சொல்லிட்டார்.

அடுத்தடுத்த படங்கள்..?

அடுத்து ‘அன்பறிவு’, தெலுங்கில் ‘ஏஜென்ட்’ என்கிற படத்துக்கு இசை. தொடர்ந்து ‘ஆலம்பனா’ படமும் தயாராகிட்டு இருக்கு.

ஷாலினி நியூட்டன்