மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்!



எல்லா விளையாட்டுகளுக்குமே உடற்பயிற்சியும் உடல் கட்டுக்கோப்பும் அவசியம். ஆனால், பாடி பில்டிங்கிற்கு அதுவே தாரக மந்திரம். இந்தியாவைப் பொறுத்தவரை பாடி பில்டிங்கில் மகாராஷ்டிரா, பஞ்சாப்பிற்கு அடுத்தபடியாகவே தமிழ்நாடு இருந்தது. இச்சூழலில் சமீபத்திய செயல்பாடுகள் தமிழகத்தை முதல் இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆம். கடந்த சில வருடங்களாக நடந்த உலகளவிலான ஆணழகன் போட்டிகளில் நம்மவர்கள் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர். இவர்கள் குடும்பப் பின்னணியில் அத்தனை வறுமை இருந்தாலும், மனம் தளராமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு உஸ்பெக்கிஸ்தானில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பாக 70 பேர் பங்கேற்கிறார்கள் என்றால், அதில் 13 பேர் தமிழர்கள். இதில் மற்றொரு கூடுதல் சிறப்பு இந்த டீமிற்கு கோச் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு.“ஆணழகன் போட்டி என்பது ஒரு விளையாட்டு. இதை வைத்துதான் எனக்கெல்லாம் ரயில்வே துறையில் வேலை கிடைத்தது...” என்கிற அரசு, தமிழ்நாட்டிலிருந்து பங்கு பெறுபவர்களைப் பட்டியலிட்டார்.

“தமிழ்நாட்டில் இருந்து 21 வயதுக்குக் கீழ் உள்ள சுரேஷ், விக்னேஷ் ஜூனியர் பிரிவில் பங்கேற்கிறார்கள். 50 வயதுக்கு மேல் உள்ள மாஸ்டர் கேட்டகரியில் ஜெயராமன், ராஜேந்திரனும்;  மாஸ்டர் ஒன் கேட்டகரியில் சுப்பிரமணியன், மணிகண்டனும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் தவிர பாடிபில்டிங்கில் எட்டு பேர்...” என்கிற அரசு, தமிழ் நாட்டு அரசுக்கு இந்த விளையாட்டு சார்பாக சில கோரிக்கைகளை முன் வைக்கிறார்.

“இந்த விளையாட்டு மூலமாக ஒன்றிய அரசின் வேலைகள் கிடைக்கிறது. ஆனால், மாநில அரசில் உள்ள 3% இட ஒதுக்கீட்டில் கிடைப்பதில்லை. இங்கு விளையாட்டு ஒலிம்பிக் கேம், நான்-ஒலிம்பிக் கேம் என்று இரு பிரிவாக இருக்கிறது. எங்கள் விளையாட்டு நான்-ஒலிம்பிக்கில் வருவதால் இங்கு முன்னுரிமை தருவதில்லை.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நான்- ஒலிம்பிக் பிரிவினருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறோம்.

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள போட்டியாளர்களுக்கு பயணத்திற்கான உதவியும் அரசு செய்தால், பெரும் மன உளைச்சல் இல்லாமல் பங்கேற்க முடியும். ஏனெனில் சொந்தக்காசிலும், யாரிடமாவது ஸ்பான்சர் பெற்றும்தான் செல்ல வேண்டி இருக்கிறது. இது கொஞ்சம் காஸ்ட்லி கேம். உணவிற்காக நிறைய செலவழிக்க வேண்டும். உணவுப்பழக்க வழக்கங்கள் இதில் முக்கியமானது. இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் இருப்பதால், மற்ற விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆணழகன் போட்டியினருக்கும் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறோம்...” என்கிற அரசை, தொடர்ந்தார் மாஸ்டர் கேட்டகரியில் பங்கேற்கும் ராஜேந்திரன்.  

“பத்து வயதில் சிலம்பம் கத்துக்க போகும்போது, அங்கு சில உடற்பயிற்சிகள் எல்லாம் கொடுப்பாங்க. அதோடு அங்கு வருபவர்களைப் பார்க்கும் போது ஓர் ஆர்வம். அந்த நேரத்தில் அர்னால்டு படங்களைப் பார்த்தும் இன்ஸ்பையர் ஆனேன்.17 வயதில் ஜிம் தொடங்கினேன். 1983லிருந்து 1993 வரை தொடர்ந்து மெடல் பண்ணிட்டு இருந்தேன். 93ல் மெடல் மாறுனதும் 95ல் நிறுத்திட்டேன். மீண்டும் 2012ல் ஆரம்பித்து இதுவரை மெடலில் இருக்கிறோம். மாஸ்டர் மற்றும் 80 கிலோவுக்கு மேல் உள்ள  கேட்டகரி இரண்டுமே பண்ணுவேன்.  

நல்லா பண்ணணும். விடா முயற்சியாக செய்தால் வெற்றி உண்டு. அதுதான் இந்த வயதிலும் என்னை செயல்படுத்த வைக்கிறது. அரசு சாருக்கு முதல் போட்டியில் ஆயில் தடவி பண்ண வைத்தது நான்தான். அதே போல் அர்ஜுனா விருது பாஸ்கர் என் மாணவர். என்னை மறக்காமல் இருந்து இன்றைக்கு என்னை இந்த அளவு கொண்டு வந்திருக்கிறார் பாஸ்கர். எனக்கு குருவாகியும் இருக்கிறார். இது ரொம்ப பெருமையாக இருக்கிறது...” என்கிறார் ராஜேந்திரன்.

சுடர்க்கொடி