வரதட்சணை வாங்கினால் டிகிரி ரத்து!



கேரளாவில் சமீபமாக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் வரதட்சணைக் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எனவே வரதட்சணைக் கொடுமையைத் தடுக்கும் நோக்கில் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘பல்கலைக்கழகங்களில், மாணவர்களைச் சேர்க்கும் போதும், அவர்களுக்கு பட்டம் அளிக்கும்போதும், ‘வரதட்சணை வாங்க மாட்டேன்; வரதட்சணை கொடுக்க மாட்டேன்’ என உறுதிமொழிப் பத்திரத்தில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்கவேண்டும்’ என அறிவுறுத்தியிருந்தார்.

இதன் அடிப்படையில் கேரள மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கோழிக்கோடு பல்கலைக்கழகம், “வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும்...” என அறிவித்துள்ளது.

கோழிக்கோடு பல்கலைக்கழகம், சேர்க்கை படிவம் மற்றும் பட்டம் வழங்கும் படிவத்தில், ‘திருமணத்திற்கு வரதட்சணை வழங்கவோ அல்லது வாங்கவோ ​மாட்டோம்’ என்ற அறிவிப்பில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்கி உள்ளது.

“வரதட்சணை வாங்க மாட்டேன்...” என உறுதிமொழிப் படிவத்தில் மாணவர்கள் கையெழுத்திட்ட பின்னரே மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் பட்டம் வழங்கப்படும். பிற்காலத்தில் வரதட்சணை வழங்கினால் அல்லது வாங்கினால் அந்த மாணவ, மாணவியரின் பட்டம் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 391 கல்லூரிகளில் இந்த வரதட்சணை உறுதிமொழி ஏற்பு பின்பற்றப்பட இருக்கிறது.

முன்னதாக, கேரளாவின் மீன்வளம் மற்றும் கடல் சார் பல்கலைக்கழகத்தில் 386 மாணவர்கள் இதுபோன்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதுபோன்ற சூழல் தமிழ் நாட்டிலும் சாத்தியமாகுமா... வரதட்சணை குறித்தான சட்டங்கள் இருந்தும் அது நடைமுறையில் பின்பற்றப்படாதது ஏன்... போன்ற கேள்விகளோடு சமூக செயற்பாட்டாளர் செல்வியை சந்தித்தோம்.

‘‘கேரளாவில் கொண்டு வந்திருக்கும் இந்த மாற்றம் வரவேற்கத் தகுந்த ஒன்று. தமிழ்நாட்டிலும் வரதட்சணையினால் மரணங்கள் நிகழாமல் இல்லை.

திருமண விவாகரத்து காரணமாகவோ, கணவனைப் பிரிந்தோ தாய் வீட்டுக்கு பெண்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுக்க முடியாத சிலர், அதன் காரணமாக கொடுமைகளை அனுபவித்து கணவனோடு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். கேரளாவில் கொண்டு வந்திருக்கும் மாற்றம் போல் இங்கும் கொண்டுவர வேண்டும். அதே வேளையில் அதைவிட கூடுதலாக பாடத் திட்டங்களிலும் மாற்றம் வேண்டும். இது அடிப்படையானது. திருமணம் செய்யக் கூடிய பெண்ணிட மிருந்து பணமோ, பொருட்களோ வாங்குவது இழிவான செயல்; மணம் ஒன்றுபட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டும்; பெண்களை பண்டமாற்றுப் பொருளாகக் கருதாமல் அவர்களும் ஒரு சக உயிர் என மதிப்பதையும் பாடத் திட்டங்களில் கொண்டு வந்தால்தான் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

‘வரதட்சணை கொடுக்க மாட்டோம்’ என்கிற இயக்கம் கேரளாவில் இருக்கிறது. அதை விட ‘வரதட்சணை வாங்க மாட்டோம்’ என்பதுதான் பெரிதாக வரவேண்டும். கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறவர்கள் பெண்களாகவும், வாங்குகிறவர்கள் ஆண்களாகவும் இருக்கும் போது பெரிதாக வெற்றியை ஈட்டித் தராது. வரதட்சணை வாங்க மாட்டோம் என்கிற உறுதி மொழியினை படித்த ஆண்கள் முன்னெடுப்பதுதான் இந்த நேரத்தில் சிறப்புடையதாக இருகும்...” என்கிற செல்வி, வரதட்சணை என்கிற சொல்லாடலும் மாற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.
‘‘வரதட்சணை என்பதற்கு பதில் புதிய சொல்லாடலை உருவாக்க வேண்டும்.

அது குற்ற உணர்வைத் தருவதாக இருக்கணும். வரனுக்கு தட்சணை கொடுப்பதே வரதட்சணையாக மாறியுள்ளது. இது மாறவேண்டும். எப்படி கற்பழிப்பு என்பது, பாலியல் வன்புணர்வு, பாலியல் அடக்குமுறை, பாலியல் வன்முறை என வேறு வேறு வார்த்தைகளாக மாறியுள்ளதோ, அதே போல் வரதட்சணைக்கும் வேறு சொல்லாடல் வேண்டும். அது ஒரு இழிசொல்லாக இருக்கணும்...” என்றவரிடம், வரதட்சணை தடுப்பிற்காக சட்டங்கள் இருந்தும் ஏன் அதை தடுக்க முடிவதில்லை என்று கேட்டோம்.    

‘‘இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. அரசு செயல்பாடு ஒரு சில நேரங்களில் வானொலி அறிவிப்பாகவும், தொலைக்காட்சிகளில் வந்து போகும் மூன்று நொடி விளம்பரமாகவும் தான் இருக்கிறது. கிராமப் புறங்களிலிருந்து எல்லா இடங்களிலும் நிறைய சுய உதவிக் குழுக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக ‘இது சமூக நீதிக்கு எதிராக இருக்கிறது, வரதட்சணை என்பது கிரிமினல் குற்றம்’ என்பதை பெண்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இன்னொரு அடிப்படையான பிரச்னை காவல் துறையும், நீதித் துறையும் வரதட்சணை குறித்தான பார்வையையும், கண்ணோட்டத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பல வழக்குகள் சம்பந்தமாக என் அனுபவத்தில் பார்த்த விஷயங்கள், ‘பெண் என்றால் புகுந்த வீட்டுக்கு அடிபணிந்துதான் போகணும்; ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் சொல்வதற்கு பெண் பிள்ளையைப் பெற்ற குடும்பம் பணிந்து போகணும்; அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கணும்; ஆண் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்; வரதட்சணை கொடுப்பதெல்லாம் சாதாரண விஷயம்...’ என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு போட்டாலும் இதை ஒரு சமூகக் குற்றமாக நீதிபதிகள் பார்ப்பதில்லை.  

படித்த கூட்டம் நேரடியாக வரதட்சணை கேட்பதில்லை. தேடிப் போய் திருமணம் செய்கிற குடும்பமாக இருந்தாலும் சரி, படித்த மேல்தட்டு காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்கிற ஒரு சூழல் வந்தாலும் சரி, அங்கு ‘உங்களால் என்ன முடிகிறதோ அதை செய்யுங்க, நீங்கள் செய்வதெல்லாம் உங்க பொண்ணுக்குத்தானே’ என்கிற நவீன சொல்லாடல்கள் மூலமாக மிக மோசமாக ஒரு கும்பல் கிளம்பி இருக்காங்க. நாங்களாக ஏதும் கேட்கவில்லை, பெண் வீட்டில் கொடுக்கிறார்கள் என்பதுதான் இவர்களது வாதம்.     

இன்னொன்று, பெண் வீட்டாருக்கும், பணம் கொடுத்தாவது நல்ல இடத்தில் சேர்க்கணும் என்கிற மனப்பாங்கும் இருக்கிறது. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் சமூகத்தில் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் வரதட்சணை என்பதாக இல்லாமல் சீர் என்கிற பெயரிலும் இது அரங்கேறி வருகிறது.   இதெல்லாம் இல்லாமல் நம் பிள்ளையை படிக்க வைக்கணும்; படித்தால் வேலை பார்த்து தன் சம்பாத்தியத்தில் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து தனக்கான வரனை அதன் மூலமாக தேடிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை பெண் குடும்பத்தில் உருவாக்க வேண்டும். படிக்க வைப்பதே வரன் பார்ப்பதற்கான கூடுதல் தகுதி என்பதிலிருந்து மாறணும்.  

வரதட்சணை கொடுப்பதற்கு மாற்றாக பெண்களுக்கான சொத்துரிமையைக் கொடுக்க முன்வரலாம். இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களுக்கே இன்னும் வரவில்லை. அப்படி சட்டபூர்வமாகக் கேட்பவர்களும் சொற்பமே. 99% பெண்கள் தன் குடும்பத்தின் ஆண் வாரிசுகளுக்கு அந்த சொத்தை விட்டுக் கொடுக்க முன்வருகிறார்கள். பெண்களுக்குரிய சொத்துரிமையில் அரசோ அல்லது அந்த பெண் குடும்பத்தாரோ நிலையாக இருந்துவிட்டால் வரதட்சணை முற்றிலும் ஒழிய வாய்ப்பிருக்கிறது...’’ என்கிறார்
செல்வி.

புள்ளி ராஜா...

2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல்படி, இந்தியாவில் 8233 வரதட்சணை இறப்புகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர்.

குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத்துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15 சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை இறப்புகள், 1965 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றத்திற்கான தண்டனைகள் என்னென்ன?

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ன்படி -

1. வரதட்சணை கொடுப்பது, வாங்குவதற்கு - 5 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் அல்லது வரதட்சணை தொகை.

2. வரதட்சணை கோரினால் - 6 மாதங்கள் சிறை, ரூ.10,000 அபராதம்
இந்திய தண்டனைச் சட்டம்  : 304பியின் படி -
வரதட்சணைக் கொடுமையால் இறப்பு ஏற்பட்டால் - 7 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை.
இந்திய தண்டனைச் சட்டம்  : 498ஏயின் படி -
கணவன் அல்லது உறவினர்கள் கொடுமைப்படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம்.

அன்னம் அரசு