சிறுகதை - குழலினிது...



சாமிநாதனின் மனசெல்லாம் பூத்துக்கிடக்குது. ‘நாளை காலை நல்ல புது விடியல்! எதுவும் சொல்லாமே, பேத்தி லலிதாவையும் அழைத்துப் போகணும். அவதான் என் கண்ணைத் தொறந்தவ. ஆறேழு வருஷங்களுக்கு முன்... அன்றைக்குக் கோயிலில் நடந்ததும், அப்புறம் வீட்டில் அவ என்கிட்டே பேசினதும் அடடா!’
நினைவுகள் மொட்டுவிரியும் அடுக்குமல்லியாக...

விடிகாலையிலேயே எழுந்து குளித்து, மயிலிறகு நிற ஜரிகையில் பச்சைப் பாவாடை, அரக்கு நிற மேல்சட்டையுடன் இரட்டை ஜடை லலிதா உற்சாகமாகக் கிளம்பிவிட்டாள்.

‘‘கொழந்தே, இவ்ளோ சீக்கிரம் கிளம்பீட்டே? நடராஜரைத் தரிசிக்க அவ்வளவு ப்ரீதியா?’’ சிரித்தார் சாமிநாதன்.
‘‘ம்... கிளம்பலாமா தாத்தா?’’ தூண்டில் வீசினாள்.ஆலயம் வந்தனர். கிணற்றில் நீர் இறைத்துக் கை கால் கழுவி, அங்கவஸ்திரத்தை இடுப்பில்கட்டிக்கொண்டார்.‘‘கொழந்தே, முதல் அபிஷேக ஆராதனை சேவிச்ச பிறகு நீ அதோ எதிரே அந்த மண்டபத்தில் தூண் பக்கத்துல உட்கார்ந்துக்கோ. அங்கிருந்தும் தரிசிக்கலாம். நான் கிளம்பறச்சே அழைச்சிண்டு போறேன்...’’பேத்தியுடன் வந்திருப்பதால் அனுமதி கோருவதுபோல் கோயில் அதிகாரியிடம் லலிதாவை அறிமுகம் செய்தார்.

‘‘என்ன சாமிநாதன் பர்மிஷன்லாம்? நீங்க  சீனியர். உங்களுக்கில்லாத உரிமையா? கொழந்தை  இருக்கட்டும்!’’ பட்டுப்பாவாடை சரசரக்க பாட்டி கொடுத்தனுப்பிய தேங்காய், பழம், வீட்டுத் தோட்ட மலர்கள் கொண்ட அர்ச்சனைக் கூடையை இரு கரங்களிலும் பயபக்தியுடன் ஏந்தி நடந்தாள் லலிதா.தாண்டவ மூர்த்தியின் அருகே கருவறைக்குள் சென்றுவிட்டார் தாத்தா. நெஞ்சருகே தம் இருகரம் கூப்பி வணங்கி வழிபட்டார்.அர்ச்சனை, ஆராதனை முடிந்து சேவித்தபின் லலிதா மூன்று முறை பிராகாரம் வலம் வந்து  தரையில் விழுந்து வணங்கினாள். திரும்பி எதிர் மண்டபத்தின்  தூணருகே அமர்ந்தாள்.தாத்தா தொடர்ந்து அடுத்தடுத்த தீபாராதனை, அர்ச்சனை, அபிஷேகம் என்று மூழ்கினார்.

மக்களின் வழிபாடுகளை நிறைவேற்றுவதே முழுமுதற்பணி. அம்மையப்பனின் கருணைப் புன்சிரிப்பில், அருள் முருகனின் அழகில், அம்பாளின் கருணை உருவில், நடராசனின் தாண்டவத்தில் சொக்கி நிற்பதும், அவர்களுடன் மவுன மொழி பேசுவதுமே தாத்தாவின் நித்திய வேலை.  நடராசரைத் தரிசிக்க உயர்ந்த லலிதாவின் கண்களில் கர்ப்பக்கிரகத்தின் முன்னே கூப்பிய கரங்களுடன் வைகைவேந்தன்!கருந்தேகம்; பனைமரமென உயரம்; ஒல்லியான உடல்வாகு. கண் மூடித் தொழுது, இறைவனை உள்வாங்கிக் கொள்ளும் இறைபக்தனாய் இசையமைப்பாளர், பாடகர் வைகைவேந்தன்.

லலிதாவுக்குப் பேரானந்தம்! நம்ம ஊரில், நம்ம கோயிலில், தாத்தா எதிரிலேயே வைகைவேந்தன்! வானொலியில், டிவியில் இவரது பாடல்களை விரும்பி ரசிக்கிறவர் சாமிநாதன்.
தாத்தாவோ கர்ப்பக்கிரகத்தின் உள்ளே; வைகைவேந்தனோ வெளியே!‘நான் போய் தாத்தாகிட்டே சொல்லட்டுமா? வேணாம்! திட்டுவார்!’ பார்வைப் பயணத்தைத் தொடர்ந்தாள். அங்கங்கே சில அர்ச்சகர்கள் கூடிக் கூடி ரகசியமாகப் பேசினர். இவர்கள் வைகைவேந்தன் அருகில் செல்லவில்லை.

தரிசனம் முடித்துக்கொண்ட சாமிநாதனிடம் இரு கரம் நீட்டி பிரசாதத்தைப் பவ்யமாய்ப் பெற்றுக்கொண்டார் வைகைவேந்தன். சாமிநாதனின் பார்வை ஒரு நொடி, வைகைவேந்தன் மீது பட்டுத் திரும்பியது. சாமிநாதனிடம் எந்த  சலனமும் இல்லை.தரிசனம் முடித்த வைகைவேந்தனின் அருகில் வந்து மெல்லிய குரலில் சிலர் நலம் விசாரித்தனர். இளம் புன்னகையுடன் அதை ஏற்றபடி விறுவிறுவென்று மூன்று முறை பிராகாரத்தை சுற்றியவர், பின்னர் வெளிப் பிராகாரத்தின் தூணருகே அமர்ந்தார். தியான மனநிலையில் சில நொடிகள் கரைந்ததும் எழுந்து வெளியேறினார்.  
அமர்ந்திருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் லலிதா பார்த்தாள்.

சாமிநாதனிடம் அர்ச்சகர்கள் சிலர் வந்து பேசினர். தீபாராதனை முடித்துத் திரைச் சீலை இட்டார் சாமிநாதன்.சற்று நேரத்தில் நீரை மோட்டார் வைத்து இறைத்து, கர்ப்பக்கிரகத்தை ஒட்டிய பிராகாரம் முதல் வெளிப்பிராகாரம், மண்டபங்கள் வரை எல்லாவற்றையும் கழுவி சுத்தம் செய்தனர். வைகைவேந்தன் நின்ற இடம், நடந்த இடத்தில் எல்லாம் சற்று அதிகமாக நீரைக் கொட்டிக் கழுவினர். சில அர்ச்சகர்கள் உடன் நின்று, சுத்தம் செய்யும் பணியை மேற்பார்வையிட்டனர்.லலிதாவுக்கு மெல்ல மெல்லப் புரிபடத் தொடங்கியது.

சாமிநாதன் தன் பணியிலேயே கண்ணாக உச்சி கால பூஜைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார். குருக்களோடு வந்த கோயில் அதிகாரி, லலிதாவிடம் பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். வேண்டாம் என தலையாட்டினாள் லலிதா.‘‘சாமிப் பிரசாதம்! தாத்தா ஒண்ணும் சொல்லமாட்டார்... வாங்கிக்கோ!’’ லலிதா பெற்றுக்கொண்டு சர்க்கரைப் பொங்கலை கொஞ்சமாக வாயில் போட்டுக் கொண்டாள். ‘‘கசக்குது...’’ அன்றிரவு திண்ணையில் வழக்கம்போல் கால்களை நீட்டியபடி ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்தார் சாமிநாதன். ‘அடுத்து  வைகைவேந்தனின் இசையமைப்பில் வருகிறது பாடல்...’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஒலித்தது ‘மான் விழியே! தேனமுதே!’

மெய்மறந்து தொடையில் தாளமிடத் தொடங்கினார் சாமிநாதன்.உள்ளிருந்து வேகமாக வந்த லலிதா, வானொலியின் விசையைத் திருகி நிறுத்தினாள். திகைத்தார் சாமிநாதன் . ‘‘ஏன் கொழந்தே ரேடியோவை நிறுத்தறே?’’‘‘தாத்தா... இப்போ நீங்க தாளம் போட்டு ரசிக்கிறேளே வைகைவேந்தன் பாட்டை... அந்த மனுஷன் இன்னிக்கு வந்துட்டுப்போனவுடனே, அங்கே கோயிலைக் கழுவு கழுவுன்னு கழுவிவிட்டீங்களே... இது எந்த தர்மத்திலே சேர்த்தி? இப்போ நீங்க அவர் பாட்டைக் கேட்டு முடிச்சவுடனே இந்த ட்ரான்சிஸ்டரையும் கழுவீடுவேளா?’’

முதுகுத்தண்டில் சாட்டையடிபட்ட எரிச்சல். ‘‘நீங்களும், கவுரிப் பாட்டியுந்தானே கண்ணப்பருக்கு மட்டுந்தான் நாயனார் பட்டம்னு நேக்குச் சொல்லித் தந்தீங்க? நீங்க சொன்ன நந்தனார் கதையெல்லாமும் காத்தோட போறதுக்குத்தானோ?’’‘‘கொழந்தே...’’‘‘உஷ்..! தாத்தா, நீங்க தனிப்பட்ட முறையிலே இப்பிடியெல்லாம் வித்தியாசம் பார்க்கிறவர் இல்லே. நீங்க பூஜிக்கிற அந்த தெய்வம் மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசம் பார்க்கிறதா? ஆனா, உங்க கூட இருக்கிறவா அங்கே செஞ்சதை நீங்க தடுத்திருக்கணுமில்லியோ? இனிமே வைகை வேந்தன் பாட்டைக் கேட்கிற தகுதி நோக்கு இல்லே தாத்தா!’’சாமிநாதன் நடப்புலகுக்குத் திரும்பினார்.

‘பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டத்தில் பணிநியமனம் செய்யப்பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் முத்து, நாளை கோயிலில் அர்ச்சகராக அரங்கேறுகிறார். மூத்த அர்ச்சகரான நான் அந்நிகழ்வை வழிநடத்தப் பணிக்கப்பெற்றுள்ளேன். இந்த  நிதர்சன நிகழ்வை, பேத்தி லலிதா மனங் குளிரக் காணப்போகிறாள்...   

- அகிலன்கண்ணன்