நாடகத்தில் நடித்ததால் சிறைபட்ட நடிகர்!
பி.யூ.சின்னப்பாவின் மகனை கதாநாயகனாக மாற்றியவர்...எஸ்.பி.ஜனநாதனின் ‘புறம்போக்கு’ படத்துக்கும் இவருக்கும் தொடர்பு உண்டு...
நாடக உலகில் கோலோச்சி விட்டு திரைத்துறைக்கு வந்து புகழ் ஈட்டிய பலர் இருக்கிறார்கள். நாடகம் என்பது இயல் தமிழ் மட்டு மல்ல, இசைத்தமிழோடு சேர்ந்தது. நடிப்பு, பாட்டு என தங்களது கானாமிர்த குரலால் ரசிகர்களின் நெஞ்சில் பலர் நிலைத்து நின்றனர். அப்படி ஒருவர்தான் இசை நாடகத் திலகம் இரா.வெ.உடையப்பத்தேவர். திரைப்படங்களில் அவர் பெயர் ஆர்.வி.உடையப்பா தேவர்.
சிவகங்கை மாவட்டம், வேலாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அவர் பத்து வயதிலேயே நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார். டி.எஸ்.பாலையா வுடன் சேர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். பின்பு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியின் நாடகக்குழுவில் இணைந்து தனது நடிப்பு பயணத்தைத் தொடர்ந்தார். அவரின் மூலம் அறிஞர் அண்ணாவின் நட்பைப் பெற்று அவரது குழுவிலும் உடையப்பா நடித்துள்ளார். தமிழின் மீதும், நாடகத்தின் மீதும், தான் கொண்ட காதலால் தனது மகள்களுக்கு கண்ணகி, மணிமேகலை என்று பெயர்களை ச் சூட்டினார்.
கம்பீரத் தோற்றம் கொண்ட உடையப்பா தேவர், சிவன் வேடத்தில் மேடையேறினால் அவர் கழுத்தைச்சுற்றிக் கிடக்கும் பாம்பைப் பார்த்து பயந்து பார்வதி வேடம் ஏற்பவர்கள் விலகி நின்று நடிப்பார்கள். மதுரையில் ‘தேவர் நாடக மன்றம்’ துவங்கி அதன் மூலம் ‘பவளக்கொடி’, ‘சத்தியவான் சாவித்திரி’, ‘அரிச்சந்திரா’ உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை நடத்தினார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், சாண்டோ சின்னப்பா தேவர், சோ ஆகியோர் தலைமையில் நாடகங்களை நடத்தி பாராட்டைப் பெற்றார்.
கலைமாமணி விருது பெற்ற உடையப்பா தேவரை இசை நாடகப் பேரொளி என முன்னாள் அமைச்சர் கா.காளிமுத்து புகழ்ந்தார். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நாடகங்கள் மூலம் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் உடையப்பா.
சுட்டுப் பொசுக்கினாலும் - தோழர்களைத் தூக்கினிலேற்றினாலும், விட்டுப் பிரியாது செங்கொடி வீரம் குறையாது...என்று ‘தூக்குமேடை பாலு’ நாடகத்தில் உடையப்பா தேவர் பாடிய பாடல் கேட்போரின் ரத்தத்தைச் சூடாக்கியது. ‘தூக்கு மேடை பாலு’ என்றவுடன் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் உங்களுக்கு நினைவிற்கு வரும். நடிகர் ஆர்யா ஏற்ற கேரக்டரின் பெயர் பாலு. அவர் தூக்கிலேற்றப்படுவதைப் போல படத்தில் காட்சி யமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், உண்மையில் மதுரையில் அப்படியொரு சம்பவம் 1951ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி நடந்தது. அப்படிக் கொல்லப்பட்டவர் ரவுடியோ, கொலைகாரனோ அல்ல. காவல்துறையைச் சேர்ந்தவர். மதுரை மாவட்டம், கருகப்பிள்ளை கிராமத்தில் பிறந்த அவர் பெயர் பாலு. காவல்துறையில் பணியாற்றியவர். சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் எதிரொலித்த காலமது.விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாலு, உழைக்கும் மக்களுக்கு எதிராக அரசு, காவல்துறையைப் பயன்படுத்துவதைக் கண்டு தனது வேலையை உதறி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, அதன் தலைவர்கள் தலைமறைவானார்கள். அப்போது அவர்களைக் காட்டிக் கொடுக்கச் சொல்லி போலீசாரின் கடும் இன்னலுக்கு உள்ளானார். இதனால் மதுரையில் துப்பறியும் இலாகா காவலரான செண்பகம் கொலை வழக்கில் பாலு உள்பட 6 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். பாலுவிற்கு தூக்குத்தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் பாலு தூக்கிலிடப்பட்டார். அவர் உடலைப் பெற சிறைவாசலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் தோழர்கள் திரண்டிருந்தனர். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போகவும் ஆயத்தமானார்கள்.
ஆனால், அவரது பிணத்தை சிறைக்குள் புதைத்து விட்டதாக கதைத்த காவல்துறை, அருப்புக்கோட்டை ரோட்டில் மெய் வழிச்சாலையை அடுத்துள்ள தரிசுக்காட்டில் பெட்ரோலை ஊற்றி பாலுவின் உடலை எரித்து விட்டது.தூக்குமேடை பாலுவின் வீர வரலாறு, உடையப்பா தேவரால் நாடகமாக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. பாலு மிகச்சிறந்த பாடகர் என்பதால், அவர் பாடிய பாடல்கள் நாடகத்தில் உடையப்பா தேவரால் பாடப்பட்டன. அதைக் கேட்க பல்லாயிரக்கணக்கான கூட்டம் கூடியது. பாலுவாக அவர் தூக்கிலேற்றப்படும் காட்சியைப் பார்த்தவர்கள் கதறித் துடித்தனர்.1978ம் ஆண்டு உடையப்பா தேவர் நடித்த நாடகத்திற்கு அரசு தடை விதித்தது. அதை மீறி நாடகம் நடத்தியதற்காக இரண்டு முறை அவர் கைது செய்யப்பட்டார். ‘அரிச்சந்திரா’ நாடகத்தில்
அவர் பாடிய - ஆதியிலும் பறையனல்ல சாதியிலும் பறையனல்ல நீதியிலும் பறையனல்லவே நானே பாதியில் பறையனானே...
பாடலுக்குத்தான் இந்த எதிர்ப்பு. ஆனால், ‘அரிச்சந்திரா’ படத்தில் இதே பாடலை சிவாஜி கணேசன் பாடி நடித்திருப்பார். உடையப்பா தேவரின் நாடகத்திற்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில், அரிச்சந்திரா நாடகம், சாதி பேதத்தைக் கடந்தது; எனவே, அந்த நாடகத்தை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மூலம் திரையுலகில் பயணப்பட்ட உடையப்பா தேவர், 1966ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘மணிமகுடம்’ படத்தில் தளபதியாக நடித்தார். 1972ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘குறத்தி மகன்’ படத்தில் சிஐடி அதிகாரியாக நடித்திருப்பார். அப்படத்தில் அவர் பேசிய வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
‘‘சட்டப்படி புதைக்கப்பட வேண்டியது பிணம். அதே சட்டப்படி நடமாட வேண்டியது பணம். ஆனால், பணத்தைப் பிணமாக்கி பூமிக்குள்ள புதைச்சி வைச்சதாலே எண்ணிடலங்கா ஏழை மக்கள் நடைப்பிணமாக நலிஞ்சு கிடக்கிறாங்க...’’ என அவர் வசனம் பேசும் ஸ்டைலே அழகாக இருக்கும். ஆனால், 1975ம் ஆண்டு மதுரை திருமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘தாய் வீட்டு சீதனம்’ படத்தில் ‘அறிமுகம் ராஜபார்ட் மதுரை ஆர்.வி.உடையப்பா’ என வெண்திரையில் காட்டப்பட்டது. இந்தப் படத்தில் சிவச்சந்திரனின் தந்தையாக உடையப்பா தேவர் நடித்தார்.
1976ம் ஆண்டு கவிஞர் வாலி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ஆர்.விட்டல் இயக்கிய ‘முத்தான முத்தல்லவோ’ படத்தில் கடா மீசை சின்னப் பண்ணையாக நடித்த உடையப்பா தேவர், 1979ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ‘தசாவதாரம்’ படத்தில் சிவனாக நடித்தார். எந்த பாத்திரமாக இருந்தாலும் அவரால் ஜொலிக்க முடிந்தது. 1975ம் ஆண்டு கே.விஜயன் இயக்கிய ‘புதுவெள்ளம்’, 1977ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘பாலாபிஷேகம்’, 1978ம் ஆண்டு பட்டாபிராமன் இயக்கிய ‘கண்ணாமூச்சி’, 1983ம் ஆண்டு கே.சங்கர் இயக்கிய ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’, 1985ம் ஆண்டு வெளியான ‘நவக்கிரக நாயகி’ உள்ளிட்ட படங்களில் பண்பட்ட நடிப்பை உடையப்பா தேவர் வெளிப் படுத்தியிருப்பார்.
1981ம் ஆண்டு பி.யூ.சின்னப்பாவின் மகன் ராஜா பகதூரை கதாநாயகனாக்கி ‘அனிச்சமலர்’ என்ற படத்தை உடையப்பா தேவர் தயாரித்தார். அத்துடன் அப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் ‘அரிச்சந்திரா மயான காண்டம்’ நாடகத்தையும் சாதுரியமாக இணைத்திருந்தார். அதில் -
போகின்றேன் போகின்றேன்... மயானக்காவல் புரிந்திடவே பாவி நான் போகின்றேன் விதிவலியோடு மதிவலியோடு...
எனத் துவங்கும் சோகப்பாடலை உடையப்பா தேவர், கணீர் குரலில் பாடுவார். அவரின் ஆகிருதியான உருவமும், ஓங்கி ஒலிக்கும் குரலும் நாடக மேடையில் மட்டுமின்றி திரைப்படத்திலும் அவருக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.1988ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி உடையப்பா தேவர் காலமானார். அவர் ஏற்கனவே நடித்த ‘முருகனே துணை’ படம் 1990ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் -
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே...
என்ற பாடலை சங்கீத சுத்தமாக உடையப்பா தேவர் பாடியிருப்பார். கண்களை மூடிக்கொண்டு கேட்டால் டி.ஆர்.மகாலிங்கம் பாடுவது போல இருக்கும். அரை நூற்றாண்டு காலம் நாடகம், சினிமாவில் சிம்மம் என கர்ஜித்த உடையப்பா தேவரை இன்றைய திரைப்பட, நாடக உலகம் நினைவில் வைத்திருக்கிறதா?
ப.கவிதா குமார்
|