கொரோனா...அலைகள் ஓய்வதில்லை!



அலைகள் இல்லாத உலகத்தில் இனி நாம் வாழவே முடியாது என்று தோன்றுகிறது. ஆதி மனிதனுக்குத் தெரிந்தது கடல் அலைகள் மட்டும்தான். இன்று காந்த அலைகள், மின் அலைகள், ஒலி அலைகள், ஒளி அலைகள், ஃபோட்டான் அலைகள், புவியீர்ப்பு அலைகள் என்று நீண்டு பெருந்தொற்று அலைகளில் வந்து நின்று கொண்டிருக்கிறோம்.  விஷயங்களை, அவற்றின் தொடர்ச்சியை, அவற்றுக்கு இடையிலான உறவை, உறவின்மையை நம் மனித மூளை அலைகளாகப் புரிந்து கொள்கிறது என்கிறார்கள் நவீன உளவியல் மற்றும் தத்துவவியலாளர்கள்.

எது எப்படியோ, இந்த கொரோனா முதல், இரண்டாம் அலை, மூன்றாம் அலை என வரிசையாக முடிவற்று நீண்டு கொண்டே இருக்கிறது என்பது மட்டும் நிஜம். அதாவது, முதலில் ஒரு மரபணு மாறிய நுண்ணுயிர் உருவாகி ஒவ்வொருவராகத் தொற்றி பெருந்தொற்றாக மாறும்போது முதல் அலை உருவாகிறது. பிறகு நமது நோய் எதிர்ப்பு சக்தி, அக்கிருமியியின் வீரியம் இழப்பு, நம்முடைய லாக் டவுன்கள் போன்றவற்றால் அக்கிருமி வலுவிழக்கும்போது முதல் அலை முடிவடைகிறது. மீண்டும் அந்தக் கிருமி இன்னொரு வேரியன்டாக மரபணு முடுக்கம் பெற்று பலருக்கும் பரவும்போது அடுத்த அலை உருவாகிறது.

உலகில் உள்ள எல்லோருக்கும் தடுப்பூசி போட்டுத் தன்னிறைவு அடையும் வரை இப்படி சுனாமியில் ஸ்விம்மிங்கைப் போடுவது போல் ஓர் அலையிலிருந்து இன்னொரு அலைக்கு
பயணித்துக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது.வரலாற்றிலிருந்து நாம் இந்த அலைகள் தொடர்பாக ஏதும் கற்றுக்கொள்ள முடியுமா என்பது ஒரு கேள்வி.
ஆனால், இதற்கு தெளிவான பதில்கள் அறிஞர்களிடமே இல்லை. ஏனெனில் நமக்கு சீரான முறைமைகளில் நம்பிக்கை இல்லை. அதாவது ஒருமுறை ஒரு பேட்டர்னில் நிகழ்ந்தால் மறுமுறையும் அதே பேட்டர்னில்தான் நிகழும் என்பதை உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

உதாரணமாக நியூசிலாந்து, உலகிலேயே கொரோனா அலைகளற்ற நாடாக இருக்கிறது. ஆனால், வெள்ளையர்கள் அதிகம் உள்ள அமெரிக்காவோ கொரோனாவில் சிக்கி அல்லோலகல்லோலப்படுகிறது. இந்தியாவில் ஏறுவதும் இறங்குவதுமாக போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. எனவே, ஒரே சீரான முறைமை என்பது பெருந்தொற்றுகளுக்கு இருக்காது என்பது சில விஞ்ஞானிகளின் வாதம். அதனை மறுப்பதற்கில்லைதான்.

இதற்கு முன்பு உலகம் முழுமையும் சூறையாடிய பெருந்தொற்று என எடுத்துக்கொண்டால் அது 1918ல் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூதான். உலகம் முழுதும் ஒரு கோடிப் பேருக்கு மேல் இதனால் பலியானார்கள். 1918 ம் ஆண்டு மார்ச் முதல் 1919ம் ஆண்டின் கோடை காலம் வரை மூன்று அலைகள் பிரவாகித்தன.

இதில் அமெரிக்கா 1918ன் இறுதி யில் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த அலைகளின் வரைபடத்தை நோக்கினால் ஒரு சிறிய அலை, பிறகு ஒரு பெரிய அலை, மீண்டும் சிறிய அலை என்பதாக இருக்கிறது.ஆனால், இந்த மூன்று அலைகளுமே கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குள் நடந்து முடிந்தது என்பதை கவனிக்க வேண்டும்.

இப்போதைய கோவிட் இந்த காலக்கெடுவை எளிதாகக் கடந்துவிட்டது. முதல் அலையே ஒரு வருடம் நீடித்தது. அப்படியானால் என்ன காரணம்? அப்போது லாக்டவுன்கள் மிகச் சிறிய எல்லைக்குள் நிகழ்ந்தன. அப்போது தடுப்பூசி என்றால் என்னவென்றே தெரியாது. சொல்லப்போனால் இது வைரஸால் வரும் ஒரு நோய் என்பதையே அறியாத நிலை.

இப்போது அப்படி இல்லை. நம்மால் தடுப்பூசியால் பாதிப்புகளைத் தள்ளிப்போட முடிகிறது. லாக்டவுன்கள் பரவலுக்கான சாத்தியங்களை தள்ளிப்போடுகின்றன. இதனால்தான் இப்போது ஓர் அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையிலான கால இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. மற்றபடி வைரஸ் என்னவோ வெறித்தனமாகத்தான் செயல்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அலையின் மத்தியில் நாம் இருந்த போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளான டாம் ஜெபர்சன், கார்ல் ஹெனகான் ஆகியோர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். இதில், 1889 முதல் உலகைத் தாக்கிய பத்து பெருந்தொற்று அலைகளை ஆய்வு செய்தார்கள். அதில் எட்டு பெருந்தொற்றுகள் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களாலும் இராண்டு பெருந்தொற்றுகள் கோவிட்டின் இனமான சார்ஸாலும் நிகழ்ந்தவை.

1957 - 58 முதல் கடைசி ஐந்து பெருந்தொற்று வெடிப்புகள் வெறும் இரண்டு வருட கால இடைவெளியில் நடந்து முடிந்தவை. ஐந்து பெருந்தொற்று வெடிப்புகளுக்கு இரண்டாம் கட்டம் இருந்தது. 2009 -10ம் ஆண்டுகளில் இரண்டு சிறிய பெருந்தொற்றுப் பரவல் இருந்தது. 2002 - 03ம் ஆண்டில் ஒரே ஆண்டில் பல கட்ட தாக்குதல் நடைபெற்றது.
1957 - 58ம் ஆண்டில் இரண்டு மோசமான தாக்குதல் ஒரே அளவிலிருந்தன.

1889 - 92; 1918 - 20 ஆகிய காலக்கட்டங்களில் இரண்டு கட்டங்கள், பிற்பாடு இவை இரண்டுமே மிக மோசமானவை என மதிப்பிடப்படுகிறது என்கிறார்கள்.அவர்கள் இந்த ‘அலை’ என்ற சொல்லின் மீதான நம்முடைய கற்பிதம் எப்படிப்பட்டது என்பதை கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். குறைந்தபட்சம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் விஷயத்திலாவது நாம் இதனை கவனிக்க வேண்டும் என்கிறார்கள்.

‘இந்த அலைகளுக்கு இடையேயான முறைமை அல்லது பேட்டர்ன் என்பது ஒரே மாதிரியானவையாக எப்போதும் இருந்ததில்லை என்பதே நம் கடந்த கால அனுபவமாக இருக்கிறது. பருவ காலத்துக்கும் இந்தத் தொற்றுகளுக்கும் இடையேயான தொடர்பையும் நாம் கவனிக்க வேண்டும்.

முந்தைய காலங்களில் இப்படி பருவ காலங்களோடு தொடர்புடையவையாக இந்த இன்ஃப்ளூயன்ஸாக்கள் இருந்தன. ஆனால், கொரோனாவை இப்படி வகைப்படுத்துவது சிரமம். அதே சமயம் அது பருவ காலத்தோடு தொடர்புடையது அல்ல என்பதையும் நாம் முற்றிலுமாகச் சொல்லிவிட முடியாது...’ என்கிறார்கள்.

நம் கேரளத்தையே எடுத்துக்கொள்வோம். அங்கு உள்ள தட்பவெப்பமும் வானிலையும் மக்களுக்கு இன்ப்ளூயன்ஸாவுக்கு பழகியதாகவே இருக்க வேண்டும். அதற்கேற்ற மருத்துவ உட்கட்டுமானங்களும் அங்கு குறிப்பிடும்படி சிறப்பாகவே உள்ளது.

ஆனால், இன்ப்ளூயன்ஸா வகைமையைச் சேர்ந்த கொரோனா கேரளாவைச் சூறையாடி வருகிறது. இத்தனைக்கும் முதல் அலையில் அதனை சிறப்பாகக் கையாண்டவர்கள அவர்கள். எபோலா போன்றவற்றைக் கையாண்ட முந்தைய அனுபவங்களும் உள்ளன. ஆனால், கொரோனாவுக்கு அந்த மாநில அரசு திணறி வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

இந்த இடத்திலிருந்து பார்க்கும்போது அலை என்பதை நாம் ஏதோ ஏறுவதும் இறங்குவதுமான தொடர்ச்சியுடைய ஒரேவகையான பேட்டர்ன் கொண்ட செயல்பாடு என்று புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.

ஒவ்வொரு அலையும் அதனதற்கான முறைமையோடும் அதனதற்கான செயல்முறையோடும் இருக்கிறது என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏஎன்ஐ மற்றும் ஐசிஎம்ஆர் நிபுணர்கள் இரண்டாம் அலையில் ஓரளவு குறைவான பாதிப்பை எதிர்கொண்ட மாநிலங்களில் மூன்றாம் அலை அதிக தாக்கத்தை உருவாக்கக் கூடும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

நாம் இப்போது உள்ள சூழலில் எந்த விஞ்ஞானரீதியான அறிவிப்புகளையும் அலட்சியம் செய்ய இயலாது. எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டியதுதான். அரசு இயந்திரமாக இருந்தாலும் மக்களாக இருந்தாலும் இரு தரப்புமே உஷாராக இருக்க வேண்டிய காலமிது.

இளங்கோ கிருஷ்ணன்