கதை கேளு... கதை கேளு... ஆடியோவில் கதை கேளு..!



‘‘புத்தக வாசிப்பு என்பதே தனி சுகம்தான். ஆனா, இப்ப தினசரி பத்திரிகைகள் படிக்கக்கூட பலருக்கும் நேரம் கிடைக்கிறதில்ல. எப்பவும் வேலை வேலைனு ஓடிட்டே இருக்காங்க. இருந்தும் புத்தகங்கள் வாசிக்கணும்ங்கிற ஆர்வம் அவங்க எல்லோருக்கும் இருக்கு. அவங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ‘Storytel’ ஆப். இதன்மூலம் பல எழுத்தாளர்களின் நூல்களை ஒலி வடிவில் கேட்கலாம். கல்கியின் பொன்னி யின் செல்வனில் தொடங்கி தற்போதைய எழுத்தாளர்கள் வரை பலரின் புத்தகங்களை இந்தச் செயலியில் ஒலி வடிவத்தில் கொடுத்திருக்கோம்.

இதன் சிறப்பே நேரடியா வாசிக்கிற அனுபவத்தை கேட்பவர்களுக்கு உணர்வுபூர்வமா வழங்குறதுதான்’’ நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் தீபிகா அருண். ‘storytel’ செயலியின் தமிழுக்கான மொழி மேலாளர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள், சிறுகதைகள், சுயசரிதைகள், ஊக்கப்படுத்தும் நூல்கள் உள்ளிட்டவற்றை ஒலிப் புத்தகமாக இந்தச் செயலியில் கொண்டு வந்திருக்கிறார் தீபிகா அருண்.
 ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலுள்ள நங்கநல்லூர்ல. தஞ்சாவூர்ல பிஇ பயோ எஞ்சினியரிங் படிச்சேன். பிறகு, எல்லாரையும் போல ஐடியில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனா, எனக்கு அந்த வேலை பிடிக்கல. எனக்கான வேலை அது இல்லனு தோணினதால வெளியே வந்துட்டேன்.

அப்புறம், ஒரு பள்ளியில் ஆசிரியையா வேலைக்கு சேர்ந்தேன். அங்குள்ள அரசியல் மனசுக்குப் பிடிக்கல. அதனால, அங்கிருந்தும் வெளியேற வேண்டியதாகிடுச்சு. 2014ல் என் தம்பியும் நானும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆரம்பிச்சோம். வெற்றிகரமா போச்சு. அந்நேரம் குழந்தைகளுக்கான செயல்பாட்டு மையத்தை ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஏன்னா, குழந்தைகள் எப்ப பார்த்தாலும் செல்போன், டிவினு அடிமையாகிக் கிடக்காங்க. அவங்களை அதிலிருந்து மடைமாற்றி நம் பாரம்பரிய விளையாட்டுகளான தாயக்கட்டை, பல்லாங்குழி பக்கம் திருப்பணும்னு தோணுச்சு.

அவங்க வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை செயல்பாடுகள் மூலமாகவும், விளையாட்டுகள் வழியாகவும் சொல்லிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். இதனால, ‘ஜுலா’னு ஒரு மையத்தை நங்கநல்லூர்ல தொடங்கினேன்.இதுக்கிடையில்தான் எனக்கு ஒலிப் புத்தக கான்செப்ட் பத்தி தெரிய வந்துச்சு.

முதல்ல ஆங்கிலத்துலதான் ஒலிப் புத்தகங்களைக் கேட்க ஆரம்பிச்சேன். அப்புறம், இதே ஒலிப் புத்தகங்களை நம் தாய்மொழி தமிழில் கேட்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்னு தோணுச்சு. இணையத்துல தமிழ்ல ஒலிப் புத்தகங்கள் இருக்கானு தேடிப் பார்த்தேன். சிறந்த ஒலி குவாலிட்டியுடன் எனக்கு ஒலிப் புத்தகங்கள் கிடைக்கல. இதனால, நானே ஒரு யூ டியூப் சேனலைத் துவக்கினேன்...’’ என்கிறவர், சிரித்தபடியே தொடர்ந்தார்.

‘‘எனக்கு கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். அப்பா வரதராஜன் சிறுகதை எழுத்தாளர். அவரின் சிறுகதைகள் பல பத்திரிகைகள்ல வந்திருக்கு. அவர் ரொம்ப நல்லா கதை சொல்வார். சின்ன வயசுல எனக்கு நிறைய கதைகள் சொல்லியிருக்கார். எங்க வீட்டுக்கு எந்தக் குழந்தை வந்தாலும் அவர்கிட்ட உட்கார்ந்து கதை கேட்பாங்க.

அந்தளவுக்கு சுவாரஸ்யமா கதைகள் சொல்லக் கூடியவர். அவர்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தினார்.  அப்போதிலிருந்தே நிறைய வாசிப்பேன். இந்த குழந்தைகள் மையத்தை நான் ஆரம்பிச்சப்ப குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லத் தொடங்கினேன். நான் மையத்துக்கு வந்திட்டா போதும். குழந்தைங்க அவ்வளவு பிரியமா ஓடிவந்து என்னைக் கட்டிக்கிட்டு கதைகள் சொல்லச் சொல்லிக் கேட்பாங்க.

ஒருமுறை எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் எழுதின ‘பாற்கடல்’ சிறுகதையை குழந்தை களின் பெற்றோருக்கு சொன்னேன். எல்லோரும் கண்கலங்கினாங்க. அந்தத் தருணம்தான் நம்மாலும் கதை சொல்ல முடியும்னு நம்பிக்கை வந்துச்சு.   அதனால, ‘கதையோசை’ என்கிற ஒலிப் புத்தகத்திற்கான யூ டியூப் சேனலை ஆரம்பிச்சேன். அதாவது, ஒரு புத்தகத்தை ஒலி வடிவில் பேசி ‘கதையோசை’ யூ டியூப்பில் போட்டுடுவேன்.

இந்த சேனலுக்குப் போய் கதையின் ஒலியைக் கேட்கலாம். முழுவதும் இலவசம். முதல்ல என் அப்பாவின் சிறுகதையில் இருந்து தொடங்கினேன். பிறகு, கல்கி, லா.ச.ரா, புதுமைப்பித்தன் போன்ற நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளை ஒலி வடிவில் கொடுத்தேன். இதுல எனக்கு பாசிட்டிவ்வான பின்னூட்டங்கள் நிறைய வந்துச்சு. ‘தீபிகா' உங்க கதையைக் கேட்கும் போது ரொம்ப நல்லாயிருக்கு’னு நெகிழ்ந்தாங்க...’’ என்கிறவர், ஸ்டோரிடெல் செயலிக்குள் வந்த கதையைத் தொடர்ந்தார்.

‘‘இதன்பிறகு, நாட்டுடமை ஆக்கப்படாத புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டு வரணும்னு தோணுச்சு. ஆனா, எங்கிட்ட காப்புரிமை வாங்க பணம் இல்லை. எழுத்தாளர்கள்கிட்ட உரிமை பெற்று அவங்களுக்கு பணம் கொடுக்கணும். ஆனா, ஒரு தனிமனுஷியா என்னால் எதுவும் செய்ய முடியல. அப்பதான் storytel செயலி பத்தி தெரிய வந்துச்சு.
இந்நிறுவனம் ஸ்வீடனைச் சேர்ந்தது.

பல ஆண்டுகளா ஒலிப் புத்தகங்களை பல மொழிகள்ல பண்ணிட்டு இருக்காங்க. இந்தியாவில் மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகள்ல ஒலிப் புத்தகங்களை சிறப்பா பண்றாங்க. ஆனா, தமிழ்ல இல்ல. உடனே, இந்தச் செயலியின் இந்தியாவுக்கான மேலாளருக்கு மெயில் அனுப்பினேன். அவர், ‘தமிழ் தெரிஞ்ச ஆட்களைத் தேடிட்டு இருக்கோம். நீங்க ஏன் தமிழுக்கான கன்சல்டன்ட்டா சேரக்கூடாது’னு கேட்டார்.

சரினு தம்பியின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்துல இருந்து விலகி பகுதிநேரமா ஸ்டோரிடெல் பணியில் சேர்ந்தேன். எல்லா எழுத்தாளர்களிடமும் பேசி அவங்ககிட்ட இருந்து உரிமை பெற்று அவங்களுக்கான தொகையும் கொடுத்தேன். அப்புறம், அந்த புத்தகத்தை சரியான குரலில் பேசி அதை செயலியில் ஏற்றி, அதுக்கான மார்க்கெட்டிங்கும் செய்தேன்.


நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்கள் தவிர, இப்ப இருக்கிற எழுத்தாளர்கள் பலரின் புத்தகங்களை ஒலி வடிவத்திற்கு மாற்றி இந்தச் செயலிக்குக் கொண்டு வந்தேன். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்துல நிறைய பேர் இந்த செயலியில் கதைகள் கேட்டு ரொம்பப் பாராட்டினாங்க.  

இப்ப ஸ்டோரிடெல்ல தமிழ்ல மட்டும் ஆயிரம் புத்தகங்களை வந்திடுச்சு. கிட்டத்தட்ட அறுபது எழுத்தாளர்களின் கதைகளை ஒலிப் புத்தகமா கொண்டு வந்திருக்கோம். இன்னும் பல எழுத்தாளர்களிடம் பேசிட்டு இருக்கோம்...’’ என்கிற தீபிகா, அவரின் குரலில் மட்டும் முப்பது புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.

‘‘என் குரல் தவிர, சில ஆர்ஜேக்களும், நடிகர், நடிகைகளும் புத்தகங்களுக்குக் குரல் கொடுத்திருக்காங்க. உதாரணத்திற்கு, கல்கியின் ‘பொன்னியின் செல்வனை' ஒவ்வொரு அத்தியாயமா பேசினேன். அதில் வரக்கூடிய கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தும்படி பேசியிருக்கேன். இதுல நான் வாசிச்ச ஆடியோவை ஒருத்தர் எடிட் பண்ணுவார். பிறகு, இன்னொருவர் ஒரிஜினல் புத்தகத்தையையும், ஆடியோவையும் கையில் வைச்சுகிட்டு ஒவ்வொரு வார்த்தையையும் சரியா படிச்சிருக்கேனானு செக் பண்ணுவார்.

ஏதாவது வார்த்தை இல்லனா, அதை நான் மறுபடியும் படிச்சு ரிக்கார்ட் பண்ணணும். அப்புறம்தான் செயலிக்குப் போகும். வாசகர்கள் ஒரு மாசத்துக்கு 150 ரூபாய் பணம் செலுத்தினா போதும். இதில் எவ்வளவு புத்தகம்னாலும் கேட்கலாம். அப்புறம், வீட்டுல சமையல் பண்ணும்போதோ, வேலைக்கு பஸ் அல்லது ரயிலில் பயணிக்கும்போதோ தங்களுக்கான சிறுகதைகளைக் கேட்டுக்கிட்டே பயணிக்கலாம். எப்படி போன்ல பாட்டுகேட்குறோமோ அதுமாதிரிதான்.

இதனால, புத்தகம் வாசிக்க முடியலையே என்கிற கவலை இனி இருக்காது. இப்ப உலக அளவுல நிறைய கேட்போர்கள் வந்திட்டாங்க. தமிழ்ல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்காங்க. அதனால, இன்னும் சிறப்பா பண்ண திட்டமிட்டு வர்றோம்...’’ என்கிறவர், எதிர்காலத் திட்டம் பற்றிப் பேசினார். ‘‘அடுத்ததா, இதை ஆடியோ டிராமாவா எடுத்திட்டு போகணும்னு இருக்கோம். பல கலைஞர்களின் குரல்களில், பின்னணி இசையுடன் முழுமையான திரைப்படம் பார்த்த மாதிரி ஒலிப் புத்தகத்தை வாசகர்கள் கேட்கணும்னு நினைக்கிறோம்.

இப்ப ஒரே குரல்தான் எல்லா கதாபாத்திரங்களையும் மாடுலேஷனை மாற்றிப் பேசும். இனி அப்படி இல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான குரலும், இசையும் கலந்து தரலாம்னு இருக்கோம். அடுத்து, ஒலி வடிவத்திற்காகவே ஒரு சிறுகதை எழுதி அதை ஒலிப் புத்தகமா கொண்டு வரணும்னு திட்டம் வச்சிருக்கோம். இதை ஸ்டோரிடெல் ஒரிஜினல்ஸ்னு சொல்றோம். இதுக்கான பணிகளும் போயிட்டு இருக்கு...’’ மனநிறைவுடன் சொல்கிறார் தீபிகா அருண்.  

பேராச்சி கண்ணன்