சிறுகதை - அருணின் காதல்...



அந்த ரயில் நிலையம் ஆளரவமற்று இருந்தது. கடந்த ஐந்து நாட்களாக நிற்காத மழை வேறு. ஸ்டேஷன் மாஸ்டர் அருண் மகிழ்ச்சியும் எரிச்சலும் கலந்த மனநிலையில் இருந்தான். ரயில்வே தேர்வு எழுதி வேலை கிடைத்த போது கிடைத்த மகிழ்ச்சியை விட இப்போது சற்றே அதிகமாக இருப்பதாக எண்ணினான். அரசு வேலை! நல்ல சம்பளம்! அதோடு பென்ஷனும் உண்டு.
வாழ்க்கை சிக்கலில்லாமல் ஓடும் என அவன் மட்டுமல்ல  அவனது பெற்றோர்களே அப்படித்தான் நினைத்துக் குதூகலித்தார்கள்.
 
சென்னையின் ஒரு மூலையில் பிறந்து வளர்ந்து படித்தவன் அருண். போஸ்டிங் எங்கோ நெல்லை மாவட்டம்; தற்போது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் திக்குத் தெரியாத ஒரு ஊரில்.
போஸ்டிங் ஒரு பட்டிக்காட்டில் எனத் தெரிந்ததும் மனம் மிகவும் தயங்கியது. கிராமங்களை சினிமாக்களில் மட்டுமே பார்த்தவன் அவன். அதுவும் சென்னையிலிருந்து வந்தால் அவர்களுக்கு அடியும் உதையும்தான் என அவன் நண்பர்கள் பயமுறுத்தியது வேறு. பேசாமல் வேலையே வேண்டாம் எனச் சொல்லி விடலாமா என எண்ணியபோது அப்பா ‘‘வாயை மூடு... அரசு வேலையை வேண்டாம்னு சொல்ல உனக்கு என்ன பைத்தியமா?’’ என ஒரே போடாகப் போட்டு விட்டார்.

ஊருக்கு அப்பாவுடன் வந்து இறங்கியபோது அசந்தே போனான். இப்படியும் அழகான அமைதியான ஊர் இருக்க முடியுமா என வியந்தான் அருண்.அப்பாதான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிவிட்டார். ‘‘இன்னாடா இது? ஆளே இல்லாம கீது?’’ என்றார்.சென்னை ஒண்டுக்குடித்தனத்தில் பிறந்து வளர்ந்த அருணுக்கு அந்த இடம், பச்சை வயல்கள், பக்கத்தில் இருக்கும் கல்லூரி, ஓகோவெனக் கிடக்கும் பரந்த நிலப்பரப்பு என எல்லாமே மகிழ்ச்சி தருவதாக இருந்தது.‘‘அருணு! ஒரு மாசம் போல இருடா! பெரிய இடத்துல சொல்லி வேற ஊருக்குப் பூடு! முடிஞ்சா சென்னைக்கே மாத்திக்கோ! இன்னா?’’ என்று சொல்லி விட்டு அப்பா போய் விட்டார்.

கிராமத்தில் அனைவரும் அவனிடம் மிகவும் சகஜமாகப் பழகியதால், தான் தனித்து விடப்பட்டதாக உணரவில்லை அவன். சினிமாக்களில் கேட்ட நெல்லைத் தமிழுக்கும் நேரில் மக்கள் பேசும் தமிழுக்கும் மிகவும் வித்தியாசம் இருப்பதாகப் பட்டது. பல வார்த்தைகள் புரியவில்லை. ஸ்டேஷனைப் பார்த்ததும் உற்சாகம் பொங்கியது அவனுக்கு.ஊரிலிருந்து வெகு தொலைவில் இருந்தது மட்டும் அல்ல; சென்னையைப் போல நிமிடத்துக்கு நிமிடம் மின் வண்டிகள் செல்லவில்லை. ஒரு நாளைக்கு இரு ரயில்கள், சில சமயம் கூட்ஸ் வண்டி வரும் என அவனது டூட்டி சார்ட் சொல்லியது.

முதல் நாள் டூட்டியில் பச்சை விளக்கைக் காட்டும்போது மிகவும் பெருமையாக இருந்தது. ஒரு வீட்டில் பேசி தங்கவும் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டான். புளிக்குழம்பு வாசனை ஊரையே தூக்கியது. காய்கறிகள் வாசனையாகவும் சுவையாகவும் இருந்தன.காலை ஏழு மணிக்கு எழுந்து அந்த ஆச்சி கொடுக்கும் சூடான இஞ்சி டீயை ருசித்துக் குடித்து விட்டு மெதுவாக தூரத்தில் தெரியும் மலையை நோக்கி நடைப்பயிற்சி. வீடு வர எட்டரை மணி. குளித்து விட்டு சுவையான ஆவி பறக்கும் இட்லி, தோசை, ஆப்பம் அல்லது இடியாப்பம் சட்னியுடன் சாப்பிட்டுவிட்டு சைக்கிளில் ஸ்டேஷனுக்கு வருவான்.

சரியாக 11 மணிக்கு நெல்லை செல்லும் பாசஞ்சர் வண்டிக்கு பச்சை விளக்கைக் காட்டிவிட்டால் வேலை முடிந்தது. பிறகு லைனை சரிபார்ப்பது, மேலதிகாரிகளின் கேல்விகளுக்கு பதில் சொல்வது போன்ற இலகுவான வேலைகள்தான். பொதுவாகவே அருண் அதிகம் பேசும் சுபாவம் உடையவன் அல்ல என்பதால் அவனுக்கு இந்தத் தனிமையும் இயற்கையும் பிடித்துப் போனது.

முதல் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. அந்த ஊரோடும், மக்களோடும் மெதுவாக ஒன்ற ஆரம்பித்தான். எப்போதாவது அந்த வழியாகச் செல்பவர்கள் ஸ்டேஷனுக்கு வந்து அமர்ந்து அருணோடு பேசிவிட்டுப் போவார்கள். சில சமயம் நடந்து போய் டீக்கடையில் வடையும் டீயும் அருந்துவதும் உண்டு.

இந்த வாழ்க்கை அருணுக்கு மிகவும் பிடித்துப் போனது. தனியாக இருந்த நேரத்தில் கற்பனைகள் விரிந்தன. இந்த ஊரின் இயற்கை அழகு, சுத்தமான காற்று, தண்ணீர் இவைகளை விட்டு விட்டு எதற்காக மீண்டும் சென்னைக்குப் போகவேண்டும்? பேசாமல் கல்யாணம் செய்துகொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டால் என்ன? சென்னைப் பெண்ணால் இந்த ஊரில் குடும்பம் நடத்த முடியாது. ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் என்றால் அவளுக்கு இங்கேயே வாழத்தான் ஆசை இருக்கும். குழந்தைகள் பிறந்தால் கூட பள்ளி இருக்கிறது. கல்லூரி கூட இருக்கிறது. ஆஸ்பத்திரி இருக்கிறது. இதைவிட என்ன வேண்டும்? யோசித்தான்.

இந்த ஊர்ப் பெண்களில் யாராவது ஒருத்தியைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டால் என்ன என்ற கேள்வியில் வந்து நின்றது அவனது யோசனை. இந்தக் கேள்வி அவனது வயதுக்கும் மனதுக்கும் மிகவும் உகந்ததாக இருந்ததால் காதலி தேடுவதில் முனைந்தான். என்ன இருந்தாலும் எனக்கு அரசு வேலை.

அதற்கேற்ற பெண்ணாகப் பார்க்க வேண்டும். ஓரளவாவது படித்திருந்தால்தான் குழந்தைகளுக்குச் சொல்லித்தர முடியும். அதோடு சென்னைக்கு அம்மா வீட்டுக்குச் செல்லும் போது பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்... என ஒரு தலைமுறை யோசனையைச் செயல்படுத்த எண்ணினான்.

ஊரில் பெண்களே மிகவும் குறைவோ என்ற எண்ணம் வந்து விட்டது அவனுக்கு. ஒன்று இவனை விடப் பெரியவர்களாக இருந்தார்கள், இல்லையெனில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். சில பெண்கள் கண்ணில் பட்டார்கள். அவர்களுக்கு அருண் மேல் அபிப்பிராயம் வரவில்லை. கட்டாயப்படுத்தவும் அவனுக்குப் பிடிக்கவில்லை.அன்று காலையிலிருந்து மழை நிற்கவே இல்லை. மழைத்திரையின் ஊடே காட்சிகள் தெளிவாகத் தெரியவும் இல்லை. ஸ்டேஷன் ரூமில் லைட்டைப் போட்டு விட்டு அமர்ந்து கொண்ட போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தான் அருண்.

ஸ்டேஷன் பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தாள்.இன்றைய நாகரீகமான நீண்ட சுடிதார் அணிந்து, கையிலிருந்த செல்ஃபோனை நோண்டிக் கொண்டி ருந்தாள். மிகவும் அழகி. நிறம் கம்மிதான் என்றாலும் அவள் இருந்த இடமே பிரகாசமாக இருப்பதாகத் தோன்றியது அருணுக்கு.‘யார் இவள்? தனியாக வந்திருக்கிறாளே? ஒருவேளை திருநெல்வேலியிலிருந்து சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்து விட்டு திரும்பிப் போகிறாளோ என்னவோ? பார்த்தால் படித்த பெண் போல இருக்கிறாளே...’ என்று எண்ணினான் அருண். மறுநாளும் அந்தப் பெண் வந்தாள். என்னடா இது என நினைத்துக்கொண்டான். அதற்கும் மறுநாளும் வரவே சற்றே சந்தேகம் வந்தது அவனுக்கு.

‘‘எக்ஸ்க்யூஸ் மீ மேடம்...’’ என்றான்.அவள் தலையைத் தூக்கிப் பார்த்த அந்த நொடியில் உலகமே சுழல்வது போலத் தோன்றியது அருணுக்கு.‘‘என்ன?’’ என்றாள்.‘‘இல்ல... நீங்க... இங்க வந்து...’’ எனத் திக்கினான்.‘‘ஏன் நான் இங்க உக்காரக் கூடாதா?’’‘‘தாராளமா உக்காரலாம்.

ஆனா, நீங்க எந்த டிரெயின்லயும் ஏறுறா மாதிரியே தெரியலியே? அதான்...’’ என்றான் சுதாரித்துக்கொண்டு.‘‘ஓ! அதுவா! நான் அரசு வேலைக்கான தேர்வுக்குப் படிக்கறேன். எங்க வீட்டுல ஒரே கெஸ்ட். அதான் இங்க வந்தேன்...’’‘‘ஆனா, நான் உங்களை எங்க தெருவுல பார்த்ததே இல்லியே..?’’‘‘இல்ல! இல்ல! நான் பண்ணைத்தெரு...’’‘‘அவ்வளவு தூரத்துல இருந்தா இங்க வரீங்க? ஏன்..?’’

கேட்டவனை ஏற இறங்கப் பார்த்தாள். பிறகு என்ன தோன்றியதோ, அவனை அருகே அமரச் சொல்லி கை காட்டினாள்.‘‘சார்! உங்ககிட்ட உண்மையைச் சொல்லிடறேன். என் பேரு ரோஜா. நான் ஒரு அனாதை! சித்தப்பா வீட்டுல வேலைக்காரியா இருக்கேன். எனக்கு அரசு வேலை கெடச்சுட்டா நான் வீட்டு வேலை செய்ய மாட்டேன், என் சித்தி தம்பியைக் கட்டிக்க மாட்டேன்னு என்னைப் படிக்க விடாம செய்யுறாங்க.

அதான் யாருக்கும் தெரியாம இங்க வரேன். பரீட்சை முடிஞ்சதும் வரவே மாட்டேன் சார்...’’ என்றாள். அருணின் மனம் பாகாக உருகியது. பாவம் ஒரு பெண் சொந்தக்காரர்களோடு சண்டையிட்டுப் படிப்பது என்பது இலகுவான விசயமா? இவள்தான் நான் தேடிக்கொண்டிருக்கும் லட்சியப்பெண் என முடிவு செய்தான். அவளைத் தன் அறையிலேயே படிக்க வரும்படி அழைத்தான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள்.

அருணுக்கு அவள் மேல் அபரிமிதமான காதல் பிறந்து விட்டது.  நாள் தவறாமல் அவள் வருவதும் பேசுவதும் வழக்கம் ஆனது.  இன்னும் மூன்றே நாட்களில் அரசுத் தேர்வு. அது முடிந்து விட்டால் அந்தப் பெண் வரவே மாட்டாள். எப்படியாவது இன்றைக்கு அவளிடம் தன் மனதைச் சொல்லி விட வேண்டும் என முடிவு செய்து கொண்டு அழகாக உடையணிந்து கையில் ரோஜாப்பூவையும் எடுத்துக்கொண்டு சென்றான்.அன்று ஏனோ அவள் வரவேயில்லை. மனம் ஏமாற்றத்தில் தள்ளாடியது. என் காதலைச் சொல்ல நினைக்கும் அன்றுதானா அவள் வராமல் இருக்க வேண்டும்? ஒரு வேளை என் காதல் நிறைவேறாமலே போய் விடுமோ? எண்ணி எண்ணிக் கலங்கினான்.

அரை மணி நேரம் கழித்து இருவர் பெஞ்சில் வந்து அமர்ந்தனர். இருவருமே அருணுக்கு ஓரளவு பழக்கமானவர்கள்தான். மனதை திசை திருப்ப எண்ணி அவர்களோடு பேச்சுக் கொடுத்தான்.

‘‘என்ன தம்பி! வீட்டுல கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கறாங்களா?’’ என்றான் நெட்டையானவன்.‘‘எங்க ஊர்ப்பொண்ணுங்களைப் பார்த்துட்டா வேற எந்தப் பொண்ணும் பிடிக்காதே! ஏன்னா எங்க மண்ணு அப்படி...’’ என்றான் குட்டையானவன்.

ஊரின் அழகையும், மண்ணின் சிறப்பையும் சிலாகித்துப் பேசினர் மூவரும். பேசிப் பேசி மூவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.  தன் மனதில் உள்ளதைக் கொட்டியே விட்டான் அருண்.

‘‘அடடே! உங்களுக்கு எங்க ஊருப் பொண்ணு மேல காதல் வந்திருச்சா? சொல்லுங்க தம்பி நாங்களே பேசி முடிச்சு வெக்கறோம். எங்க ஊரு காதலுக்கு எதிரி இல்ல. சொல்லுங்க! யாரு பொண்ணு?’’ என்றான் நெட்டையானவன்.”வந்து... தினமும் இங்கதான் வந்து உக்காரும். கவர்மெண்டு பரீட்சைக்குப் படிக்குது. பேரு வந்து ரோஜா...’’ என்றான் மெல்ல.
இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்து விழித்தனர்.

‘‘ரோஜாவா? பண்ணைத் தெரு ரோஜாவா..?’’ என்றான் குட்டையானவன். அவன் குரல் ஏன் இப்படி ஆனது என அருணுக்குப் புரியவில்லை.‘‘ஆமா சார்! அவளேதான். உங்களுக்குத் தெரியுமா அவங்க குடும்பத்தை..?’’ என்றான் ஆர்வமாக.இரு நபர்களும் எழுந்தே விட்டனர்.‘‘தம்பி! என்னைக்கு நீங்க ரோஜாவைப் பார்த்தீங்க..?’’‘‘நேத்துகூடப் பார்த்தேன். ஏன் சார்..?’’ என்றான் அருண்.

அவனுக்கு இப்போது குழப்பம்.‘‘நீங்க சொல்ற ரோஜா செத்து நேத்தோட ஒரு வருசம் முடிஞ்சு போச்சு. கவர்மெண்டு வேலை கெடக்கலைன்னு இங்கதான் ரயில்ல பாஞ்சு செத்துப் போச்சு...’’ என்றான் குட்டையானவன்.கண்கள் இருள அப்படியே நின்றான் அருண். எதிர் பிளாட்ஃபாரத்தில் ரோஜா அவனையே பார்த்தபடி நிற்பது போலத் தோன்றியது.
                                        
- ஸ்ரீஜா வெங்கடேஷ்