ஒலிம்பிக் துளிகள்!



* கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டு இன்று (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.

* ஒலிம்பிக் போட்டிகள், அவை நடக்கும் நாடுகளின் பெயரில் அழைக்கப்படுவது கிடையாது. போட்டி நடைபெறும் நகரத்தின் பெயரில்தான் குறிப்பிடப்படும். இப்போது நடப்பது ஜப்பான் ஒலிம்பிக் அல்ல. இது டோக்கியோ ஒலிம்பிக்!

* கிரேக்க நாட்டின் ஒலிம்பியாவில் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் கிமு 776 முதல் கிபி 392 வரை வெற்றிகரமாக நடந்தன.‘‘விளையாட்டு, மதநம்பிக்கை அற்றவர்களின் கலாசாரம்...’’ என்று கூறி கிரேக்க அரசரான தியோடோசியஸ் கிபி 393ல் ஒலிம்பிக்கை தடை செய்தார்!

1503 ஆண்டுகளுக்குப் பின் பிரான்ஸ் நாட்டு பிரபுவான பியர் டி கூபர்டின், 1896ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்கு புத்துணர்வு அளித்தார். இவரது கடினமான முயற்சி காரணமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உருவாக்கப்பட்டு நவீன ஒலிம்பிக் பிறந்தது. முதல் நவீன ஒலிம்பிக் 1896ல் கிரேக்கத் தலை நகர் ஏதென்ஸில் நடந்தது. இப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.

* பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கவோ, போட்டிகளைக் காணவோ அனுமதிக்கப்படவில்லை. 1900ம் ஆண்டு முதல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். 2012 லண்டனில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில்தான், போட்டியில் பங்கேற்ற 204 நாடுகளும் பெண் விளையாட்டு வீரர்களை அனுப்பின.

* குளிர்கால ஒலிம்பிக் (Winter Olympic), மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் (Paralympics), இளைஞர் ஒலிம்பிக் (Youth Olympic)... என ஒலிம்பிக் போட்டிகள் இப்போது விரிவடைந்துள்ளன. 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடைகால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

* பியர் டி கூபர்டின் 1914ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தனியான கொடியை வடிவமைத்தார். இக்கொடி 1920 முதல் நடைமுறையில் உள்ளது.

* ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களும், மக்கள் வாழும் ஐந்து கண்டங்களை உணர்த்துகின்றன. மக்களிடையே நட்புணர்வை வெளிப்படுத்த வட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. வெள்ளைப் பின்னணியில் ஐந்து வளையங்களும் ஐந்து நிறங்கள் கொண்டவை. இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்கள் இருக்கும். இந்த ஆறு வண்ணங்களில் ஏதாவது ஒன்று உலகின் அனைத்து நாடுகளின் தேசியக்கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பது ஒலிம்பிக் வளையங்களின் சிறப்பு.

* ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அனைத்து வீரர்கள் சார்பாக ஒரு வீரர் மட்டும் உறுதிமொழி எடுப்பார். இதையும் கூபர்டின்தான் 1920 ஒலிம்பிக் போட்டியில் நடைமுறைக்கு கொண்டுவந்தார். முதன்முதலில் ஒலிம்பிக் உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீரர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கத்திச்சண்டை வீரரான விக்டர் போயின்.  ‘‘விளையாட்டு வீரர்களாகிய நாங்கள், நிஜமான விளையாட்டு உணர்வோடு, எங்கள் அணியின் சிறப்பையும், புகழையும் உயர்த்தும் வண்ணம், இந்த ஒலிம்பிக் போட்டிகளில் விதிகளை மதித்து அதன்படி நடப்போம் என்று அனைத்து போட்டியாளர்களின் சார்பாக நான் உறுதி கூறுகிறேன்...’’ என்பதே ஒலிம்பிக்கின் உறுதிமொழி.

* 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியிலிருந்துதான், ஒலிம்பிக் தீபத்தை இப்போதைய வடிவில் ஏற்றி வைக்கும் நடைமுறை துவங்கியது. பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் கிரேக்கத்தின் ஒலிம்பியா ஹெஸ்டியா ஆலயத்தின் பலிபீடத்தில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது முதல் முடியும் வரை ஒரு புனித நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இச்சுடர் சூரியனின் ஒளியிலிருந்து ஏற்றப்பட்டு, போட்டிகள் முடியும் நாள்வரை அணையாது பாதுகாக்கப்பட்டதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.தூய்மை, புனிதம், முழுமை உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களை ஒலிம்பிக் சுடர் சித்தரிக்கிறது. பழங்கால ஒலிம்பிக் நிகழ்விடமான ஒலிம்பியாவில் குவி ஆடி மூலம், சூரியக்கதிர்கள் ஒருமுகமாக குவிக்கப்பட்டு, சுடர் உயிர் பெற்றது.

பண்டைய போட்டிகளில் இருந்து நவீன ஒலிம்பிக்கிற்கு போட்டிகள் தொடர்வதைக் குறிப்பிடும் வகையில் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டமாகக் கொண்டு செல்லப்படுகிறது.
உலகமெங்கும் உலாவரும் சுடர் ஏந்தித் தொடரோட்டம் என்னும் நடைமுறை 1936ல் அப்போதைய ஒலிம்பிக் அமைப்புக்குழு தலைவரான கார்ல் டியெம் என்பவரால் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

* 1912 ஒலிம்பிக் வரை தங்கப்பதக்கங்கள் உண்மையாகவே தங்கத்தில் இருந்தன. இப்போதைய பதக்கங்கள்,போட்டிகளை நடத்தும் நாட்டின் ஒலிம்பிக் அமைப்புக்குழுவால் வடிவமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பதக்கமும் குறைந்தது 3 மிமீ கனமும், 60 மிமீ விட்டமும் கொண்டிருக்க வேண்டும். தங்க, வெள்ளி பதக்கங்கள் குறைந்தது 92.5 விழுக்காடு வெள்ளி உலோகம் கொண்டவையாக இருக்க வேண்டும். தங்கப்பதக்கத்தின் மீது குறைந்தது 6 கிராம் அளவுக்காவது தங்க முலாம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

* ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும்போது ஒலிம்பிக் பாடல் இசைக்கப்படும். இதற்கு இசையமைத்தவர், ஸ்பைரோஸ் சமராஸ். பாடலை எழுதியவர் கோஸ்டிஸ் பலாமாஸ்.

முதன் முதலில் ஒலிம்பிக் கீதம்,1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் இசைக்கப்பட்டது. என்றாலும் 1957ல்தான் அதிகாரபூர்வ அந்தஸ்து ஒலிம்பிக் கமிட்டியால் வழங்கப்பட்டது.

* முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காரணமாக,1916, 1940, 1944 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.

* முதிர்ந்த வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பெண் என்ற பெருமையைப் பெற்றவர் இங்கிலாந்து குதிரை ஏற்றப் போட்டி வீராங்கனையான லார்னா ஜான்ஸ்டன். போட்டியின்போது அவரது வயது 70.

வரலாற்றில் மிக இளைய வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் டிமிட்ரியோஸ் லண்ட்ராஸ் என்னும் கிரேக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இவர் 1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். போட்டியின்போது இவரது வயது 10.

* வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணுக் கழிவுகளிலிருந்து பதக்கங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. பழைய, நிராகரிக்கப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி செய்து பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை ஜப்பான் மக்கள் பதக்கங்களுக்கான நன்கொடையாக முன்கூட்டியே வழங்கியுள்ளனர்.

* பிரபல ஜப்பானிய கட்டடக் கலைஞரான கெங்கோ குமாவின் தனித்துவமான வடிவமைப்பின்படி புதிய தேசிய ஒலிம்பிக் அரங்கம் முழுமையாக புனரமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரங்கத்தின் வெளிப்புற அமைப்பு அலங்காரம் ஜப்பானின் 47 மாகாணங்களில் இருந்து பெறப்பட்ட மரங்களால் ஆனது.

* டோக்கியோ 2021ன் குறிக்கோள் வாசகம்- ‘உணர்ச்சிகளால் ஒன்றாவோம்’ (United by emotions). இது உலகளாவிய அழைப்பாக டோக்கியோவில் இருந்து உலகம் முழுக்க எதிரொலிக்கிறது. l

நிரஞ்சனா