ரத்த மகுடம்-157



பெரு மஞ்சத்தில் அமர்ந்து தனது கையில் இருந்த கரும்பலகையில் சுண்ணாம்புக் கட்டியால் விதவிதமான கோடுகளையும் புள்ளிகளையும் வைத்துக் கொண்டிருந்தார் சாளுக்கிய மன்னர்.

அந்த அறையின் சுவர்களில் இருந்த ஓவியங்கள் அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவரது ஆராய்ச்சியில் பங்கு கொள்வது போல் சற்று எட்ட எரிந்த அலங்கார தீபமும், விளக்கு நாச்சியார் கைகளில் எரிந்த தீபச் சுடரும் விக்கிரமாதித்தரின் சிந்தனையைக் கலைக்க விரும்பாமல் சலனமின்றி எரிந்து கொண்டிருந்தன.

‘‘வணக்கம் மன்னா...’’ அமைதியைக் கிழித்த குரலைக் கேட்டு சாளுக்கிய மன்னர் திரும்பினார்.காவலன் அவரை வணங்கினான். ‘‘வரச் சொல்...’’ என்றார் விக்கிரமாதித்தர்.காவலன் திகைத்தான். ‘‘சிவகாமிதானே வந்திருக்கிறாள்..?’’ பிரமிப்புடன் காவலன் தலையசைத்தான்.

‘‘அதனால்தான் அவளை வரச் சொல் என்றேன்..!’’மன்னரை மீண்டும் வணங்கிவிட்டு காவலன் வெளியேறிய மூன்றாவது கணத்தில் சிவகாமி நுழைந்து விக்கிரமாதித்தரை வணங்கினாள்.‘‘எங்கும் நின்று ஓய்வெடுத்துக் கொள்ளாமல் புயலைப் போல்தான் வந்திருக்கிறாய்...’’ விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘விளிந்தையில் பல்லவர்கள் அடைந்த வெற்றிக்கு உனது சாதுர்யமும் ஒரு காரணம் என்பதால்...’’ நிறுத்திய சாளுக்கிய மன்னர், தன் கண்களைச் சிமிட்டினார். ‘‘வாழ்த்துகள்...’’ மறுமொழி கூறாமல் சிவகாமி அமைதியாக நின்றாள்.

‘‘வாழ்த்துடன் சேர்த்து எனது நன்றியையும் தெரிவிக்கிறேன்...’’
விக்கிரமாதித்தரை உற்றுப் பார்த்தாள் சிவகாமி. ‘‘நன்றி எதற்கு மன்னா..?’’
‘‘என் மகன் விநயாதித்தன் மிகச் சிறந்த போர்வீரன் என அங்கீகரித்ததற்காக!’’
‘‘அங்கீகரித்தது நான் அல்ல மன்னா...’’

‘‘தெரியும். கரிகாலன்! அவன் வேறு நீ வேறா என்ன..? உடல்கள் இரண்டாக இருந்தாலும் உயிர் ஒன்றல்லவா..? அவனிடம் தெரிவிக்க வேண்டியதை உன்னிடம் சொன்னால் போதாதா..?’’விக்கிரமாதித்தர் தன்னைப் பார்த்து நகைக்கிறாரா அல்லது இயல்பாகப் பேசுகிறாரா என சிவகாமியால் திட்டவட்டமாக அறிய முடியவில்லை.

அறிந்து கொள்ள சாளுக்கிய மன்னரும் அவகாசம் வழங்கவில்லை. தன் கையில் இருந்த கரும்பலகையில் திடீரென ஒரு கோட்டைக் குறுக்கே கிழித்து மீண்டும் கிழக்குக்குக் கொண்டு வந்து ஓரிடத்தில் பெரும் புள்ளி ஒன்றை அழுத்தமாக வைத்துவிட்டு சிவகாமியிடம் கொடுத்தார்.

வந்ததுமே விக்கிரமாதித்தரின் கையில் இருந்த பலகை முழுவதையும் சிவகாமி பார்த்துவிட்டதால் அதிலிருந்த கோடுகள் குறிப்பிடும் இடங்களை அவளால் ஊகிக்க முடிந்திருந்தது. என்றாலும் மன்னர் தன்னிடம் கொடுத்த கரும்பலகையை வாங்கி மீண்டும் ஒருமுறை பார்த்தாள். நிமிர்ந்து மன்னரை ஏறிட்டாள்.‘‘கரிகாலர் இரு இடங்களில் காவிரியைக் கடந்திருக்கிறார் என்பதைக் குறித்திருக்கிறீர்கள்...’’‘‘சரிதானே..?’’ விக்கிரமாதித்தர் நகைத்தார்.

‘‘விளிந்தையில் முதல் முறை பல்லவப் படையுடன் காவிரியைக் கடந்திருக்கிறான்... என்ன அப்படிப் பார்க்கிறாய்..? இதை ஊகிக்க பெரும் அறிவெல்லாம் தேவையில்லை. மேற்குத் தொடர் மலை வழியாக பல்லவப் படை வருவதாக ஒற்றர்கள் செய்தி கொண்டு வந்தார்கள். காவிரியைக் கடக்காமல் பல்லவப் படையால் எப்படி மேற்குத் தொடர் மலையை அடைய முடியும்..?’’

கேட்ட விக்கிரமாதித்தர் பஞ்சணையை விட்டு எழுந்தார். ‘‘உண்மையிலேயே கரிகாலன் கெட்டிக்காரன். மிகச்சிறந்த ராஜதந்திரி. பல்லவப் படையை வழிநடத்தும் சாதுர்யம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. இதை அறிந்து படையை நடத்தும் பொறுப்பை அவனிடம் வழங்கிய பல்லவ மன்னர் பரமேஸ்வரரை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு மதியூகியின் தலைமையில் இயங்கும் படையைத்தான் நான் எதிர்கொள்ளப் போகிறேன் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. போர்க்களத்தை சுவாசமாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே புரியும் ரகசியம் இது...’’நெஞ்சை நிமிர்த்தி சிவகாமியைப் பார்த்தார். ‘‘நீளமான நெடுஞ்சாலை இருக்கிறது.

அங்கு காவலுக்கு இருந்த வீரர்கள் அனைவரையும் நான் அழைத்து வந்திருக்கிறேன். இப்பொழுது நெடுஞ்சாலையில் ஒரு சாளுக்கிய வீரன் கூட இல்லை. அப்படியிருந்தும் எதற்காக கரிகாலன் நெடுஞ்சாலை வழியாக பல்லவப் படையை அழைத்து வராமல் மேற்கு மலைத் தொடருக்குச் செல்ல வேண்டும்..?

கடுமையான பாதையில் தலையைச் சுற்றி நாசியைத் தொடுவது போல் ஏன் ஊரைச் சுற்றி இங்கு வர வேண்டும்..? வந்ததும் ஏன் உறையூரை முற்றுகையிடவில்லை..? இது கரிகாலனின் ஆளுகைக்கு உட்பட்ட நகரம்தானே..? இந்த நகரத்தின் சின்னச் சின்ன சந்துகளும் அவன் அறிந்ததுதானே..? அவனது பாதம் படியாத மண்துகள்கள் உறையூரிலேயே கிடையாதே..?

அப்படியிருந்தும் ஏன் மீண்டும் காவிரியைக் கடந்து உறையூருக்கு வடகிழக்கில் ஒன்றேகால் காத தூரத்தில் இருக்கும் சிறு ஊருக்குச் செல்ல வேண்டும்..?’’கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்ற விக்கிரமாதித்தரை ‘‘மன்னா...’’ என்ற சிவகாமியின் குரல் தேக்கியது.‘‘என்ன சிவகாமி..?’’

‘‘உறையூருக்கு வடகிழக்கில் ஒன்றேகால் காத தூரத்தில் இருக்கும் சிறு ஊர் என தாங்கள் குறிப்பிட்டது..?’’‘‘பெருவளநல்லூரை..!’’‘‘மன்னா..!’’‘‘சாளுக்கியப் படைகளை எதிர்கொள்ள கரிகாலன் தேர்வு செய்திருக்கும் இடம், ஊர் அதுதானே..?’’ சிவகாமியின் கருவிழிகளில் ஆச்சர்ய ரேகைகள் படர்ந்தன.

‘‘இதில் வியப்பதற்கு ஏதுமில்லை சிவகாமி... பல்லவர்களின் படைபலம் சாளுக்கியர்களான எங்களுக்கு இதுவரை தெரியாது... தெரியவில்லை என்ற இந்த உண்மை சாளுக்கியப் படைகளின் மத்தியில் காட்டுத் தீயாகப் பரவியிருக்கிறது. இதனால் ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் ஒவ்வொரு எண்ணிக்கையை நினைத்துக் கொண்டிருக்கிறான்... தன் சகாவிடம் அதைப் பகிர்ந்துகொள்கிறான்... இது எங்கள் படைகளுக்குள் குழப்பத்தையும் அச்சத்தையும் இனம் புரியாத உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அச்சமும் குழப்பமும் பல்லவர்களுக்கு சாதகமான விஷயம். ஒரு மிகச்சிறந்த மதியூகி எப்படி நடந்து கொள்வானோ அப்படி கரிகாலன் செயல்படுகிறான். எப்படி படையை கரிகாலன் திரட்டினான்... சிறுகச் சிறுக எங்கிருந்து படைகள் வந்து சேர்ந்தன... இதையெல்லாம் நாங்கள் அறிவதற்குள் விளிந்தையில் இருந்து கிளம்பி மேற்கு மலைத் தொடர் காடுகளில் பல்லவப் படையை கரிகாலன் மறைத்துவிட்டான்.

அடர் வனத்துக்குள் ஒற்றர்களை அனுப்பி வேவு பார்க்க முடியாது. பல்லவர்களின் மிகச்சிறந்த ஒற்றனான கரிகாலன் இதை அறிவான்; செயல்படுத்தியும் காட்டிவிட்டான்! பல்லவப் படைகளின் எண்ணிக்கையை முற்றிலுமாக சாளுக்கியர்கள் தெரிந்துகொள்ள முடியாதபடி மறைத்துவிட்டான்!

அவன் மலை வழியிலிருந்து சமவெளியில் இறங்கினாலும் படைகள் துரிதமாக முன்னேறும். இதைக் கண்காணிக்க முயலும் சாளுக்கிய ஒற்றர்கள் கண்டிப்பாக சிறை செய்யப்படுவார்கள். ஒரு ஒற்றன் தப்பித்து வந்து எனக்கு செய்தி சொல்வதற்குள் கரிகாலன் காவிரியைக் கடந்து போர்க் களத்துக்கு வந்துவிடுவான்.

எப்பேர்ப்பட்ட தந்திரம்! இதற்கெல்லாம் சிகரம் எது தெரியுமா..? பல்லவப் படையை காவிரிக் கரை ஓரமாகவே கரிகாலன் நடத்தி வருவதுதான்! இடையே எங்கு நான் அவனை மடக்க நினைத்தாலும் காவிரி மணலிலேயே சாளுக்கியப் படை அழிக்கப்படும் அல்லது பெரும் பலியைக் கொடுக்க நேரிடும்!

கரிகாலனை நினைக்க நினைக்க அவ்வளவு பெருமையாக இருக்கிறது! அதனால்தான் கரிகாலன் விருப்பப்படும் இடத்திலேயே அவனை... அவன் தலைமையில் வரும் பல்லவப் படையை எதிர்கொள்வதென்று முடிவு செய்திருக்கிறேன்... இதன் வழியாக திறமையான ஒரு தளபதிக்கு... என்னை காஞ்சிக்கு வரவழைத்த என் நண்பனுக்கு... கரிகாலனுக்கு... நான் மரியாதை செலுத்த விரும்புகிறேன்!

எவ்வளவு கூர்மையான அறிவு படைத்தவனாக கரிகாலன் இருந்திருந்தால் பெருவளநல்லூரைத் தேர்வு செய்திருப்பான்? அது சிறு கிராமம்தான். ஆனால், பெரும் போருக்கான பெரிய சமவெளி அங்குதான் இருக்கிறது. கடந்த சில திங்களாக இப்பகுதியை அலசி வருகிறேன்.

போருக்கு ஏற்ற இடம் எதுவென ஆராய்ந்து வந்தேன். பெருவளநல்லூர் மட்டுமே தகுந்த இடம் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால்தான் கரிகாலன் இதே பகுதியைத் தேர்ந்தெடுப்பான் என்பதை என்னால் உணர முடிந்தது...’’உணர்ச்சிபூர்வமாக இடைவெளி இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் சொன்ன விக்கிரமாதித்தர், வாஞ்சையுடன் சிவகாமியை நோக்கினார். ‘‘சொல் சிவகாமி... கரிகாலன் அனுப்பியிருக்கும் செய்தி என்ன..?’’
‘‘மன்னா...’’

‘‘என்ன செய்யப் போகிறேன் என்பதைச் சொல்லிவிட்டுத்தான் கரிகாலன் செய்வான்; செய்திருக்கிறான்; செய்யவும் போகிறான். அப்படியிருக்க, நடைபெறவிருக்கும் இப்போர் குறித்தும் அவன் உன் வழியாக செய்தி அனுப்பியிருப்பான் என்று தெரியாதா என்ன..?’’ விக்கிரமாதித்தரை நெருங்கி தன் இடையிலிருந்த மூங்கில் குழலை எடுத்துக் கொடுத்தாள்.‘‘குழலா..? வழக்கமாக கச்சையைத்தானே நீயும் கரிகாலனும் பயன்படுத்துவீர்கள்..?’’கன்னங்கள் சிவந்தபோதும் நாணத்தால் சிவகாமி தலைகுனியவில்லை.

‘‘குழலுக்குள் இருக்கும் ஓலையில் பல்லவப் படைகளின் எண்ணிக்கையை கரிகாலர் குறித்திருக்கிறார்... காலாட் படை, புரவிப் படை, யானைப் படை இவற்றின் எண்ணிக்கையையும், ஒவ்வொரு பிரிவையும் யார் யார் நடத்தப் போகிறார்கள் என்பது குறித்த விவரங்களையும் கரிகாலர் எழுதியிருக்கிறார்...’’‘‘தேர்ப் படை..?’’

‘‘நூற்றுக்கும் குறைவுதான்... அவற்றை வழிநடத்தும் பொறுப்பை சீனன் ஏற்றிருக்கிறான்... ஒவ்வொரு தேரிலும் ஒவ்வொரு விதமான யந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன... அதன் விவரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்...’’‘‘இதுதான்... இதுதான் கரிகாலன்... அதனால்தான் அவனை நான் மதிக்கிறேன்... தன் பலத்தை முழுமையாக அறிவித்துவிட்டே என்னுடன் போர் புரிய வருகிறான்... தன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவனால் மட்டுமே இப்படி நடக்க முடியும்...’’ சொன்ன விக்கிரமாதித்தர் தன் வலது கரத்தை உயர்த்தி சிவகாமியின் உச்சந்தலையைத் தொட்டார்.

‘‘தமிழகத்தின் மாபெரும் வீரனின் நேசத்தைப் பெற்றிருக்கிறாய் சிவகாமி... உனக்கு ஒரு குறையும் வராது... இழந்த சோழர்களின் பெருமையை இப்போரில் கரிகாலன் மீட்டெடுப்பான்... அவனுக்கும் உனக்கும் பிறக்கப் போகும் குழந்தைகள்... அக்குழந்தைகளின் குழந்தைகள் சுதந்திரமான சோழ அரசை மீண்டும் நிறுவுவார்கள்... மகிழ்ச்சியுடன் சென்று வா...’’
குனிந்து விக்கிரமாதித்தரின் பாதங்களைத் தொட்டு சிவகாமி வணங்கினாள்.

அவளை எழுப்பி உச்சந்தலையில் முத்தமிட்டார் சாளுக்கிய மன்னர். ‘‘எந்தக் காரணத்துக்காக எங்கள் மத்தியில் ஊடுருவி எங்கள் நாட்டின் ஒற்றர் படைத் தலைவியானாயோ அந்தக் காரணம் இப்போருக்குப் பின் நிறைவேறும்... சென்று வா... கரிகாலனைக் கேட்டதாகச் சொல்... பெருவளநல்லூரில் அவனை நேருக்கு நேர் சந்திக்க காத்திருக்கிறேன்...’’விக்கிரமாதித்தரை வணங்கிவிட்டு சிவகாமி புறப்பட்டாள்.

‘‘சிவகாமி...’’திரும்பினாள். ‘‘மன்னா...’’‘‘பல்லவர்களின் பலத்தை அறிவித்த கரிகாலனுக்கு பதில் மரியாதை செலுத்த சாளுக்கியர்கள் விரும்புகிறார்கள்... எனவே பல்லவப் படையை பெருவளநல்லூரில் எதிர்கொள்ள நாங்கள் அமைக்கப் போகும் வியூகத்தைத் தெரிவிக்கிறேன்... அதை கரிகாலனிடம் அறிவித்துவிடு...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர், சட்டென சிவகாமியைப் பார்க்க விரும்பாமல் திரும்பிக் கொண்டார். அவரது குரல் மட்டும் ஒலித்தது.

‘‘குருக்ஷேத்திரப் போரில் அபிமன்யூவை வீழ்த்த எந்த வியூகம் வகுக்கப்பட்டதோ... எந்த வியூகத்தை உடைக்க முடியாமல் பாண்டவப் படை திணறியதோ... எந்த வியூகத்தை உடைப்பது கடினம் என யுத்த சாஸ்திரங்கள் அனைத்தும் குறிப்பிடுகிறதோ... அதே வியூகத்தைத்தான் இப்போரில் சாளுக்கியர்களான நாங்கள் வகுத்திருக்கிறோம். அது... சக்கர வியூகம்!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்