டூஃபான்



உங்களுக்கு ஸ்போர்ட்ஸும், ஆக்‌ஷனும் கலந்த படங்கள் பிடிக்குமா? அப்படி யென்றால் ‘டூஃபான்’ என்ற இந்திப்படத்தை தவறவிட்டுவிடாதீர்கள். ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. 
ஊருக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்து, கடன் வசூலிக்கும் ஓர் அடியாள் ஆசிஸ் அலி. இதில் கிடைக்கும் பணத்தின் மூலம் அனாதைச் சிறுவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறான். ஒரு நாள் அவனுக்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலி பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

அதிலிருந்து குத்துச்சண்டை வீரனாக வேண்டும் என்பது அவனுடைய லட்சியமாக மாறுகிறது. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்றுள்ள குத்துச்சண்டை பயிற்சியாளர் நானா பிரபுவிடம்,  முஸ்லீமான ஆசிஸ் அலி பயிற்சியில் சேர்கிறார். நானாவின் மகள் என்று தெரியாமலேயே மருத்துவர் அனன்யாவிடம் காதல் வயப்படுகிறார்.

அடியாள் எப்படி குத்துச்சண்டை சாம்பியனாகிறான்... அவனுடைய காதல் என்னவாகிறது... என்பதே பல திருப்பங்களுடன் கூடிய ஆக்‌ஷன் திரைக்கதை.வழக்கமான கதைதான் என்றாலும் சண்டைக்காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்கள். உடல் மொழி முதல் உடற்கட்டமைப்பு வரை அச்சு அசல் குத்துச்சண்டை வீரரைப் போல அசத்துகிறார் ஆசிஸ் அலியாக நடித்த ஃபர்ஹான் அக்தர். படத்தின் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா.