ரித்து எங்கள் சொத்து!



‘‘முதல்ல ஐஸ்கிரீமை நான் சொல்ற டாப்பிங்ஸ் எல்லாம் போட்டு ஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரீம் ஆர்டர் போடுறீங்களா..?’’இப்படிதான் ஆரம்பமே நமக்கு கியூட்டாக கட்டளை வைத்தார் ‘ரித்து ராக்ஸ்’ யூ டியூப் சேனல் புகழ் ரித்விக்.
ஒரே ஒரு காமெடி செய்தி வாசிப்பு வீடியோ ஓகோவென பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸாக இந்த சுட்டி குட்டிதான் இப்போது டாக் ஆஃ த டவுன். உலகநாயகன் கமலஹாசனுக்கே சவால் விடும் வகையில் அப்பா, அம்மா, ‘எந்திரன்’ ரஜினி, ஏரியா டெய்லர், கிராமத்து அப்பாவி, சிட்டி அகராதி, ஆபீஸ் மானேஜர்... என அனைத்து கேரக்டர்களிலும் சிங்கிளாக - ஒன் மேன் ஆர்மியாக, தானே நடித்து பார்ப்பவர்களை வாய் பிளக்க வைத்து வெளுத்து வாங்கும் ரித்விக், இப்போது பிசியோ பிசி.

‘‘நான் நிறைய வீடியோஸ் பார்ப்பேன். எனக்கு இந்த கிராஃப்ட் வீடியோஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும். அப்பா நிறைய எடிட்டிங் வேலை செய்துட்டு இருப்பாரு. கூடவே நின்னு நானும் அந்த டயலாக்ஸை எல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பேன். கொரோனா காலத்துல ஸ்கூல் இல்லாம ரொம்ப போர் அடிச்சது.
நானாதான் அப்பா கிட்ட ‘இந்த மாதிரி நாமளும் வீடியோஸ் எல்லாம் போடலாமா’னு கேட்டேன். நான் முதல்ல கிராஃப்ட் வீடியோதான் போடலாம்னு நினைச்சேன்...’’ என ரித்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது அப்பா ஜோதிராஜ், ரித்து ராக்ஸ் சேனல் உருவானது குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘2010ல எனக்கும் ஆஷாவுக்கும் கல்யாணம் நடந்துச்சு. எனக்கு சொந்த ஊர் கோவை ராசிபுரம் பக்கத்துல வையப்பமலை கிராமம். ஒரே பையன் ரித்விக்.  இந்த சேனலை நாங்க 2017லேயே ஆரம்பிச்சுட்டோம். ஆனா, போதுமான நேரம் இல்லாம, குறிப்பாக என்ன கான்செப்ட் செய்யறதுன்னு தெரியாம அப்படியே விட்டு வெச்சிருந்தோம். லாக்டவுன்ல திடீர்னு பையன் கேட்டதும்தான் ஏன் நாம ஒரு கான்செப்ட் எடுத்து பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு.

 யூ டியூப் சேனல் நடத்துறது அவ்வளவு சுலபமில்ல. மத்த வீடியோஸை எல்லாம் நம்ம பயன்படுத்த முடியாது. காபிரைட் பிரச்னை வரும். அதேபோல சினிமா மியூசிக் வீடியோ கிளிப்பிங்ஸ் பயன்படுத்தினா ஆடியோ வீடியோ ரைட்ஸ் வரும். இப்படி நிறைய பிரச்னைகள் வந்துச்சுன்னா சேனலை முடக்கிடுவாங்க.

இதையெல்லாம் மனசுல வெச்சிதான் சொந்த கான்செப்ட்டா ஆரம்பிக்கணும்னு முடிவு செய்து ‘ரித்து ராக்ஸ்’ சேனலை உருவாக்கினோம். முதல் ரெண்டு வீடியோக்கு தான் கொஞ்சம் கஷ்டப்பட்டான். அதுக்கப்புறம் நாங்க என்ன ஸ்கிரிப்ட் கொடுக்கிறோமோ... எப்படி நடிக்கணும்னு சொல்றோமோ அத அப்படியே உள்வாங்கி நடிக்க ஆரம்பிச்சுட்டான்.

முதல்ல மேக்கப்... அவனுக்கான உடைகளை எல்லாம் சேகரிக்க முடிவு செய்தோம். ஆனா, ஊரடங்கு காரணமா எங்கேயும் கடைகள் இல்லை. மேக்கப் , விக், உடைகள் எல்லாம் அவ்வளவா வாங்க முடியலை...’’ என ஜோதிராஜ் புன்னகைக்க, ரித்துவின் அம்மா ஆஷா மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். ‘‘அதனால இருக்கறதை வெச்சே மேக்கப் போட்டோம். அவனோட லேடி கெட்டப் முடி கூட ஹேர் எக்ஸ்டென்ஷன்தான். அதாவது சவுரி முடி. அத வெச்சே கொண்டை, ஜடை, லாங் ஹேர், ஷார்ட் ஹேர்னு விதவிதமா டிரை பண்ணினோம்...’’ என ஆஷா சொல்லும்போதே ரித்விக் இடைமறித்தார்.

‘‘எனக்கு அந்த முடிதான் பெரிய பிரச்னையா இருக்கு. அது ரொம்ப பெரிய முடி. எனக்கு கழுத்தெல்லாம் குத்துது. இந்த லேடி கெட்டப் ஒண்ணுதான் டிஸ்டர்ப். மத்தபடி எனக்கு எல்லாமே ஓகே.அப்பா எப்படி நடிக்கணும்னு சொல்லுவாரு. அம்மா எனக்கு மேக்கப் எல்லாம் போட்டு விடுவாங்க. அந்த ‘எந்திரன்’ கெட்டப் கூட அட்டை மேல ஜிகினா பேப்பர் ஒட்டிதான் செய்தோம். அந்த டெய்லர் கெட்டப்ல குனிஞ்சி பார்ப்பேன்ல... அது நான்தான் கொடுத்த ஐடியா!’’ பெருமையாக சொல்கிறார் ரித்து.

‘‘சில நேரங்கள்ல 10 மணி நேரம் கூட ஷூட்டிங் போகும். என்னடா குழந்தைய இவ்ளோ கஷ்டப்படுத்துறோம்ன்னு தோணும். ஆனா, எங்களுக்கு உற்சாகம் கொடுக்கறதே ரித்துதான். ‘செய்யலாம்’ன்னு ஜாலியா சொல்லிட்டு தொடர்ந்து நடிப்பான். எங்க ரெண்டு பேருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது... கொடுக்கறதே ரித்துதான். படிப்புலயும் அவன் கெட்டி...’’ நெகிழ்கிறார் ஜோதிராஜ்.

‘‘எனக்கு ஏழு வயசாகுது. ஆவணி ஸ்கூல்ல ரெண்டாம் கிளாஸ் படிக்கிறேன். என் ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாம் வீடியோ பார்த்துட்டு பாராட்டறாங்க. இப்போ எல்லா பக்கமும் என்னை கூப்பிட்டு பேட்டி எடுக்குறாங்க. ரொம்ப ஹாப்பியா இருக்கு. நிறைய சினிமால நடிக்க சொல்லி டெஸ்ட் எடுக்கறாங்க. அதுக்காகதான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்திருக்கார்...’’ ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடியே ரித்து சொல்ல, மகனின் தலையைக் கோதிவிட்டபடியே தொடர்ந்தார் ஜோதிராஜ்.

‘‘நான் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர். ரெண்டு சின்ன படங்கள் செய்திருக்கேன். கொரோனா காரணமா அந்தப் படங்கள் இன்னும் வெளியாகலை. இந்த ஊரடங்கு நேரத்துல சேனலைத் தொடங்கினோம். அதுக்கு முன்னாடி யூ டியூப் சேனலுக்கான ரூல்ஸை எல்லாம் பொறுமையா படிச்சு தெரிஞ்சுகிட்டுதான் வீடியோஸை உருவாக்க ஆரம்பிச்சோம்.

இப்போ இன்ஸ்டாகிராம், ஷேர் சாட்ல ரித்து வீடியோஸுக்கு அக்ரிமெண்ட் போட்டிருக்காங்க. வீடியோஸுக்கு மக்கள் கொடுக்கற வரவேற்புதான் இதுக்கெல்லாம் காரணம். ரித்துவை ரசிச்சு ஆதரிக்கிற மக்களுக்கு நாங்க மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கோம்...’’ என்கிறார் ஜோதிராஜ்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்