பேய் வீதி



அமெரிக்காவின் இளம் வாசகர்களுக்காக ஆர்.எல்.ஸ்டைன் எழுதிய ‘ஃபியர் ஸ்ட்ரீட்’ என்ற திகில் கதைத்தொடர் வெகு பிரபலம். ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகம், 8 கோடிக்கும் மேல் விற்பனையாகி சாதனைபுரிந்துள்ளது.
இந்த ‘ஃபியர் ஸ்ட்ரீட்’டை அடிப்படையாக வைத்து, ‘ஃபியர் ஸ்ட்ரீட் பார்ட் ஒன் : 1994’, ‘ஃபியர் ஸ்ட்ரீட் பார்ட் டூ :1978’ ‘ஃபியர் ஸ்ட்ரீட் பார்ட் த்ரீ: 1666’ என்ற முத்தொகுப்பு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் லே ஜானியாக் என்ற பெண். சமீபத்தில் இந்த மூன்று ஆங்கிலப்படங்களும் நேரடியாக ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி, பார்வையாளர்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது.

முதல் பாகத்தின் கதை 1994ல் நடக்கிறது. சேடிசைடு என்ற கிராமத்தில் கொடூரமான முறையில் பலர் கொல்லப்படுகின்றனர். டீனா, ஜோஸ், கேட், சமந்தா, சைமன் என்ற பதின்பருவத்து நண்பர்கள் சேர்ந்து கொலைகளுக்கான காரணத்தை தேடுகின்றனர். சேடிசைடில் நடக்கும் கொலைகளுக்கு காரணம், சூனியக்காரி சாரா என்று ஜோஸ் கண்டுபிடிக்கிறான்.

இந்நிலையில் சாராவின் சமாதியை சமந்தா தொந்தரவு செய்துவிடுகிறாள். சமந்தாவை மட்டும் கொலை செய்ய இறந்தவர்களை ஏவி விடுகிறாள் சாரா. சூனியக்காரியிடமிருந்து சமந்தாவையும் சேடிசைடையும் நண்பர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள்... உண்மையில் இந்தக் கொலைகளுக்குப் பின்னணி என்ன... என்பதை அடுத்தடுத்த பாகங்களில் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.