மாடத்தி



தமிழின் முக்கியமான சுயாதீன திரைப்படமாக வெளியாகியிருக்கிறது, ‘மாடத்தி’. ‘நீஸ்ட்ரீமி’ல் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.ஒடுக்கப்பட்டவர்களாலேயே ஒடுக்கப்பட்டு வைத்திருக்கும் சாதியினர், புதிரை வண்ணார்கள்.
தீட்டுத் துணிகளைத் துவைக்கும் இவர்களைப் பார்ப்பதே தீட்டு என்று ஒரு மூட நம்பிக்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வேற்று சாதியினரின் பார்வையில் படாமல் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். தப்பித்தவறி யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் ஓடி ஒளிய வேண்டிய அவலம்.

இப்படி ஒளிந்து, ஒளிந்து வாழும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையினூடாக புதிரை வண்ணார்களின் துயர்மிகுந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது படத்தின் கதை.ஒரு பறவையைப் போல சுதந்திரமாக பறக்க விரும்புகிறாள் மகள் யோசனா.

வீட்டைவிட்டு வெளியே போனால் மகளுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் எப்போதுமே சிடுசிடுப்புடன் இருக்கிறாள் அம்மா வேணி. இந்நிலையில் அம்மாவுக்கும் மகளுக்கும் நிகழ்ந்த குரூரம் சாதி மற்றும் ஆணாதிக்க சமூகத்தின் மீது பெரிய வெறுப்பை பார்வையாளனுக்குள் பதிவு செய்கிறது. இதுவே படத்தின் வெற்றி.

வேணியாக செம்மலர் அன்னமும், யோசனாவாக அஜ்மினாவும் நடிப்பில் கலங்க வைக்கிறார்கள். புதிரை வண்ணாரை திரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததன் மூலம் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குநராக மிளிர்கிறார் லீனா மணிமேகலை.