தாலிபான்கள் 2021... ஆப்கானில் என்ன நடக்கிறது? Detail Report



‘ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க துருப்புகளை ஆகஸ்ட் இறுதிக்குள்ளாக முற்றிலுமாக திரும்ப அழைத்துக்கொள்வோம்...’ என அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்திருக்கிறார்.
கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபான்களுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிகழ்ந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், தாலிபான்கள் இனி இஸ்லாமிய ஜனநாயக வழியில் நடப்பதாகவும், அல்கெய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் உறுதி கொடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவை அமெரிக்கா எடுத்திருக்கிறது.

பலருக்கும் நிம்மதிப் பெருமூச்சையும், இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட பலருக்கு கலக்கத்தையும் உருவாக்கியிருக்கும் முடிவு இது. சரியாக இருபது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களை விமானம் மோதி தகர்த்தது ஒசாமா பில்லேடனின் அல்-கெய்தா.
உலகமே திகைத்து அந்த சம்பவத்தை நம்ப இயலாமல் தொலைக்காட்சியில் பார்த்தது. உலகின் பெரியண்ணனாகவும் ஒற்றை வல்லரசாகவும் தன்னைக் கருதிக்கொண்ட அமெரிக்காவின் உளவுத்துறையின் தோல்வியே இது என்றும், அமெரிக்க ஆதிக்கத்துக்குப் பின்னடைவு என்றும் சர்வதேச ஊடகங்கள் எழுதின.

வெகுண்டெழுந்த அமெரிக்கா, தீவிரவாதத்துக்கு எதிரான போரை அறிவித்தது. அப்போதைய அதிபர் புஷ், ‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால், எதிரியோடு இருக்கிறீர்கள் என்று பொருள்’ என கர்ஜித்தார்.
ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாதம் பேசும் தாலிபான் உள்ளிட்ட முஜாகிதின் அமைப்புகளையும் அல்கெய்தாவையும் வேரோடு அழிப்போம் என்றும், உலகம் முழுதும் உள்ள எல்லா தீவிரவாத அமைப்புகளையும் அழிக்க உலக நாடுகளுக்கு உதவுவோம் என்றும் சூளுரைத்தார். உலக வரலாற்றையே மாற்றிப்போட்ட சம்பவம் என்றுதான் அந்த இரட்டை கோபுரத் தாக்குதலை வர்ணிக்க வேண்டும்.

தேசங்களுக்கு இடையிலான ராஜரீக உறவுகள் அதன்பிறகு வெகுவாக மாறின. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேச நாடுகள் படை ஆப்கானில் நுழைந்தது. அல்கெய்தாவையும் தாலிபான்களையும் நர வேட்டையாடியது.ஆப்கானில் அடிப்படைவாத ஆட்சியை நடத்திக்கொண்டிருந்த தாலிபான்களின் தலைவர்களும் வீரர்களும் காபூலை விட்டு வெளியேறி பூர்வீக கிராமங்களில் குடியேறினார்கள்.

அங்கும் அமெரிக்கப் படைகள் துரத்திக்கொண்டு போய் வேட்டையாடவே, பாகிஸ்தானுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தப்பிச் சென்றார்கள். ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய அமெரிக்க படைகள் தங்களது செல்வாக்கால் அங்கொரு பொம்மை ஜனநாயக அரசை நிறுவின.

இப்படியாக அமெரிக்க, ஐரோப்பிய படைகளின் தயவால் அங்கொரு பெயரளவு ஜனநாயக அரசு நிறுவப்பட்டது.ஒன்றல்ல இரண்டல்ல... இருபதாண்டு காலம் அமெரிக்க துருப்புகள் ஆப்கானிலேயே நிலைகொண்டிருந்தன. உலகம் முழுதும் இருந்த பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் அமைதி விரும்பிகளும் அமெரிக்க படைகளைத் திரும்பச் சொல்லி அழுத்தம் கொடுத்தனர். அமெரிக்க வீரர்களின் குடும்ப உறுப்பினர்களேகூட சமயங்களில் மனம் உருகி கோரிக்கைகள் வைத்தனர்.

ஆனால், ஆப்கானில் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுத்துவிட்டு ஜனநாயகத்தை அமலாக்க இன்னமும் சூழல் கனியவில்லை என்றே அமெரிக்கா சொல்லி வந்தது.மிக நீண்ட காலப் போராட்டம்.

2448 அமெரிக்க வீரர்கள், 3846 அமெரிக்க ஒப்பந்ததாரர்கள், 66,000 ஆப்கானின் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் காவலர்கள், 1,144 நேசநாட்டு உறுப்பினர்கள், 47,245 ஆப்கானிய பொது மக்கள், 444 உதவிப் பணியாளர்கள், 72 ஊடகவியலாளர்கள், 51141 தாலிபான் தீவிரவாதிகள் என கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொரியப் போர், வியட்நாம் போரைவிடவும் அதிமான தொகையை இந்தப் போருக்காக அமெரிக்கா செலவிட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 48 லட்சம் கோடி ரூபாயை அமெரிக்கா மட்டுமே செலவிட்டிருக்கிறது.

இத்தனைக்கும் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒழிக்க முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் மலர்ந்ததா என்றால் அதுவும் இல்லை. இப்போதும் ஒரு  ஆப்கன் குடிமகனின் சராசரி ஆயுள் ஐம்பது வருடங்கள்தான். ஊட்டச்சத்துப் போதாமையால் இருக்கும் குழந்தைகள் கிட்டத்தட்ட ஆப்பிரிக்க நாட்டுக்கு இணையாக இருக்கிறார்கள்.

எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் முப்பத்தேழு சதவீதம் பேர்தான். ஆப்கானில் உள்ள மூன்றில் ஒரு கிராமம் தாலிபான்களின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எஞ்சிய இரண்டு கிராமங்களும்கூட தாலிபான்கள் குறித்த பயத்தோடு பெண் கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை முடக்கியே வைத்திருக்கின்றன.

தாலிபான்கள் ஒழியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் இந்த இருபதாண்டு கால நெடிய போரில் முன்பைவிடவும் வலுவாகியிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம் என்கிறார்கள் சில ஐரோப்பிய சமூகவியல் அறிஞர்கள்.

அமெரிக்காவின் தயவில் நிலைநிறுத்தப்பட்ட காபந்து ஆப்கானிய அரசு காபூலிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மட்டுமே செல்வாக்கோடு உள்ளது. கிராமப்புறங்களை தாலிபான்களே கையில் வைத்திருக்கிறார்கள். அங்கு குடிமக்கள் யார்... தீவிரவாதிகள் யார்... அடிப்படைவாதிகள் யார் என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சிரமாக ஒருவரோடு ஒருவர் கலந்திருக்கிறார்கள். இது அமெரிக்காவுக்குப் பெரிய நெருக்கடியாக இருந்தது.

மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்ற ஜிகாதிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஒளிந்துகொண்டு ஆப்கானின் நவீன ஜனநாயக அரசுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் எதிராக ஒரு நிழல் யுத்தத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.

கருத்தியல் அளவில் பிற முஜாகிதீன்களையும் ஜிகாதிகளையும் ஒருங்கிணைப்பதில் அவர்கள் முன்னிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நவீன தொலைத் தொடர்புக் கருவிகளைக் கையாள்வது, நவீன ஆயுதங்களைக் கையாள்வது, மத்திய கிழக்கில் புதிய புரவலர்களைப் பிடித்து தங்களுக்கான நிதி ஆதார வளங்களை உருவாக்குவது ஆகியவற்றிலும் கணிசமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு இதெல்லாம் நன்கு புரிந்தாலும் அந்நாடு இப்போது கையறு நிலையில் இருக்கிறது. ஒரு நெடிய போரால் அமெரிக்க வீரர்களும் குடிமக்களும் அரசியல்வாதிகளும் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். இனி அந்தப் போரால் எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் அங்கிருந்து வெளியேறுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டது அமெரிக்கா.

சொல்லப்போனால் இது அமெரிக்காவுக்குத் தோல்விதான். வியட்நாமுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு ஏற்பட்ட தோல்வி இது. ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல் அமெரிக்க பேசிக்கொண்டிருக்கிறது.

கடந்த இருபதாண்டு கால நவீன ஜனநாயக சூழல் ஆப்கானில் மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது என்றும் தாலிபான்களுமேகூட நிறைய மாறிவிட்டிருக்கிறார்கள் என்றும் தாலிபான்கள் என்பது ஒரே மனநிலை உடைய ஒற்றை அமைப்பு அல்ல; அங்கு ஜனநாயகத்தை நம்பும் சக்திகளும் இருக்கிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.ஆனால், அமெரிக்கா சொல்லும் இந்த தாலிபான்கள் 2.0 என்ற கதையை நாம் அப்படியே நம்ப முடியாது.  தாலிபான்கள் கறாரான அடிப்படைவாதிகள்.

அவர்களில் பலவிதமான மத ஷரியத்துகளை நம்பும் போக்கு கொண்டவர்கள் இருக்கிறார்கள்  என்பது உண்மைதான் என்றபோதும் அவர்களின் அடிப்படை சிந்தனையே பிற்போக்குத்தனமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தீவிரவாதம் என்பதை அவர்கள் முற்றிலும் கைவிடத் தயாரில்லை.

அமெரிக்க படைகள் மெல்ல மெல்ல ஆப்கானைவிட்டு காலி செய்யத் தொடங்கி இருக்கும் போதே தாலிபான்கள் இதை தங்களின் சித்தாந்தத்துக்கு கிடைத்த வெற்றி என்று ஆர்ப்பரித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தலைநகரம் நோக்கி பெரும் ஆரவாரத்துடன் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்போதே ஆப்கானின் ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் தாக்கப்படுகிறார்கள். விரைவில் ஒட்டுமொத்த ஆப்கானும் தாலிபான்கள் கையில் சென்று சேரும்போது அவர்கள் அடிப்படைவாதத்தை தீவிரவாதமாக மாற்ற மாட்டார்கள் எனச் சொல்வதற்கு எந்த நம்பிக்கைக்குரிய முகாந்தரமும் இல்லை.

அல் கெய்தாவுக்கும் தாலிபான்களுக்கும் உள்ள உறவு ரத்தபூர்வமானது. ஒரு காலத்தில் தாலிபான்களுக்கு போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்ற தொழில்கள் வாயிலாக ஆப்கானை ஆட்சி செய்வதற்கு நிதியளித்துக் கொண்டிருந்தவர்களே அல்கெய்தாதான். இன்று அல்கெய்தா வலுவற்ற அமைப்பு என்றாலும் அதற்கான புரவலர்களை தாலிபான்களே இன்றும் கையில் வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடப்பதற்கு முன்பு தாலிபான்களை பகிரங்கமாக ஆதரித்து வந்த பாகிஸ்தான் பிறகு வெளியே பெயரளவில் எதிர்ப்பது, நிஜத்தில் அதற்கு அடைக்கலம் தருவது என்ற இரட்டை வேடத்தை கடந்த இருபது வருடங்களாக கனகச்சிதமாக செய்தது.

இனி அது வெளிப்படையாகவே தாலிபான்களுக்கு புகலிடம் தரக்கூடும். சீனாவும் தன் பங்குக்கு ஓர் அரசியலைச் செய்யும். இந்தியாவுக்கு இது எப்படியான தலைவலியாக மாறும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இளங்கோ கிருஷ்ணன்