மாலிக்



இந்த வருடத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  மலையாளப்படம், ‘மாலிக்’. கடந்த வாரம் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஹஜ் யாத்திரை செல்வதற்காக விமான நிலையத்துக்கு வரும் சுலைமான் கைது செய்யப்படுகிறார்.
அவர் மீது ‘தடா’ சட்டம் பாய்கிறது. அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் காவல்துறையின் அராஜகங்களுக்கு இடையூறாக இருப்பவர் சுலைமான். அதனால் சிறையில் வைத்தே அவரைக் கொன்றுவிட காவல்துறை திட்டம் தீட்டுகிறது. இதற்காக குண்டுவீச்சில் கைது செய்யப்பட்டிருக்கும் ஃபிரடியைப் பயன்படுத்துகிறது காவல்துறை.

சுலைமானின் மனைவி ரோஸ்லினின் அண்ணன் மகன்தான் இந்த ஃபிரடி. சுலைமான் கொல்லப்பட்டாரா... உண்மையில் யார் இந்த சுலைமான் என்பதே திரைக்கதை. மலையாளத்தில் ஒரு ‘நாயகன்’ என்று ‘மாலிக்’கைச் சொல்லலாம். கடற்கரையோரத்தில் வாழும் எளிய மனிதர்களின் மீது அதிகாரம் நிகழ்த்தும் சுரண்டல்களையும் அநீதிகளையும் அப்பட்டமாக பதிவு செய்கிறது இந்தப் படம்.

அத்துடன், அப்பாவி மக்களுக்கிடையில் எப்படி மத ரீதியான பிளவுகளை அதிகாரம் கட்டமைக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ‘மாலிக்’. பகத் பாசிலின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சுலைமானாகவே வாழ்ந்திருக்கிறார் மனுஷன். படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணன்.

தொகுப்பு: த.சக்திவேல்