சிவகளை நாகரிகத்துக்கு வயது 3 ஆயிரம் ஆண்டுகள்!



இந்திய தொல்லியல் துறையை ஆச்சரியப்படுத்தும் தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர், கீழடியைத் தொடர்ந்து தமிழர் நாகரித்தைப் பறைசாற்றி வரும் தொல்லியல் களம் சிவகளை. இந்த கிராமம் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே தாமிரபரணி நதியின் மறுகரையில் இருக்கிறது.
இங்கே கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருட்களின் மூலம் இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதுடன் ஆதிச்சநல்லூருக்கும் முந்தைய காலமாக இருக்கலாம் என்கின்றனர். மட்டுமல்ல; இங்கு கிடைக்கப்பெற்ற செம்பு உள்ளிட்ட பொருட்கள் தொல்லியல் ஆய்வாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கின்றன.
ஏனெனில், மனிதன் முதன்முதலாகக் கண்டறிந்து பயன்படுத்திய உலோகம் செம்பு என்பதே இதற்குக் காரணம். தவிர, வாழ்விடம் பற்றிய அகழாய்வும் நடந்து வருகிறது. அதில் சில செம்பு நாணயங்களையும், கால் சிலம்பு ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர்.

இதன்மூலம் பல்வேறு ஆச்சரியத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இதனை முதன்முதலாக வெளியுலகிற்குக் கொண்டு வந்தவர் சிவகளை கிராமத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம். இவர்தான் முதலில் ஆய்வு செய்து அதனை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தவர்.  ‘‘சொந்த ஊர் சிவகளை. நான் வைகுண்டம் குமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியரா இருக்கேன். எனக்கு தொல்லியல் சம்பந்தமா ஆர்வம் உண்டு.

ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைச்சது. ஆனா, வாழ்விடப் பகுதி கிடைக்கல. அதைத் தேடிட்டு இருக்கிற தகவல்களைத் தொடர்ந்து கவனிச்சேன். 2012ம் ஆண்டு எங்க பள்ளியில் படிக்கிற ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை கள ஆய்வுக்காக ஆதிச்சநல்லூர் கூட்டிட்டு போனோம். ஆனா, அங்க முதுமக்கள் தாழி எதையும் பார்க்க முடியல.
தாமிரபரணி நதி ஓடக்கூடிய பகுதிகள்ல நாகரிகங்கள் ரெண்டு பக்கமும் இருக்கும். அதனால, தொடர்ந்து களப்பணி செய்தோம். புன்னைக்காயல் வரை போய் பார்த்தும் எதுவும் கிடைக்கல.
அந்தக் காலத்துல சிவகளை கிராமத்து பெரியவங்க, சிவகளையின் வடக்குப் பகுதியில் ஆறு ஓடினதுனு சொல்லக் கேட்டிருக்கேன். இது காதுவழிச் செய்திதான்.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் பறம்புப் பகுதியில் இருக்குது. அதே மாதிரி சிவகளையிலும் பறம்புப் பகுதி இருக்கு. அது சிவகளையிலிருந்து பேட்மாநகரம் வரை 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விரிஞ்சு கிடக்கு. அதனால, அங்க நாகரிகங்கள் இருந்திருக்கலாம்னு தோணுச்சு.பறம்புனா கல், மண் சேர்ந்த கலவையான பகுதி. இந்த நிலங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படாதது. இன்னைக்கு வரை ஒரு மரம் கூட அங்க கிடையாது. வெயில்லதான் அகழாய்வே நடந்திட்டு இருக்கு. அப்ப அன்னைக்கு உள்ள மனிதர்கள் அறிவுபூர்வமா இது விவசாயத்திற்குப் பயன்படாத நிலம்னு தேர்ந்தெடுத்தே இடுகாட்டை உருவாக்கி உடலை தாழியில் புதைச்சிருக்காங்க.

என்னுடைய நண்பர்கள் இரண்டு பேரைக் கூப்பிட்டு சிவகளையின் வடக்குப் பகுதியில் உள்ள பறம்புக்குப் போனேன். மேற்பரப்பு களஆய்வுல முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் எல்லாம் தெரிஞ்சது. அதை சேகரிச்சு அந்த இடத்தைப் புகைப்படங்களும் எடுத்தோம். 2016 -17 காலக்கட்டத்துல உதயச்சந்திரன் ஐஏஎஸ் சார் கல்வித்துறையின் செயலாளரா வர்றாங்க. நான், 2012ல் இருந்து களஆய்வு செய்திட்டு வந்தாலும் எனக்கு 2017ல்தான் ஆதாரமா முழு முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருட்கள் கிடைச்சது. அதனால, உதயச்சந்திரன் சார்கிட்ட கீழடி, ஆதிச்சநல்லூரைவிட இங்க 2 ஆயிரம் ஏக்கரில் குவியல் குவியலாக நாகரிகங்கள் இருக்குதுனு சொன்னேன்.

அவர், ‘போட்டோஸும், வீடியோஸும் எடுத்து அனுப்புங்க’ன்னார். நானும் அனுப்பினேன். அதைப் பார்த்திட்டு உடனே தொல்லியல் அலுவலரான லோகநாதனை சிவகளைக்கு அனுப்பினார். அவருடன் அவரின் நண்பர் தொல்லியல் அலுவலர் பாஸ்கர் சாரும் வந்தார். அவங்க இந்த இடத்தைப் பார்த்திட்டு ஆச்சரியமானாங்க. என்னுடைய அறிக்கையை தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வுப் பிரிவுக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் அனுப்பினாங்க. சிவகளை என்கிற ஊர் ரிக்கார்ட்ல இருக்கானு கேட்டாங்க. அடுத்து, ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்த அலெக்சாண்டர் ரியா 33 இடங்களைக் குறிப்பிட்டு இருந்தார். அதையும் செக் பண்ணினாங்க. எதிலும் சிவகளை இல்ல. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, புதுசா ஓர் இடம் முதன்முதலா கண்டறியப்பட்டிருக்கு. இதன்பிறகு, இந்திய தொல்லியல் துறையினர் வந்தாங்க...’’ வியப்பைப் பகிர்ந்து கொண்ட மாணிக்கம், தொடர்ந்தார்.

‘‘அன்னைக்கு மனிதர்கள் சராசரியா 200 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்காங்க. குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு அவங்க உடம்புல முடியெல்லாம் உதிர்ந்து வேர்க்குரு மாதிரி ஒவ்வொரு செல்லிலும் முட்கள் தோன்றும். அதிலிருந்து அவர் இறக்கும் நாட்களை எண்ணிட்டிருக்கிறார்னு தெரிஞ்சுப்பாங்க. அப்படிப்பட்ட நேரம்தான் முதுமக்களா மாறுகிறாங்க. அதாவது, முதுமையை எட்டிய மக்கள். அவர்களைத் தாழியில் வைத்து புதைப்பாங்க.

ஆரம்பத்துல இறந்த உடம்பை என்ன செய்வதுனு தெரியாமல் அதை அப்படியே காடுகள்ல எறிஞ்சாங்க. இதன்பெயர் எறிதல். பிறகு, பூமிக்கு அடியில் ஒரு தாழியில் வைத்து புதைச்சாங்க. இதன்பெயர் இடுதல். இந்த முறைகளை முதன்மையான ஈமச்சடங்குனு சொல்வாங்க. இதன்பிறகு, காடுகள்ல எறிந்தவர்களை ஒருமாதம் கழித்து அந்த இடத்திற்குச் சென்று மிச்சமுள்ள எலும்புகளை எடுத்து வந்து தாழிகள்ல புதைச்சிருக்காங்க. இதற்கு எறிந்து இடுதல்னு பெயர். அடுத்ததா, இறந்தவர்களை எரித்து அந்தச் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்து அதை தாழியில் வைத்து புதைச்சிருக்காங்க. இந்த ரெண்டு முறைகளையும் செகண்டரினு சொல்வாங்க.

சிவகளையில் முதல்கட்ட அகழாய்வில் செகண்டரி புதைகுழிகளாக இருந்தது. இப்ப ரெண்டாம் கட்ட அகழாய்வில் கிடைச்ச முதுமக்கள் தாழிகளில் மூன்று தாழிகளைத் திறந்திருக்காங்க. இந்த மூன்றிலுமே முழு உடம்பாகவே கிடைச்சிருக்கு. பொதுவாக, முதுமக்கள் தாழியில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைப்பாங்க. இப்ப நாம் சிவகளையில் இருக்கிற முதுமக்கள் தாழியில் நெல் எடுத்திருக்கிறோம். அதுவும் கெட்டுப்போகாமல் மூடியுடன் கூடிய மண் ஜாரில் நெல் இருந்தது.இந்த நெல்லை மீட்டெடுக்கணும்னு கோரிக்கை வைச்சிருக்கேன். ஏன்னா, 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு தாமிரபரணி நதிக்கரையில் பயிரிடப்பட்ட நெல் ரகம். அதனால், இந்த நெல்லை ரசாயனம் கலக்காமல் பயிரிட்டு பாதுகாக்கணும்.

கார்பன் டேட்டிங்கில் இந்த நெல் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதும் துல்லியமா தெரிய வரும். முழு உடலும் கிடைச்சிருக்கிறதால அதிலுள்ள தாடை வழியாகவும் எளிதா ஆண்டுகளைக் கண்டறியலாம். அப்புறம், இங்க பாறைக் கிண்ணங்கள், கல் வட்டங்கள் எல்லாம் கண்டறிப்பட்டிருக்கு. தவிர இரண்டு செம்பு ஜார்கள் மேற்பரப்பில் கண்டு பிடிச்சேன். பிறகு, செம்புல கால் சிலம்பு கிடைச்சது. இது பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. ஏன்னா, உலோகக் காலத்துல இரும்புக்காலம்தான் இருந்துச்சு. செம்புகாலம் கிடைக்கல. இப்ப செம்பு கிடைச்சிருக்கு. மற்றபடி இரும்பு ஆயுதங்கள். கத்தி, உளி எல்லாம் கிடைச்சிருக்கு.

அப்புறம், சிவகளையில் ஆயிரம் ஏக்கர்தான் பறம்பு. மீதி ஆயிரம் ஏக்கர் வயல்காட்டுல இருக்கிற தெரடுகள். அது அப்படியே இருக்கு. இந்தப் பகுதி வாழ்விடமா இருக்கலாம்னு ஏழு இடங்களை அடையாளப்படுத்தி இருக்காங்க. இப்ப அங்க அகழாய்வு நடக்குது. தமிழ் பிராமி எழுத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. பறம்புக்கு இடதுபக்கம் குளங்கள் இருக்கு. அங்கயும் வாழ்விடம் இருக்கலாம்னு பணிகள் நடக்குது. இதுல முதல்கட்ட அகழாய்வில் செம்பு நாணயங்கள் கிடைச்சது. அதுதான் வாழ்விடப்பகுதி என்பதற்கான அத்தாட்சியா இருக்கு. ஆதிச்சநல்லூர் 2900 ஆண்டுகள் பழமையானதுனு சொன்னால், சிவகளை அதைவிட தொன்மையானதுனு உறுதியா சொல்லலாம்...’’ உற்சாகமாகச்  சொல்கிறார் மாணிக்கம்.  

இதுகுறித்து, தொல்லியல் துறை ஆணையர் டாக்டர் சிவானந்தத்திடம் பேசினோம். ‘‘சிவகளை நல்ல தொல்லியல் களம். செம்மண் பகுதி. இது ஆதிச்சநல்லூருடன் சேர்ந்த சம காலகட்டமாக இருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலகட்டமாக இருக்கலாம். அதை ஆய்வு முடிவுகளே தெரிவிக்கும்.சிவகளையில் கடந்த வருடம் தொடங்கும்போது முப்பதுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைச்சது. அப்புறம், வழிபாட்டுப் பொருட்கள், கலயம், கிண்ணம், தவிர பல்வேறு வகையில் கருப்பு சிவப்பு பானைகள் கிடைச்சது.

நமக்கு கிடைச்சிருக்கிற முதுமக்கள் தாழிகள் எல்லாமே சிவப்பு நிறத்தில் இருக்கு. தாழியின் உள்ளே படையல் பொருட்களும் கருப்பு சிவப்பு நிறத்தில் சுடுமணலால் ஆன கலயங்கள்ல வைக்கப்பட்டிருக்கு. அதுல வெண்புள்ளிகளுடன் அலங்காரம் பண்ணியிருக்கு. அந்தக் கருப்பு சிவப்பு நிறம் உள்ள கலயங்கள் எல்லாம் காலத்தால் முற்பட்டவை.

இப்ப நாம் எடுத்திருக்கிற பொருட்களை ஆய்வுக்குட்படுத்தி இருக்கோம். அறிக்கை வந்தபிறகுதான் சரியான ஆண்டுகளைச் சொல்ல முடியும்.ஆதிச்சநல்லூர்ல நமக்கு பானை, கத்தி, வாள், தங்கம், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் எல்லாம் கிடைச்சது. இங்கேயும் கள ஆய்விலும், தனிநபர்கள் எடுக்கும்போதும் வெண்கலத்தாலான பாத்திரங்கள் கிடைச்சிருக்கு. கூடவே, செம்புப் பொருட்களும் கிடைச்சிருக்கு.

ஆனா, செம்புக்காலம்னு சொல்லமுடியாது. செம்புக் காலமா இருந்தா அதில் இரும்பு கிடைக்கக்கூடாது. அப்பதான் முழு செம்புக்காலமா நாம் அறியமுடியும். இரும்புப் பயன்பாடு வந்திட்டா இரும்பும் பயன்படுத்தியிருக்காங்கனு அர்த்தம். அதனால, இதை நாம் இரும்புக்காலத்திற்கு கொஞ்சம் முற்பட்ட காலம்னு சொல்றோம். இப்ப எடுத்திருக்கிற பொருட்களை ஆய்வு சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புறோம்.

குறிப்பா, மரபு சம்பந்தமான விஷயங்களை எல்லாம் மதுரைப் பல்கலைக்கழகத்துல பண்றோம். இந்தப் பானைகளின் பண்புகளையும், காலத்தையும் தெரிஞ்சுக்க லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி நிறுவனத்துக்கு அனுப்புறோம். அப்புறம், இரும்புப் பொருட்கள் சம்பந்தமான ஆய்வை பெங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்ல பண்றோம். அடுத்து, மனித மற்றும் விலங்கு எலும்புகளை எல்லாம் புனே டெக்கான் கல்லூரிக்கு அனுப்புறோம்.

இப்படி பத்து, பனிரெண்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கோம். அவங்க ஆய்வுகள் எல்லாம் குறைந்தபட்சம் ஆறு மாசங்களாவது நடக்கும். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 20 முதுமக்கள் தாழிகள் கிடைச்சிருக்கு. அதை ஆய்வுக்கு அனுப்பியிருக்கோம். மண் கலயத்தில் நெல் கிடைச்சிருக்கு. அதையும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கோம்.

அந்தப் பகுதிகள்ல மேற்பரப்பு ஆய்வும், கள ஆய்வும் கடந்த ரெண்டு ஆண்டுகளா பண்ணிட்டு இருக்கோம். சிந்து சமவெளி நாகரிகம் ரயில் டிராக் போடும்போது கிடைச்சது. கீழடி யிலும் கிணறு தோண்டும்போதே வாழ்விடம் கிடைச்சது. அதுபோல இங்கேயும் எதிர்காலத்துல கிடைக்கலாம்னு நம்பிக்கையா ஆய்வு செய்றோம்.

எதிர்பாராமல் கிடைச்சால் சந்தோஷம்.பொதுவா இரும்புக்காலம், பெருங்கற்காலம், சங்ககாலம் இந்த மூன்றையும ஒரே காலம்னு சொல்றோம். இதற்கு முந்தைய மக்கள்தான் முதுமக்கள் தாழியில் புதைச்சிருக்கிறாங்க. அதனால, ஆதிச்சநல்லூர் இரும்புக்காலத்தின் தொடக்கம்னு சொல்றோம். சிவகளை அதுக்கும் முன்னாடி இருக்க வாய்ப்பிருக்கு. அதாவது, கி.மு 1000க்கும் முன்னாடி இருக்கலாம்...’’ என்கிறார் டாக்டர் சிவானந்தம்.

பேராச்சி கண்ணன்