மருத்துவக் கல்லூரிகளை பிசினஸ் செக்டாராக அரசு பார்க்கவேண்டும்!



சீனாவில் மட்டும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால், அவர்களை சீனா இன்னும் உள்ளே அனுமதிக்கவில்லை. நீண்ட நாட்களாக கல்லூரி செல்லாமல்  இருப்பதால் கல்வி கெடுகிறது என்கிறது ஒரு செய்தி.
ஒவ்வொரு முறை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போதும், யாராவது சில நண்பர்கள் தங்களது குழந்தைகளை ஏதாவது ஒரு நாட்டுக்கு மருத்துவம் படிக்க அனுப்புவதற்கு அலைவதைக் காண முடியும். பிலிப்பைன்ஸில் சீட் இருக்கிறது, ரஷ்யாவை விட ரேட் சல்லிசாக இருக்கும் என்று ஆள் பிடிக்கும்  சிலரையும் பார்க்க முடிகிறது.

சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வேறு பல நாடுகளுக்கும் செல்லும் மாணவர்களைக் கூட்டிப்  பார்த்தால் ஒரு லட்சத்துக்கு மேல் வரும். அதையும் விடக் கூடுதலாக இருக்கலாம். இது ஒரு potential ஆன ஏரியா. ஆனால், நீட் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அரசு கூத்தடிக்கிறது. இறுதியில் பணம் மட்டுமே பிரதானம். பணம் இல்லாதவர்கள்தான் நிறைய படிக்கவேண்டும், பரீட்சை எழுதவேண்டும் என்று ஆகியிருக்கிறது. ஆனாலும் இதை வேறு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.

மெடிக்கல் காலேஜ்களில் இருக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அரசு துரிதமாகச் செயல்படவேண்டும். எப்படியும் வெளிநாடு செல்லும் மாணவர்களைத் தடுத்துவிட முடியாது. அதற்கு நிறைய காரணிகள் உண்டு. ஆனால், அவற்றைக் கணிசமான அளவுக்குக் குறைக்க முடியும்.

இதை ஒரு பிசினஸ் செக்டாராகப் பார்த்தால் அரசு செய்வதற்கு நிறைய இருக்கிறது. குறிப்பாக மத்திய அரசு. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. சென்ற ஆட்சியில் 12 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அதை விரைவுபடுத்தும் வேலைகளில் ஈடுபடப்போவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். அது ஒன்றே வழி. ரொம்பவும் இறுக்கமாக எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள முடியாது.

பணம் இருப்பவர்களுக்கு சல்லிசான விலையில் வாசல்களைத் திறப்பதற்கு நிறைய நாடுகள் காத்திருக்கின்றன. வெறும் தூய்மைவாதம் மட்டும் உதவாது. அரசு இதை ஒரு பிசினஸ் செக்டாராகவும் பார்க்கவேண்டும். நிறைய எஞ்சினியரிங் கல்லூரிகள் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்களும் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தரும் விவகாரத்தில் கடுமை காட்டுகிறது. அது ஒரு பெரிய மாஃபியா நெட்வொர்க். நிறைய பணம் புழங்கும் இடம். இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் தேசாய் வீட்டில் டன் டன்னாக தங்கம் எடுத்தார்கள், நினைவிருக்கிறதா? தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தருவதற்கு லஞ்சமாகப் பெற்ற பணம் அது. இப்போதும் அதுதான் நிலைமை. பெரிய அளவில் மாறவில்லை.

Potential பிசினஸ் வாய்ப்பு உள்ள இடத்தில் நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கையில், பணம் வைத்திருப்பவர்கள் சாத்தியம் உள்ள எல்லா வழிகளையும் முயன்று பார்ப்பார்கள்தான்.
இதில் இன்னொன்றும் இருக்கிறது. அரசு அனுமதிகளைப் பொறுத்தவரை நேர்மையான அதிகாரிகளே கொடும் சர்வாதி காரிகள். ஊழல் அதிகாரிகள் ஆங்காங்கே இருக்கப்போய்தான் நம்மால் உயிர் வாழவே முடிகிறது. கறாரான அதிகாரிகள் நமக்குப் பால் ஊற்றிவிட்டுத்தான் ஓய்வார்கள்.

அரசின் ஏதாவது ஒரு துறையோடு, அனுமதி சார்ந்த விஷயங்களில் புழங்கும் ஆட்களுக்கு மட்டுமே இதிலுள்ள உண்மை புரியும். கண்றாவியான அரசின் விதி ஒன்று இருக்கும், யதார்த்தத்தில் அது சாத்தியமே இல்லை என்று அந்த அதிகாரி உட்பட அதை டீல் பண்ணும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அந்த அதிகாரி அதைப் பிடித்து தொங்கிக்கொண்டு தாலியறுப்பார். நேர்மை, நீதி ப்ளா ப்ளா வெங்காயம்...

முதலில் அரசு எந்திரத்தை மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாகவும், அரசு அதிகாரிகளை மக்கள் நலனுக்காக தன்னலம் பாராமல் உழைக்கும் ஆட்களாகவும் கற்பனை செய்வதை நாம் நிறுத்தவேண்டும். தனியார் ஒரு சுரண்டல் அமைப்பு என்றால்; அரசு, அதிகாரத்துடன் கூடிய சுரண்டல் அமைப்பு. அதுவும் இந்திய அரசு எந்திரம் காலனிய கால மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரிகள் வாழும் கோட்டை. அரசும், தாராளவாதமும் இணைந்தே பயணிக்க முடியும். இந்த மருத்துவ விவகாரம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்!  

ஜி.காரல் மார்க்ஸ்