கீஹோல் ஃபேஷன்!



கீஹோல் நெக்லைன் அல்லது கீஹோல் கட்... இது 1940களில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் துவங்கிய ஃபேஷன். அரச குடும்பத்து பெண்களின் கவுன்கள், உடைகளில் இதைப் பார்க்கலாம். இப்போதும் இந்த டிரெண்ட் கொஞ்சமும் சளைக்காமல் குர்தா துவங்கி வெஸ்டர்ன் உடைகள், பிளவுஸ், காக்டெயில் டிரெஸ் என எங்கும் எதிலும் விதவிதமாக ஜொலிக்கிறது.
‘‘கரெக்ட்... இந்த கீஹோல் ஃபேஷனுக்கு எந்த ரூல்ஸும் கிடையாது. அதனாலேயே இந்த டிரெண்ட் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி டிரெண்டிலேயே இருக்கு. உடையின் எந்தப் பாகத்திலும் அவரவர் வசதிக்கு தகுந்தா மாதிரி டிசைன் செய்துக்கலாம்...’’ கீஹோல் ஃபேஷனின் தற்போதைய டிரெண்ட் குறித்து விரிவாகப் பேசத் தொடங்கினார் காவ்யா ரெட்டி.

‘‘கீஹோல் - அதாவது சாவித் துளை மாதிரி - குறிப்பா காலர், கழுத்து டிசைன்கள்ல முன்னாடி அதிகம் பயன்படுத்தினாங்க. முழுக்க கவர் செய்த காலர் டிசைன்கள் சிலருக்கு ரொம்ப கச்சிதமா பொருந்தும், பலருக்கு அவ்வளவு சரியா பொருந்தாது. அந்த முழு கவர் செய்த கான்செப்ட்டை உடைக்கத்தான் இந்த சின்ன கீஹோல் தியரி வந்துச்சு. அதிலும் வெஸ்டர்ன் உடைகள்ல ஃபிரில் அல்லது ஃபார்மல் டாப்ஸ்; கவுன்கள்ல முன் அல்லது பின்பக்கம்னு கீஹோல் ஃபேஷன் பயன்படுத்தினாங்க.

ஆனா, இப்போ இந்த டிரெண்ட் மொத்தமா கிளாமர் மோடுக்கு மாறிடுச்சு. எந்த அளவுக்கு கிளாமர் தேவையோ அந்த அளவுக்கு கீஹோல் டிசைன் அளவு வேலை செய்யும். எந்த அளவுக்கு லோ நெக் வேணுமோ அவ்ளோ இந்த கீஹோல் டிசைன் கட்டிங் இருக்கும். இப்போ இந்த கீஹோல் கழுத்து டிசைன் மட்டுமில்லாம இடுப்புப் பகுதி, வயிறு, பேக் சைட் நெக்னு வர ஆரம்பிச்சு பெரிய அளவிலே ஃபேஷன் உலகத்திலே வளர்ச்சி அடைஞ்சிருக்கு. குறிப்பா ஃபேஷன் உலகமும், மாடலிங் உலகமும் இந்த கீஹோல் கான்செப்டை லோ நெக் டிசைன்கள்ல அதிகம் பயன்படுத்துறாங்க...’’ என்னும் காவ்யா எப்படி எல்லாம் கிஹோல் கான்செப்ட் இந்திய உடைகளில் பயன்படுத்தப் படுகிறது... எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் எனவும் விளக்கினார்.

‘‘கீஹோல் கட்டிங்கைப் பொறுத்தவரை அந்தந்த டிசைனர் கையிலேதான் மேஜிக் இருக்கு. உங்க டிசைனர் திறமைசாலின்னா டிசைன்களோ இல்ல பிரிண்டுகளோ எதுவும் இல்லாத சாதாரண மெட்டீரியல்ல கூட கீஹோல் ஃபேஷன் மூலம் ஃபிரில், லேஸ் இதெல்லாம் இணைச்சு கிராண்ட் உடையா மாத்திடு வாங்க.

குறிப்பா பிளவுஸ் பேக் நெக் டிசைன்கள்ல இந்த கீஹோல் கட்டிங்குகளுக்கு மவுசு அதிகம். அதிலேயே ரவுண்டு, முக்கோணம், டைமண்ட், அறுகோணம்னு இப்படி எவ்வளவோ வந்திடுச்சு.
ஒரே ரூல்தான். என்ன டிசைன் என்கிறதிலே டிசைனர் தெளிவா இருக்கணும். கூடவே கொஞ்சம் அசால்ட்டா கட் செய்தாலும் அதீத லோ நெக் அல்லது லோ பேக் நெக் ஆகிடும். எல்லோரும் அதை விரும்ப மாட்டாங்க. இப்போ இந்த கீஹோல் நெட், லேஸ் மெட்டீரியல் குர்திகள், காட்டன் குர்திகள்ல அதிகம் பயன்படுத்துறாங்க.

அதேபோல் பார்ட்டி கவுன்கள், மேக்ஸிகள்லயும் லேஸ் இணைச்சு இந்த கீஹோல் டிசைன்கள் சேர்க்கறதும் அதிகமா பரவுது. அவங்கவங்க லிமிட் என்னவோ அந்த அளவுக்கு அளவைக் கூட்டி, குறைச்சு டிசைன் செய்து மாஸ் காட்டலாம்...” என்கிறார் காவ்யா ரெட்டி.

ஷாலினி நியூட்டன்