விஜயகாந்தை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்!



கோடிக்கணக்கான ரூபாய் இருந்தால்தான் சினிமா எடுக்க முடியும் என்ற நிலை இப்போது உள்ளது. முன்பு லட்சக்கணக்கில் ரூபாய் இருந்தால்தான் சினிமா எடுக்க முடியும்.
ஆனால், அப்போதே சில ஆயிரம் ரூபாய் இருந்தால் படம் எடுக்க முடியும் என நிரூபித்த இயக்குநரில் இவர் முக்கியமானவர்.

‘எங்கு பார்த்தாலும் எங்க டைரக்டர் படம்தான்  எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரே நேரத்தில் பல படங்கள் எடுக்கப்பட்டதால், வெள்ளிக்கிழமை என்றால் அவர் படம் ரிலீஸாகும்...’ என்று தனது இயக்குநரைப் பற்றி பெருமையாக சொல்கிறார் தேசிய விருது பெற்ற இயக்குநர் கருணாநிதி என்கிற அகத்தியன்.
அவரது குருநாதர்  வேறு யாருமல்ல... கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி எம்.ஏ.காஜா. தமிழ்த் திரையுலகில் கேப்டன் என அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்தின் உண்மைப் பெயர் விஜயராஜ். ஆனால், அவருக்கு 1979ம் ஆண்டு, தான் இயக்கிய ‘இனிக்கும் இளமை’ படத்தில் விஜயகாந்த் என பெயர் சூட்டியவரே இந்த காஜாதான்.

தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர், இயக்குநராக அறியப்பட்ட கங்கை அமரனை இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் எம்.ஏ.காஜாதான். கங்கை அமரன் முதலில் இசையமைத்தது மலேசியா வாசுதேவன் ஹீரோவாக நடித்த ‘மலர்களிலே அவள் மல்லிகை’ படத்திற்குத்தான். ஆனால், படம் பாதியில் கைவிடப்பட்டது.

இதன் பின் எம்.ஏ.காஜா 1979ம் ஆண்டு இயக்கிய ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’  திரைப்படம் மூலம்தான் கங்கை அமரன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் சுபா போன்று இன்று எத்தனையோ இரட்டையர்கள் கதை, வசனம் எழுதுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் அதற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் எம்.ஏ.காஜாதான். தனது நண்பர் ராம.நாராயணனுடன் சேர்ந்து ராம் - ரஹீம் என்ற பெயரில் பல வெற்றிப் படங்களுக்கு கதை எழுதினார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ கவர்ந்திழுக்கும் கவர்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்தவை எம்.ஏ.காஜா எடுத்த படங்கள். பாகவதர் கிராப்புடன் 1980 காலக்கட்டங்களில் தனது படங்களில் விஜயன், சுதாகரை நடிக்க வைத்து  வெற்றிக் கொடி நாட்டியவர். அழுத்தம் திருத்தமான கதை அம்சங்களுடன் விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளைச் சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட காஜாவின் படங்களில் கதை இருந்தது. ஏனெனில், அவரது குருநாதர் துரை வழியிலேயே தனது பயணத்தையும் தொடர்ந்தார். விசுவிற்கு முன்பே குடும்பக்கதைகளின் குருநாதர் இந்த காஜாதான்.

‘இனிக்கும் இளமை’, ‘வள்ளி மயில்’, ‘தெருவிளக்கு’, ‘பவுர்ணமி நிலவில்’, ‘பணம் பெண் பாசம்’, ‘காதல் காதல் காதல்’, ‘வசந்தகாலம்’, ‘மீண்டும் சந்திப்போம்’, ‘கண்ணாடி’, ‘எங்கம்மா மகராணி’, ‘செல்வாக்கு’, ‘மாந்தோப்புக் கிளியே’, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’, ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். நடிகை  ஸ்ரீபிரியா எழுதிய கதையை ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்ற பெயரில் எம்.ஏ.காஜாதான் இயக்கினார். நகைச்சுவையுடன், வாழ்வியலின் அவலத்தை எடுத்துரைத்த காஜாவின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், கதையம்சத்துடன் பொருந்தியவை.

ஆனால், இப்படி ஒலித்த பல பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் எழுதியதாகவே இசைத்தளங்களில் தவறாகப் பதிவாகியுள்ளன. உண்மையில் இந்தப் பாடல்களை எழுதியவர் எம்.ஏ.காஜா என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. 1979ம் ஆண்டு காஜா இயக்கிய ‘இனிக்கும் இளமை’ படத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சங்கர்- கணேஷ் இசையில் ஆண் குரலுக்குப் பதில் இரண்டு பெண் குரல்களில் பாடல் ஒலித்தது. பி.வசந்தா, ரமணி ராமமூர்த்தி பாடிய  ‘அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு...’ என்ற அந்தப் பாடலை எம்.ஏ.காஜா எழுதினார். இந்தப் படத்தின் தலைப்பை வைத்து வாணி ஜெயராம் பாடிய இனிமையான பாடலையும் காஜாதான் எழுதினார்.

அந்தப் பாடல் -
இனிக்கும் இளமை
என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை
உன்னிடம் இருக்கு
இங்கே பார்
என்னைப் பார்
தங்கம் போலே
மின்னும் பெண்ணின்
அங்கம் பார்...

1979ம் ஆண்டு காஜா இயக்கத்தில் மிகப்பெரிய  வெற்றியை ஈட்டிய படம்  ‘மாந்தோப்புக் கிளியே’.  இப்படத்தில் இடம் பெற்ற சுருளிராஜனின் கஞ்சத்தன காமெடி இன்றுவரை நினைத்து நினைத்து சிரிக்கக்கூடியவை. இப்படத்தில் மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் பாடிய -

மாந்தோப்புக் கிளியே
மச்சானப் பாரு
மனச்சாந்தி காண
மனசாரப் பழகு பழகு...

என்ற அற்புதமான பாடலை காஜாதான் எழுதினார். இலங்கை வானொலியில் நேயர் விருப்ப பாடலாக அதிகம் ஒலித்தது இந்த பாடல்தான். இப்படத்தில் வாணி ஜெயராம், குழுவினர் பாடிய ‘புள்ளிமான் போலே துள்ளித் துள்ளி ஓடும்...’ பாடலையும் அவர்தான் எழுதினார்.

1980ம் ஆண்டு வெளியான ‘வள்ளிமயில்’ படத்தில் சங்கர்- கணேஷ் இசையில்  வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் பாடிய  ‘ஆத்தங்கரை ஓரம் காத்திருக்கும் நேரம்...’ என்ற பாடல் காஜா கற்பனையில் உதித்ததுதான்.

இதே படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்பி.சைலஜாவின் அழகிய டூயட் ‘அம்மம்மா... எத்தனை எத்தனை மாற்றம்...’ பாடலையும் காஜாதான் எழுதினார்.  இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ‘கடவுள் என்று சொன்னாலும்...’ என்ற தேச ஒற்றுமைப் பாடலும், வாணி ஜெயராம் பாடிய -

கருவாட்டுக் கொழம்ப வச்சா
கண்ணால வல விரிச்சா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா...

குத்துப் பாடலும் இயக்குநர் என்பதைத் தாண்டி காஜா என்ற பாடலாசிரியரை பளிச்செனத் தெரிய வைத்தது.1980ம் ஆண்டு காஜா இயக்கிய ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ படத்திற்கு சங்கர்- கணேஷ் இசையமைத்தனர். வாணி ஜெயராம் பாடிய ‘ஏனம்மா... சிவந்தது இந்தக் கன்னம்...’ என்ற கிராமத்து கீதம் காஜாவின் கற்பனைக்கு சான்று. இதே படத்தில் வாணிஜெயராம் மற்றும் குழுவினர் பாடிய ‘தும்பைப்பூ முகத்தில் துளசிப் பூ விழிகள்...’ பாடல் அற்புதமான கற்பனை.

1980ம் ஆண்டு காஜா இயக்கிய ‘கண்ணாடி’ படத்திற்கு வி.குமார் இசையமைத்தார். இப்படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா பாடிய ‘ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று அளவோடு பெற்று வளமோடு வாழு...’ பாடலை காஜா எழுதினார்.  1981ம் ஆண்டு காஜா இயக்கிய ‘எங்கம்மா மகராசி’ படத்தில் வாணி ஜெயராம் பாடிய ‘அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ...’ பாடலுக்கு சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் வழங்கிய மெல்லிசையை இன்றும் ரசிக்கலாம். பாடலாசிரியர்  காஜாதான்.

1983ம் ஆண்டு வெளியான ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும்’ படத்தில் ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடிய  ‘ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்...’ என்ற அழகிய பாடலை எழுதியவர் காஜா.
தமிழ் சினிமாவில் குரல் மொழியால் மட்டுமின்றி உடல்மொழியாலும் சிரிக்க வைத்த நடிகர் சுருளிராஜனின் எவர்க்ரீன் படமான ‘வசந்தகாலம்’ படத்தை எம்.ஏ.காஜா இயக்கினார். இப்படத்தில் சுருளிராஜனுக்காக குரலை மாற்றி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய புகழ் பெற்ற பாடலிது.

கொஞ்சம் ஒதுங்கு நான்
தனியா பேசணும் உன்னோட
சின்னச் சிட்டு வாடி சுகம்
அள்ளிக் கொஞ்சம் தாடி
சின்னக் கடை
பன்னீரா சேர்ந்துக்கடி...

சங்கர்-கணேஷ் இசையில் இந்தப் பாடலை எழுதியவர் இயக்குநர் எம்.ஏ. காஜாதான். 1986ம் ஆண்டு எம்.ஏ.காஜா இயக்கத்தில்  வெளியான படம் ‘செல்வாக்கு’. சந்திரபோஸ் இசையில் வித்யா, சிவராஜன் பாடிய ‘பத்து மாசம் சுமந்தவ பெரும் பயணம் போகிறாள்...’ என்ற  சோகப்பாடலையும் காஜாதான் எழுதினார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மண்ணைச் சேர்ந்த காஜாவின் கற்பனை வளம், தமிழ்த் திரையிசையில் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்றால் அது மிகையில்லை.

ப.கவிதா குமார்