சீனாவின் உயிரியல் போர்தான் கொரோனாவா? தொடரும் மர்மங்கள்!



கடந்த 2019ம் ஆண்டில் நாவல் கொரோனா வைரஸ் எனும் கொடும் கிருமி சீனாவில் உள்ள வூஹானில் முதன் முதலாக வெளிப்பட்டு, ஒரு பெருந்தொற்றாய் பேருருகொண்டு புவியெங்கும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தக் கிருமி எங்கிருந்து வந்தது? ஒரு வெளவாலில் இருந்து மனிதனுக்குப் பரவியதா? வூஹானின் சந்தையிலிருந்து பரவியதா? இந்த சதிக்கோட்பாடுகள் சொல்வதுபோல், வூஹானின் வைரஸ் இன்ஸ்டிட்டியூட்டில் இருந்து விபத்தாகத் தப்பி உலகம் முழுதும் பரவியதா? சதிக்கோட்பாட்டின் இன்னொரு தரப்பு சொல்வது போல், வேண்டுமென்றே செயற்கையான மரபணு முடுக்கம் செய்யப்பட்ட உயிரியல் போரா இந்த வைரஸ்?

கேள்விகள் விடையற்று நீண்டுகொண்டே இருக்கின்றன. வாதப் பிரதிவாதங்களும் நீள்கின்றன. விடைதான் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், சீனாவின் உயிரியல் போர்தான் இது என்ற வாதமும் இயற்கையின் மாறுபாடுதான் கொரோனா என்ற வாதங்களும் சமீபமாக கொஞ்சம் பின் நகர்ந்து, ஆய்வகப் பரிசோதனைகளிலிருந்து தப்பியிருக்கலாம் என்கிற தரப்பு சற்று வலுவாகிக் கொண்டிருக்கிறது.
முதல் தியரியான கொரோனா இயற்கையாக உருவானது என்பது நிகழ்வதற்கு வாய்ப்பு அதிகம். முன்பும் கொரோனாவின் கொடிவழி முன்னோரான சார்ஸ் மற்றும் மெர்ஸ் தொற்றுகள் இப்படி வெளவால் உள்ளிட்ட விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கின்றனதான். ஆனால், அப்போதெல்லாம் விஞ்ஞானிகள் எந்த விலங்கு மூலம் இது மனிதர்க்கு பரவியது என்பதை விரைவிலேயே கண்டறிந்துவிட்டார்கள்.

ஆனால், கொரோனா பரவத் தொடங்கி ஒன்றரை வருடங்களாகியும் கொரோனாவுக்கும் நமக்கும் பாலமாக இருந்த அந்த உயிரினம் எது என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலவில்லை.மறுபுறம் இரண்டாவது தியரியான கொரோனா ஒரு பரிசோதனைக் கூடத்திலிருந்து தெரியாத்தனமாகத் தப்பித்துப் பரவியிருக்கலாம் என்பதற்கு நிறைய சாத்தியங்கள் தென்படு கின்றன.

இப்படி தப்பித்து வந்த வைரஸானது ஆய்வுக்காக வைத்திருந்த ஒரிஜினல் வைரஸாகவும் இருக்கலாம் அல்லது ஆய்வகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். ஏற்கெனவே இருக்கும் வைரஸை மரபணு முடுக்கம் செய்வதன் மூலமும், அதன் உடலில் புரதத்தை செலுத்துவதன் மூலமும் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவது சாத்தியம்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆய்வகக் கசிவுக் கோட்பாடு ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு சாத்தியமென்ன? முதலில் வூஹானில் பரவியது என்பதுதான் அடிப்படை சந்தேகம் என்கிறார்கள்.

கொரோனாவுக்கு காரணமான வெளவால்கள் வூஹானிலிருந்து  ஆயிரத்து அறுநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன. அப்போது அந்த வெளவால்கள் வூஹானில் இருந்த ஒரே இடம் வைரஸ் ஆய்வகம்தான். அங்கு ஏற்கெனவே வெளவால் மூலம் பரவும் கிருமிகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வந்திருக்கின்றன. அதே போல், வூஹான் விலங்குகள் சந்தையில் எந்த விலங்குக்குமே கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருந்திருக்கவில்லை.

ஆக, வூஹானில் இரண்டு ஆய்வகங்களில் கொரோனா ஆய்வும் நடந்துகொண்டுதான் இருந்திருக்கிறது என்ற நிலையில் அங்கிருந்து தான் கொரோனா பரவியிருக்கும் என்பதைச் சொல்ல ஒருவர் நிபுணராக இருக்க வேண்டியதில்லைதானே என்று கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.கடந்த 2012ம் ஆண்டு சீனாவின் மியோஜியாங் தாமிரச் சுரங்கத்தில் தூய்மைப்  பணிக்குச் சென்ற ஆறு பணியாளர்கள் கொரோனாவைப் போன்ற நோய்க்குறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் அதில் மூவர் இறந்ததும், அதனைத் தொடர்ந்து வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளவால் பெண்மணி எனப்படும் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு பலமுறை அந்த சுரங்கங்களுக்குப் போய் ஆய்வகத்திலிருந்து வைரஸ் கிருமியை எடுத்து வந்து வூஹான் ஆய்வகத்தில் வைத்து தொடர் பரிசோதனைகள் செய்திருந்ததையும் பற்றி ஏற்கெனவே 25-06-2021 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.

அந்த சுரங்கத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் கொரோனாவால்தான் இறந்திருக்கிறார்கள். அந்த வைரஸையே பெயர் மாற்றி ஆய்வகத்தில் வைத்து மரபணு முடுக்கம் செய்திருக்கிறார்கள். பின்னர் எதிர்பாராதவிதமாக அது எப்படியோ கசிந்திருக்கிறது. இதற்கான நடைமுறைச் சாத்தியம் மிக அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.கடந்த 2009ம் ஆண்டு முதலே அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சிக்கான முகவாண்மை அமைப்பு (USAID) ஒரு பெருந்தொற்று எச்சரிக்கை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

உலகில் உள்ள வைரஸ்களை எல்லாம் சேகரித்து, அவற்றின் ஜெனோம்களை வரிசைப்படுத்தி, அவற்றை மரபணு மாற்றம் செய்து, ஒரு வைரஸ் எப்படி மனிதரிடம் பரவுகிறது என்பதை எல்லாம் கண்காணித்து இந்த ஆய்வுப் பணியைச் செய்துகொண்டிருக்கிறது. ப்ரெடிக்ட் (PREDICT) எனப் பெயரிடப்பட்ட இந்த ப்ராஜெக்ட்டில் ‘எக்கோ ஹெல்த் அலையன்ஸ்’ என்ற நிறுவனத்துடன் வூஹான் வைரஸ் இன்ஸ்டிட்டியூட்டும் இணைந்தே பணியாற்றியிருக்கிறது.

சீனாவில் வைரஸ் தொற்றுகளைப் பரப்பும் சாத்தியமுள்ள வெளவால்கள் அதிகம் என்பதால், இங்கிருந்து நிறைய மாதிரி களும் தரவுகளும் இந்த ஆய்வுக்காகச் சென்றிருக்கின்றன. அமெரிக்காவும் ஆய்வு தொடர்பான பல தரவுகளையும் தகவல்களையும் வூஹான் வைரஸ் இன்ஸ்டிட்டியூட் நிறுவனத்துக்குப் பகிர்ந்திருக்கிறது.இந்த வூஹான் ஆய்வகத்தில் மட்டும் இப்புவியிலேயெ அதிகமான அளவுக்கு வெளவால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இங்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான வெளவால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன. அதில் ஆயிரத்து 322 மாதிரிகள் மோஜியாங் தாமிரச் சுரங்கத்திலிருந்து வந்தவை என்பது குறிப்படத்தக்கது.

2015ம் ஆண்டு முதலே உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் பெருந்தொற்றாக மாறச் சாத்தியமான வைரஸ் கிருமிகள் தொடர்பான பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதில், எபோலா, மார்பர்க், ஜிகா, லஸா, காங்கோ கிரிமினா, சார்ஸ், மெர்ஸ், நிபா, ரிஃப்ட் போன்றவை அடக்கம். இவற்றுக்கு தடுப்பூசிகளோ மருந்துகளோ இதுவரை இல்லை. எனவே, இவை தொடர்பான ஆய்வுகளை முடுக்க வேண்டுமென  உலக சுகாதார நிறுவனம்  தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 2018ம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட எக்ஸ் வகை நோய் இந்தப் பட்டியலில் இணைந்தது. இதுதான் அடுத்த பெருந்தொற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தடுப்பதற்கான உலக வைரஸ் ப்ராஜக்ட் ஒன்று யூசெட் நிதியுடன் தொடங்கப்பட்டது. இந்த ப்ராஜக்ட், பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் வாழும் 16 லட்சம் வைரஸ்களைக் கண்டறியவும் அட்டவணைப்படுத்தவும், அவற்றில் மனிதர்க்கு தீமையை விளைவிக்கும் வைரஸ்களைக் கண்காணிக்கவும் முயன்றது.

இந்தத் திட்டத்தில் டென்னிஸ் கரோல், பீட்டர் டஜாக், ஜோன்னா மசெட், காவோ ஃபூ போன்ற விஞ்ஞானிகள் இருந்தனர். 2016ம் ஆண்டே இத்தாலியில் இதற்கான விதை ஊன்றப்பட்டது என்றாலும் இந்த ஆய்வு 2018ம் ஆண்டுதான் சூடு பிடித்தது. இதில், எக்ஸ் வைரஸ் தொடர்பான ஆய்வு நடைபெற்றது. அதுதான் இன்றைய கொரோனாவா என்கிற கேள்வி இப்போது ஆய்வாளர்களிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.மூன்று தியரிகளில், பரிசோதனைக் கூடத்திலிருந்து தப்பி வந்த வைரஸ்தான் கொரோனா என்பதற்கும், அதுவும் செயற்கையான மரபணு மாற்றம் செய்யப்பட்ட கிருமிதான் அது என்பதற்குமான சாத்தியக்கூறுகள் அதிகமாகத் தென்படுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு ஒரு சர்வதேச ப்ராஜக்ட் என்பதும், இதில் அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் பங்கெடுத்திருந்தன என்பதும் இந்த ஆய்வுக்கூட கிருமியைத்தான் சீனா கசியவிட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள் சதிக்கோட்பாட்டை நம்பும் ஒரு தரப்பினர். எது உண்மை என்பதை காலம்தான் சொல்லும். ஏனெனில் உண்மையைக் குழிதோண்டிப் புதைத்தாலும் அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும். ஆனால், அதுவரை மனிதன் தன் கோணல் புத்தியால் பூமியை ஒன்றும் செய்துவிடாமல் இருக்க வேண்டும். அதுதான் கவலை.

இளங்கோ கிருஷ்ணன்