Family Tree - பாஸ்தாவில் பிஸ்தா



‘‘ஒவ்வொரு இத்தாலியக் குடிமகனும் வருடந்தோறும் குறைந்தபட்சம் 25 கிலோ பாஸ்தாவை உணவாக எடுத்துக்கொள்கிறான்...’’ என்று ஓர் ஆய்வு சொல்கிறது. இந்தளவுக்கு இத்தாலியின் இன்றியமையாத உணவாக பாஸ்தா மாறியதற்கு மூல காரணம், ‘பரில்லா’. 144 வருடங்களாக இயங்கிவரும் குடும்ப நிறுவனம் இது. பாஸ்தா தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமும் ‘பரில்லா’தான். இத்தாலி மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாஸ்தா முக்கிய உணவாக பரிணமிக்க காரணமும் இந்நிறுவனமே.

16 பிராண்டுகளில் பாஸ்தா, சாஸ், கேக், பிஸ்கட் வகைகள், நொறுக்குத் தீனிகள் என ஏராளமான உணவு வகைகளைத் தயாரிக்கிறது இந்நிறுவனம். 160 விதமான வடிவங்களிலும் அளவுகளிலும் இதன் பாஸ்தா கிடைக்கிறது.

*பியட்ரோ பரில்லா

இத்தாலியிலுள்ள பார்மா எனும் நகரம். அங்கே 1845ம் வருடம் பிறந்தார் பியட்ரோ பரில்லா. இவருடன் சேர்த்து வீட்டில் பத்து குழந்தைகள். இவ்வளவு குழந்தைகளையும் வளர்ப்பதே பெற்றோர்களுக்கு பெரும்பாடாகிவிட்டது. இந்நிலையில் பியட்ரோவின் தாத்தா அருகிலிருந்த ஒரு ஊரில் பேக்கரி தொழில் செய்துவந்தார். பேக்கரி தொழிலைத் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொள்வதற்காகத் தனது இரண்டு அண்ணன்களுடன் சென்றார் பியட்ரோ. அப்போது அவருக்கு வயது 12.

ரொட்டி, பாஸ்தா தயாரிப்பதற்கான செயல்முறைகள் பியட்ரோவுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. வேலை முடிந்ததும் வீட்டுக்குக்கூட செல்லாமல் பேக்கரியிலேயே தங்கிவிடுவது அவரது வழக்கம். 14 வயதிலேயே தனியாக ரொட்டியும் பாஸ்தாவும் தயாரிக்கக் கற்றுக்கொண்டார். தாத்தாவிடம் தொழில் கற்றுக்கொண்ட அண்ணன்கள் இருவரும் தனியாக பேக்கரியைத் திறந்தனர். அவர்களிடமும் சில வருடங்கள் வேலை செய்தார் பியட்ரோ.

அப்போது மற்ற வேலைகளைப் போலவே பேக்கரி பிசினஸிலும் குறைவான வருமானமே கிடைத்தது. காரணம், மக்கள் பெரிதாக பேக்கரி உணவுகளை விரும்பவில்லை; தெருவுக்குப் பத்து பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டனர். இந்த அனுபவத்தால் தனியாக ஒரு பேக்கரியைத் திறக்க பியட்ரோ முன்வரவில்லை. வருடங்கள் வேகமாக உருண்டோடியது. பாஸ்தாவும் ரொட்டியும் இத்தாலிய மக்களின் விருப்பமான காலை உணவாக விஸ்வரூபம் எடுத்தது. நாடு முழுவதும் பேக்கரித் தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இதுதான் சரியான தருணம் என்று 1877ம் வருடம் பார்மா நகரின் மத்திய பகுதியில் ரொட்டி, பாஸ்தாவுக்கு என்று பிரத்யேகமான ஒரு பேக்கரியைத் திறந்தார் பியட்ரோ. இதுதான் மாபெரும் பாஸ்தா சாம்ராஜ்யமான ‘பரில்லா’வின் ஆரம்பம். ‘‘உணவு என்பது ரொம்பவே உணர்வுபூர்வமான விஷயம். அது குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என சகலமானவர்களையும் சென்றடைகிறது. தவிர, ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அதனால் வேறு எந்த பிசினஸை விடவும் அதிக பொறுப்பு வாய்ந்தது உணவு பிசினஸ். இதில் நஷ்டம் ஏற்பட்டாலும் கூட தவறு செய்யக்கூடாது...’’ என்பது பியட்ரோவின் பிசினஸ் கொள்கை.

அதனால் வீட்டிலேயே ரொட்டியையும் பாஸ்தாவையும் தயார் செய்தார். அப்படி தயாரிப்பதை குழந்தைகளுக்குக் கொடுத்தபிறகு தான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார். மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அன்றன்றைக்குத் தயாராகும் புது ரொட்டியைத்தான் விற்பார்.

தினமும் விற்காமல் மீதமாகும் ரொட்டிகளை அடுத்த நாள் வரை வைத்து அவர் விற்பனை செய்வதில்லை. வேண்டுபவர்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிடுவார். பாஸ்தாவையும் ஒரு சில நாட்களுக்கு மட்டும்தான் கடையில் வைத்திருப்பார். இது அவருடைய பேக்கரியை மற்ற கடைகளில் இருந்து வேறுபடுத்தியது.

இதனால் ஆரம்ப நாட்களில் அவருக்கு நஷ்டம் கூட ஏற்பட்டது. இருந்தாலும் அவர் மீதமாகும் ரொட்டியையோ, பாஸ்தாவையோ விற்கவே இல்லை. நாளடைவில் தினசரி தயாராகும் ரொட்டியும் பாஸ்தாவும் காலைவேளையிலேயே விற்றுத்தீரும் அளவுக்கு பிசினஸ் எகிறியது. பார்மாவைச் சுற்றியும் கடைகளைத் திறந்தார் பியட்ரோ. அதுவும் நன்றாகப் போக குடும்ப பிசினஸ் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டது.

*ரிக்கார்டோ பரில்லா

பியட்ரோவிற்குப் பிறகு அவரது மகன்களான ரிக்கார்டோ மற்றும் குவல்டியரோவின் கைகளுக்கு பிசினஸ் வந்தது. குறிப்பாக ரிக்கார்டோ 13 வயதிலேயே குடும்ப பிசினஸில் இறங்கிவிட்டார்.

ரொட்டி, பாஸ்தா தயாரிப்பதற்கான மாவு மூட்டைகளை பக்கத்திலிருக்கும் மில்லில் இருந்து எடுத்து வருவதற்காக ரிக்கார்டோவைத்தான் தந்தை அனுப்புவார். ரிக்கார்டோவும் மரத்திலான வண்டியை கைகளாலே இழுத்துக்கொண்டுபோய் மாவு மூட்டைகளை அள்ளிவருவார்.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் வண்டியை இழுகக வேண்டும். மாவு மூட்டை வந்தபிறகு ரிக்கார்டோவும் தந்தையும் இணைந்து செங்கல்லில் ஆன அடுப்பில் ரொட்டியைத் தயார் செய்வார்கள். தினமும் 18 மணி நேரம் உழைப்பார் ரிக்கார்டோ. ரொட்டி தயாரிக்க ரிக்கார்டோவின் சகோதரியும் உதவியாக இருப்பார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அம்மா கவனித்துக் கொள்வார். இப்படி மொத்த குடும்பமும் பிசினஸில் இயங்கியது. குடும்ப உறுப்பினர்களின் கூட்டுப் பங்களிப்பால் மட்டுமே பிசினஸை நல்ல இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதை சின்ன வயதிலேயே ரிக்கார்டோ கற்றுக்கொண்டார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாஸ்தாவுக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கின. 1910ல் குவல்டியரோவுடன் சேர்ந்து பாஸ்தா தயாரிப்பதற்காக பிரத்யேகமாக ஓர் ஆலையைக் கட்டினார் ரிக்கார்டோ. இதில் இத்தாலிய பேக்கரித் தொழில்துறைக்குப் புதுவிதமான அடுப்புகளை அறிமுகப்படுத்தினார். அந்த ஆலையில் ஆரம்ப நாட்களில் தினமும் 2000 கிலோ ரொட்டியும், 8000 கிலோ பாஸ்தாவும் உற்பத்தியானது. 8 பேர் வேலை செய்தனர். அடுத்த சில வருடங்களிலேயே 80 ஆயிரம் கிலோ பாஸ்தாவை உற்பத்தி செய்யும் நிறுவனமாக வளர்ந்தது ‘பரில்லா’.

பார்மா மட்டுமல்லாமல் அதைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் பாஸ்தாவையும் ரொட்டியையும் விநியோகிக்க ஆரம்பித்தார் ரிக்கார்டோ.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரிக்கார்டோவின் வாரிசு களான ஜியானி மற்றும் பியட்ரோவின் கைகளுக்கு பிசினஸ் வந்தது. இவர்களின் காலத்தில்தான் இத்தாலி முழுவதும் பிசினஸ் விரிவடைந்தது. ஜியானி நிர்வாகத்தையும் உற்பத்தியையும் பார்த்துக்கொள்ள; பியட்ரோ விற்பனை, சந்தை, விளம்பரம், மக்கள் தொடர்பைக் கவனித்துக்கொண்டார்.
1950ல் பியட்ரோ அமெரிக்காவுக்குத் தொழில் பயணம் மேற்கொண்டார். சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து பேக்கரி தொழிலில் புதிதாக வந்திருக்கும் தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தல் முறை, பேக்கிங், பெரிய அளவில் விநியோகம் செய்வது குறித்து கற்றுக்கொண்டு வந்தார்.

ரொட்டியும் பாஸ்தாவும் நன்றாக விற்பனையாகி நல்ல லாபம் கிடைத்தாலும் ‘பரில்லா’வுக்கு என்று நிறுவன அடையாளமோ, பிராண்ட் மதிப்போ கிடைக்கவில்லை. அதனால் ‘பரில்லா’வை ஒரு லிமிட்டெட் நிறுவனமாக தகவமைத்தனர். நல்ல லாபம் தந்த ரொட்டி தயாரிப்பைத் துணிச்சலுடன் நிறுத்தி, பாஸ்தாவில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தினார் ஜியானி. காரணம், பாஸ்தா சந்தையில் ‘பிரில்லா’வின் பெயரை அழுத்தமாக பதிவு செய்து, அதன் அடையாளமாக மாற வேண்டும் என்பதே.

பியட்ரோ கற்றுக்கொண்டு வந்த தொழில்நுட்பத்தின் உதவியால் பாஸ்தாவின் உற்பத்தி பெருகியது. பாஸ்தாவை டிரக் வண்டியில் வைத்து அருகிலிருக்கும் ஊர்களுக்கு டெலிவரி செய்தனர்.

1965ல் 1300 பேர் வேலை செய்யும் நிறுவனமாக உயர்ந்தது ‘பரில்லா’. குறிப்பாக விற்பனைப் பிரிவில் மட்டுமே 200 பேர் வேலை செய்தனர். இத்தாலியில் ஒரு நிறுவனம் விற்பனைப் பிரிவில் இவ்வளவு பேரை நியமிப்பது இதுவே முதல்முறை. அத்துடன் தனது தயாரிப்புகளை பேக்கிங் செய்து விற்க ஆரம்பித்தது, ‘பரில்லா’.

இந்நிலையில் இத்தாலி மட்டுமல்லாமல் பல நாடுகளின் முக்கிய காலை உணவாக பாஸ்தா பரிணமித்தது. அதன் தேவை பல மடங்கு உயர்ந்தது. இதைக் கவனித்த சகோதரர்கள், 1969ல் பாஸ்தா தயாரிப்பதற்காக உலகிலேயே மிகப்பெரிய ஆலையை நிறுவினார்கள். அப்போதே தினமும் 10 லட்சம் கிலோ பாஸ்தாவை உற்பத்தி செய்தது அந்த ஆலை. வாடிக்கையாளர்கள் பாஸ்தா என்று கடையில் கேட்காமல், ‘பரில்லா’ என்று பாஸ்தாவைக் கேட்கும் அளவுக்கு நிறுவனத்தின் புகழ் பரவியது. ‘பரில்லா’ ஒரு வணிக முத்திரையாகவே மாறிவிட்டது.

ஆனால், 1970ல் அமெரிக்காவைச் சேர்ந்த வி.ஆர்.கிரேஸ் கம்பெனி என்கிற நிறுவனம் ‘பரில்லா’வின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. அதனால் நிர்வாகம் சில ஆண்டுகள் வி.ஆர்.கிரேஸின் கைக்குப் போனது. அவர்களால் ‘பரில்லா’ குடும்பத்தினர் அளவுக்கு நிறுவனத்தைச் சிறப்பாக நடத்த இயலவில்லை.

1979ல் பியட்ரோ வி.ஆர்.கிரேஸிடமிருந்து ‘பரில்லா’வை வாங்கி மீண்டும் குடும்ப நிர்வாகத்தின் கீழ் நிறுவனத்தைக் கொண்டுவந்தார். நிறுவனத்துக்கு மீண்டும் உயிர் வந்தது. பியட்ரோவுக்குப் பிறகு வந்த தலைமுறைகள் நிறுவனத்தை சர்வதேச அளவில் விரிவாக்கியது. பாஸ்தா மட்டுமல்லாமல் பல பேக்கரி உணவுகளையும் தயாரித்து, அதிலும் வெற்றிக்கொடி நாட்டியது ‘பரில்லா’. இது இன்றும் தொடர்கிறது.

*இன்று

பார்மாவில் தலைமையகம் இயங்கி வருகிறது. வருடந்தோறும் சுமார் 19 லட்ச டன் அளவுள்ள பாஸ்தாவை 100க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது ‘பரில்லா’. 8,500க்கும் மேலானோர் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நான்காம் தலைமுறையைச் சேர்ந்த கிடோ பரில்லா சேர்மனாக இருக்கிறார். கடந்த வருடத்தின் ஆண்டு வருமானம் 34,327 கோடி ரூபாய்!
 
த.சக்திவேல்