வலைப்பேச்சு



@இந்திரா கிறுக்கல்கள் - சமைக்குறதுக்கு ஒரு மணி நேரம் போதும். ஆனா, என்ன சமைக்கலாம்னு முடிவெடுக்கத்தான் மூணு மணி நேரம் யோசிக்க வேண்டியிருக்கு.
‘‘நைட்டுக்கு என்ன டிபன் செய்யலாம்?’’‘‘அட! முதல்ல லன்ச்சை தின்னு தொலைங்கடா!’’

@Paadhasaari Vishwanathan - நாம் சாகவில்லை , சாவைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறோம் - என எங்கோ படித்தேன்.
சாவுக்குத் தயாராக இருப்பவனே அகத்தில் விடுதலை பெற்றவன்!

@Saravanakarthikeyan Chinnadurai - ‘அவள் அப்படித்தான்’ படத்தை நீங்கள் முதல் முறை பார்க்கையில் ரஜினியைப் பிடிக்கும். பின் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்ததும் ரஜினி எவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கொண்டிருக்கிறார் எனக் கோபம், எரிச்சல் வரும். பிறகு மீண்டும் ஒரு கட்டத்தில் (திருமணமானதும்) ரஜினியைப் பிடிக்க ஆரம்பிக்கும்!

@Fabiola Paul - ரொம்ப நாளா  ஒரு  டவுட்டு . டாக்டர்ஸ் என்றாலே  அழகா க்யூட்டா இருக்காங்க. நீங்க எல்லாம் அழகா இருந்ததால டாக்டர்ஸ் ஆனீங்களா இல்ல டாக்டர்ஸ்  ஆனதால் அழகா, க்யூட்டா ஆகிட்டீங்களா? இப்படிக்கு ஹாஸ்பிட்டல்ல உக்கார்ந்துகிட்டு பொம்ம குட்டி போல இருக்கற டாக்டர்ஸைஆ ஆஆ  என்று பார்ப்போர்  சங்கம்!

@teakkadai1 - காலமே, என்றைக்கும் பொருந்தா பர்னிச்சர்களை உடைத்து விடும். ஆகச் சிறந்த பர்னிச்சர்களை வன்மம் கொண்டு உடைத்தாலும் காலமே அதைச் சரிப்படுத்தி விடும்.

@athisha - எல்லா நல்ல விஷயங்களையும் எப்போதும் மிகத் தாமதமாகவே உணர்ந்து கொண்டு செயலாற்றுவதில் பாஜக அரசை அடித்துக்கொள்ள முடியாது. என்ன அவர்கள் அதை உணர்ந்து கொள்ளும் முன் தேசம் தேவையான அளவு சேதமடைந்து  கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. பணமதிப்பிழப்பு தொடங்கி தடுப்பூசி வரை ஒரே கதை.

@Ramji Yahoo Mahadevan - my husband is your husband - என்ற இந்த கிளப்ஹவுஸ் அறை  நேற்று வேறு பெயரில் வந்தது.
‘மாமி கடை மசாலா வடை’.99% அதே நபர்கள் -  அதே 19-23 வயது என்று ப்ரொபைல் BIO - ( ஆனால், நிஜ வயது 27 - 35 +)அதே டாபிக் - எப்படி ப்ரொபோஸ் செய்யும் வசனம் பேசுவது,  Right side யாரைப்  பிடிக்கும், லெப்ட் சைடில் யாரைப் பிடிக்காது, ரூமில் இருக்கும் ஒரு நபரின் உடல் மீது  தொடுவதற்கு வாய்ப்பு அளித்தால் யாரைத் தேர்வு செய்வீர்கள், எந்த உடல் பாகங்களை எல்லாம் முதலில் தொடுவீர்கள் 1, 2, 3 - கப்பல் கவிழும் நிலையில் எந்த 2 பெண்களை மட்டும் காப்பாற்றுவீர்கள், யாரின் கன்னம் பிடிக்கும், யாரின் காதுகள்  பிடிக்காது... etc
என் சந்தேகம் -  கிளப்ஹவுசே  பணம் கொடுத்து இதுபோன்ற முன்னாள் ரேடியோ RJ, VJ, movies TV dubbing artists ஆகியோரை செயற்கையாக பேசச்  சொல்கிறார்களா..? தெரியவில்லை. ஓரிருவர் நிஜ வாழ்வில் திருமணம் செய்து கொண்ட தம்பதியர், பெற்றோர்  போன்றும் தோன்றுகிறது.கிளர்ச்சியான தலைப்புகள் வைத்து ரூம் உள்ளே மொக்கை போடும் செயல்!


@kusumbuonly - போட்டோஷாப் செஞ்சி வளந்த கட்சின்னு பெருமை பீத்திக்கிட்டா மட்டும் பத்தாது. அதுல ஒரு பர்
ஃபெக்சன் வேண்டும். கொஞ்சம் லாஜிக் வேண்டும். ஏன்யா ஆட்டுக்குட்டி அட்டைய புடிச்சிக்கிட்டு அந்த அம்மா நின்ன பிறகு விரல் மேலயா பேப்பரை ஒட்டினாங்க? உஸ்ஸ்ஸ்...

@Vinayaga Murugan - மதுரையில் ஒரு டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிய வழக்கில் புதுத்திருப்பம் ஏற்பட்டுள்ளதாம். என்ன விஷயம்னா அந்தக் கடையில் சிமெண்ட் பூசும் வேலை நடந்துள்ளது. கடையில்  ஓட்டைபோட்டு  திருடியவர்கள்  ஓட்டையை சிமெண்ட் வைத்து அடைத்துள்ளார்கள். அதை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்களாம். ஒவ்வொரு ஊரிலும் ஓட்டைபோட்டு குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு அரசு சொத்தை சேதப்படுத்தி பொறுப்பில்லாமல் போறாங்க. மதுரைக்காரனுங்கதான் பொறுப்பா இருக்காங்க. நாளைப்பின்ன வந்துபோற இடமில்லையா?

@manuvirothi - ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாகத் தருவதென்ற தன் திட்டத்தின் ரகசியத்தை மக்கள்நலன் கருதி எடப்பாடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

@Divya Nathan -  மேட்டூர் அணையைத் திறக்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சௌமியா எனும் பெண் கொடுத்த மனு இது!
தன் சூழலே பேரிடராய் இருக்கும் போது மக்களுக்காக கொரோனா நிவாரண நிதிக்காக தன் 2 பவுன் தங்கச் சங்கிலியை கொடுத்துள்ளார்.
இந்தக் கடிதத்தை படித்த யாராலும் எளிதில் கடந்து விட முடியாது.இந்தப் பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். சௌமியா கையெழுத்து கூடுதல் அழகு!

@Pa Raghavan - ஒரு தர்ப்பூசனிப் பழம் வாங்கச் சென்றேன். கடைக்காரப் பெண்மணியிடம் ஒன்றை எடுத்துக் காட்டி, ‘எவ்ளம்மா?’ என்று கேட்டேன்.
அவர் ‘பதினைந்து ரூபாய்’ என்று பதில் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த ஒரு வாசகர் திலகம், ‘சார், நீங்க பாராதானே?’
‘ஆமாம்’ என்று பதில் சொன்னேன்.‘உங்க புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன் சார். பூனைக்கதை ரொம்ப பிடிக்கும். இறவான் கொஞ்சம் புரியல.

ஆனா, ஃபேஸ்புக்ல உங்கள ஃபாலோ பண்றேன் சார். அங்க எழுதறதெல்லாம் தமாஷா இருக்குது. என் வீட்ல என் ஒய்ஃபும் உங்க ஃபேன் சார். உங்கள மீட் பண்ணேன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா. ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’காலை நடைப் பயிற்சி முடித்து, என் மதன மாளிகையை மாப் போட்டுத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, ஆவினுக்குப் போய் பனீர் வாங்கிக்கொண்டு, ஒரு காய்கறியம்மாவிடம் கீரைக் கட்டு தேற்றிக்கொண்டு, பூஜைக்குக் கொஞ்சம் பூ வாங்கிக்கொண்டு, கோயில்பட்டி கடலை மிட்டாய்க்காக நாலைந்து கடைகள் ஏறி இறங்கி, வெயிலில் வியர்த்துத் துவண்டு ஒரு ஈரக் கோணி போல இருப்பதாக உணர்ந்தேன்.

இருங்கள், போய் குளித்துவிட்டுக் கொஞ்சம் பார்க்கும்படியாக வருகிறேன் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால், அணிந்திருந்த பனியனிலேயே முகத்தைத் துடைத்துக்கொண்டு அவரோடு சேர்ந்து நின்று ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன். வாசகத் திலகம் மேலும் சிலபல நல்வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பழக்காரம்மாவுக்கு என்னால் முடிந்த ஒரு புன்னகையைத் தந்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து மீண்டும் ‘எவ்ளம்மா?’ என்றேன்.
அவர் அந்தப் பழத்தை எடை போட்டு, ‘இருவது ரூவா சார்’ என்றார்.

அதிர்ந்துபோய், ‘பதினஞ்சுன்னு சொன்னிங்களே...’
‘ஆமா சார். கிலோ பதினஞ்சு. இது ஒண்ர கிலோவுக்குக் கொஞ்சம் கம்மியா நிக்குது பாரு. எல்லாஞ்சரியான வெலதான்...’
‘தர்பூஸும் கிலோ கணக்கா? இத நீங்க முதல்லயே சொல்லியிருக்கணும். நான் கேட்டப்ப பதினஞ்சுன்னு சொல்லிட்டு இப்ப மாத்தி சொல்றிங்க...’
‘இஸ்டம் இருந்தா எடு. இல்லன்னா நடைய கட்டு. காலில ரோதன பண்ணாத சார்...’
நல்லது. வாழ்க்கை பகுதியளவு மட்டுமே மாய யதார்த்தமாகியிருக்கிறது. Way to go.
‘வோணுமா வோணாமா? அத சொல்லு மொதல்ல...’

@ramanujam Govindan - மனதைக் கல்லாக்கிய நிகழ்வு!
மகளுக்கு புத்தகங்கள் வாங்க பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
‘‘பொண்ணுக்கு புக்ஸ் வாங்கணும்...’’ - நான்‘‘எந்த க்ளாஸ் சார்? எல்கேஜியா யூகேஜியா?’’ என்றார் ரிசப்ஷனில் இருந்த பெண்.

என்னைப் பார்த்தால்  கேஜி  வகுப்பு படிக்கும் மகள்தான் இருக்க வேண்டும் என அந்தப் பெண் நினைத்ததற்கு மகிழ்ச்சி எழுந்தது. அவரது நம்பிக்கையை சிதைக்க விரும்பவில்லை.
ஆனாலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னேன் ‘‘டென்த் ஸ்டாண்டர்ட் டி செக்சன்!’’
கடமை வென்றது! கண்கள் வியர்த்தன!

@Vijayasankar Ramachandran - நான்கு நல்ல படங்களைப் பார்த்துவிட்டு ஒரு அபத்தக் களஞ்சியத்தைப் பார்ப்பது கடலைப் பொட்டலத்தின் கடைசிக் கடலை சொத்தையாக இருந்து நம்மை சோதிப்பதைப் போன்றது. அப்படி ஒரு தமிழ்ப் படத்தை இன்று ஒரு OTT தளத்தில் பார்த்து சோகத்தில் இருக்கிறேன்.  அதில் ஒரே ஒரு சிரிப்புக் காட்சி மட்டும் நினைவில் நிற்கிறது.
பின்னணியில் ‘காசு பணம் துட்டு மணி மணி…’ பாட்டு கேட்கிறது. அதற்கான ஆங்கில சப் டைட்டில் கண்ணில் பட்டு விட்டது:
டாலர்… பவுண்டு… ருப்பி… ருப்பி...
அட ஈஸ்வரா!

@amutharasan_dmk - MLA அலுவலகத்துல ‘லாபம்’னு எழுதி பூஜை போட்டு திறந்த முதல் MLA ... வானதி அக்காதான்!

@ItsJokker - ஒரு மணி நேரத்தில் சுமார் ₹73,250 கோடியை இழந்த அதானி - செய்தி.
‘‘அய்யயோ, அவருக்கு ஹெல்ப் பண்றேன்ட்டு நமக்கு கேஸ் விலையை கூட்டிருவாங்களே..!’’

@skpkaruna - வெறும் 4000 கோயில்களில் வேலை செய்து கிட்டு இருந்தவங்களுக்கு இனிமே 44000 கோயில்களில் வேலை கிடைக்கப் போகுது! அதைப் பாராட்டாமல் நீர்
என்னன்னா இங்கே வந்து உருண்டுகிட்டு இருக்கீங்க!

@thechanakkiyan - இன்னும் எதுவும் போட்டோ பாக்கி இருக்கா..?

@Bogan Sankar - கிளப்ஹவுஸில் நீங்கள் போகக்கூடாத அறை இளம் இலக்கியவாதிகளின் அறை. நேற்று பிட்னெஸ் பற்றிய ஒரு அறையில் சென்று கொஞ்ச நேரம் கேட்டேன். இங்கிருக்கும் தோழி ஒருவர், தான் எப்படி ஐடி வேலையைவிட்டு முழுநேர மாரத்தான் மற்றும் மலை ஏறுதல் பயிற்சியாளர் ஆனார் என்று சொல்லிக்கொண்டிருந்தார். வியப்பாகவும் புதிய தகவல்களுடனும் இருந்தது. இலக்கியவாதிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு, அறியாத துறைகள் நிறைய உண்டு. அவர்களுக்கு நிறைய நிறைய வேறு விதமான  வாழ்க்கை முறைகள் பற்றிய அறிவு வேண்டும். இங்கேயோ அதே ‘அது கவிதை ஆவலீங்க...’ பல்லவி.

இந்த இளம் இலக்கியவாதிகள் உருவாக்குகிற ‘இலக்கிய சர்ச்சை’களைக் கேட்கையில் கொரோனாவுக்கு முந்திய தீபாவளி நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றன. பெரும்பாலும் ஃபேஸ்புக்கிலிருந்து கடத்திக்கொண்டு போன அதே பிரச்சினைகள்.தீபாவளி தினங்களில் பெருத்த அதிர்ச்சி தரும் லட்சுமி வெடி, ஆட்டம் பாம், ஆயிரம் சரவெடியெல்லாம் பெரியவர்களால் காலையில் போடப்பட்டுவிடும். வர்ண மயமான ராக்கெட்டுகள் இரவில் வானத்தில் ஏறும். மதியம் சற்று கண்ணயரும்போது சில பொடியர்கள் ரோல்கேப்பை பொம்மைத்  துப்பாக்கியில் சுற்றி டப் டப் என்று மதியம் முழுக்க பலவீனமாக சுட்டுக்கொண்டே இருப்பார்கள். நிறுத்தவும் மாட்டார்கள். தலைவலி நிச்சயம்.