காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வைக்கோல் தட்டுகள்!
இது தில்லி ஐஐடி மாணவர்களின் சாதனை
கொரோனாவின் பாய்ச்சலுக்கு முன்பு காற்று மாசுபாட்டால் தத்தளித்தது தில்லி. வீட்டைவிட்டு வெளியே வரவே மக்கள் பயந்தனர். இதைச் சரி செய்வதற்காக பல திட்டங்கள் தீட்டப்பட்டன. அப்போது தில்லி ஐஐடியில் பயின்ற ஐந்து மாணவர்கள் சேர்ந்து ‘கிரியா லேப்ஸ்’ என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
 சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களைத் தயாரிப்பது இந்நிறுவனத்தின் நோக்கம். இதன் முதல் கட்டமாக நெல் வைக்கோல் கழிவுகளைக் கூழாக மாற்றி, அதில் பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரத்தின் மூலம் தயாராகும் வைக்கோல் தட்டுகள், குவளைகள் மனதை அள்ளுகின்றன; சூழலையும் பாதுகாக்கின்றன.  ‘‘ஆரம்ப நாட்களில் மந்தாரை இலை, வாழை மரப்பட்டை, காய்ந்த இலைகளைக் கொண்டு தட்டு, கோப்பைகளைத் தயாரித்தோம். இது, சுற்றுச்சூழலுக்குத் தீங்கான பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு மாற்றாக பயன்பட்டது. ஆனால், தட்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் விலை அதிகமாக இருந்தது. தவிர, தட்டு தயாரிக்கும் இயந்திரத்தின் விலையும் ரொம்ப அதிகம். அந்த இயந்திரத்தை வைப்பதற்கு அதிக இடமும் தேவைப்பட்டது.
இதற்கு மாற்றாகத்தான் புது இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இதன் விலையும் குறைவு. இயந்திரத்தை வைப்பதற்கு சிறிய இடமே போதும். மட்டுமல்ல; மலிவாகக் கிடைக்கும் வைக்கோலைக் கூழாக்கி அதன் மூலம் தட்டு, குவளைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை இதில் பொருத்தியுள்ளோம். தவிர, இதில் தயாராகும் பொருட்கள் எளிதில் மக்கக்கூடியது. தயாரிப்பின்போது வெளியாகும் கழிவை உரமாகவும் பயன்படுத்த முடியும். அதனால் ஜீரோ வேஸ்ட்...’’ என்கிறார் பிரதாப். இவர் ‘கிரியா லேப்ஸி’ன் நிறுவனரில் ஒருவர்.
இந்த திட்டத்தை தலைமையேற்று வழிநடத்தும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் நீத்து சிங், ‘‘இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்கும், உணவகம் நடத்துபவர்களுக்கும் அதிக பயன்பாட்டைத் தரும்...’’ என்று உறுதியாகச் சொல்கிறார்.“வேளாண் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கூழ், ஒரு கிலோ 45 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.
இதனால் விவசாயிகள் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக கூழாக மாற்றி விற்பனை செய்யலாம். வைக்கோல் கூழ் மூலம் தயாரிக்கப்படும் தட்டுகள், கோப்பைகளை நேரடியாக சந்தையில் விற்கலாம். இதன்மூலம் ஓரளவு மாசைக் கட்டுப்படுத்த முடியும். விவசாயிகளுக்கும் நல்லது நடக்கும். ஆகவே, இந்த தொழில்நுட்பத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப் மற்றும் அரியானா பகுதிகளில் டன் கணக்கில் வைக்கோல் கழிவுகளை எரிக்கின்றனர். இது காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது. அதனால் அந்த வைக்கோல் கழிவுகளை கொள்முதல் செய்து இம்மாதிரி பொருட்களாக மாற்ற உள்ளோம்.
இரண்டு வருடத்துக்குள் குறைந்தது ஆயிரம் இயந்திரங்களை விவசாயிகளிடமும், புதிதாக ஸ்டார்ட் அப் தொழில் செய்ய நினைப்பவர்களிடமும் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம். ஐந்து வருடத்துக்குள் மற்ற மாநிலங்களையும் தொட்டு விட வேண்டும். குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாட்டில் கால்பதிக்க வேண்டும் என்ற இலக்கில் வேகமாகச் செயல்பட்டு வருகின்றோம்...’’ என்கிறார் ‘கிரியா லேப்ஸி’ன் நிறுவனர்களில் ஒருவரான அங்கர் குமார். ‘‘ஒரு ஏக்கரில் மகசூல் முடிந்த பிறகு மீதமாகும் நெல் வைக்கோலை சேகரிப்பதற்கான செலவு ரூ.1500 முதல் ரூ.2000 வரை ஆகிறது. நாங்கள் அந்தத் தொகையை இரட்டிப்பாக வழங்குகிறோம். தவிர, வைக்கோல் கூழிலிருந்து தயாரிக்கப்படும் தட்டு, கோப்பை, உணவு பரிமாறும் பொருட்களை சிறந்த விலைக்கு விற்றும் தருகிறோம்...’’ என்கிறார் ‘கிரியா லேப்ஸி’ன் உருவாக்கத்தில் பங்குபெற்ற ஒரே பெண்ணான கனிகா.
‘‘இந்தியாவில் யாராவது ஒருவர் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத தட்டு, கோப்பைகளைத் தயாரிக்க நினைத்தால் குறைந்த விலையில் இந்த இயந்திரத்தைச் செய்து கொடுக்கத் தயாராக உள்ளோம். விவசாயிகளிடமிருந்து நெல் வைக்கோலை வாங்கி, அதை கூழாக மாற்றி இந்த இயந்திரத்தைக் கொண்டு பொருட்களை அவர்களே தயாரிக்கலாம். இதற்கும் நாங்கள் உதவுகிறோம்...’’ என்று ஒரே குரலில் சொல்கின்றனர் ‘கிரியா லேப்ஸி’ன் நிறுவனர்கள்.
திலீபன் புகழ்
|