ரத்த மகுடம்-152



யாரை எதிர்பார்த்தாலும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் குருநாதரான புலவர் தண்டியை கங்க மன்னர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது வதனம் காட்டிக் கொடுத்தது.
புலவர் தண்டி இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். எனவே புன்னகை தவழும் முகத்துடன் பூவிக்கிரமரை எதிர்கொண்டார். ‘‘கங்க மன்னருக்கு வணக்கம். அடியேன் பெயர் தண்டி. புலவர் என தொண்டை மண்டலத்தில் அழைக்கிறார்கள். அந்த அழைப்புக்கு தகுதியுடையவனாக ஆக்கிக் கொள்ள முயற்சி செய்யும் சாமான்யன் நான்...’’‘‘யார்..? தாங்களா சாமான்யர்..?’’ பூவிக்கிரமர் பரபரப்படைந்தார். ‘‘தங்களைக் குறித்து அறியாதவர் இந்த பாரத தேசத்திலேயே கிடையாதே... வாருங்கள் புலவரே... தங்கள் வரவு நல்வரவாகுக...’’
சொன்ன கங்க மன்னர் குனிந்து புலவரின் கால்களைத் தொட்டு வணங்கினார்.

மனமார பூவிக்கிரமரை ஆசீர்வதித்த புலவர், கங்க மன்னருக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தார்.தனக்கென அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் புலவரை அமர வைத்த பூவிக்கிரமர், கைகளைக் கட்டியபடி நின்றார்.கூடாரத்துக்கு வெளியே கங்க வீரர்கள் குழுமிவிட்டார்கள். அனைவரது முகத்திலும் வினாக்கள் வேர் பிடித்து வளர்ந்தன. அப்போதுதான் பல்லவர்களுக்கும் கங்கர்களுக்கும் இடையிலான முதல்நாள் போர் முடிந்திருந்தது. இரவு ஓய்வுக்குப் பின் மறுநாள் யுத்தம் தொடரவிருக்கும் நிலையில் பல்லவ தேசத்தின் மிகச்சிறந்த ராஜ தந்திரிகளில் ஒருவரும், பல்லவ மன்னருக்கும் இளவலுக்கும் குருநாதராகத் திகழ்பவருமான புலவர் தண்டி தங்கள் மன்னரைச் சந்திக்க வந்திருப்பது கங்க நாட்டு வீரர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையெல்லாம் கூடாரத்துக்குள் மரியாதையுடன் நின்றிருந்த பூவிக்கிரமர் கவனிக்கவே செய்தார். ஆனாலும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நிதானமாகவே உரையாடலை ஆரம்பித்தார். ‘‘சிற்றரசனான எனக்கு செய்தி சொல்ல தளபதி அந்தஸ்தில் உள்ளவரை பல்லவ மன்னர் அனுப்பாமல் குருநாதரான தங்களை அவர் அனுப்பியிருக்கிறார் என்றால் விஷயம் முக்கியமானதாக இருக்க வேண்டும்... சொல்லுங்கள் புலவரே... பல்லவ மன்னரின் செய்தி என்ன..?’’புலவர் தண்டி நகைத்தார். ‘‘பரமேஸ்வர வர்மன் செய்தி சொல்லி யிருந்தால் அல்லவா என்னால் அதைச் சொல்ல முடியும்..?’’‘‘அப்படியென்றால்..?’’‘‘பல்லவர்கள் சார்பாக எச்செய்தியையும் அடியேன் சுமந்து வரவில்லை...’’

புலவரின் பதில் பூவிக்கிரமரை பெருமளவு குழப்பியது. பல்லவ மன்னர் சார்பாக வரவில்லை என்றால் வேறு யார் சார்பாக அதுவும் இந்த நேரத்தில் எதிரியான தன்னைத் தேடி வந்திருக்கிறார்..?
கங்க மன்னரை அதிகநேரம் சிந்தனையில் ஆழ்த்த புலவர் விரும்பவில்லை. எனவே, தான் வந்த காரியத்தை ஒரே வரியில் சொன்னார். ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்தான் அடியேனை இங்கு அனுப்பியிருக்கிறார்!’’பூவிக்கிரமரின் உடல் குலுங்கியது. ‘‘யார்..? எங்கள் சாளுக்கிய மன்னரா..?’’‘‘ஆம்... யாருடைய ஆளுகைக்குக் கீழ் கங்க நாடு சிற்றரசாகத் திகழ்கிறதோ அந்த சாளுக்கிய தேசத்தின் மன்னர்தான் அடியேன் வழியாக செய்தி அனுப்பியிருக்கிறார்...’’சொன்ன புலவர் தன் மடியிலிருந்த ஓலையை எடுத்து பூவிக்கிரமரிடம் கொடுத்தார்.

பெற்றுக் கொண்ட கங்க மன்னர் அரக்கு முத்திரையை எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கில் பொசுக்கி குழலைத் திறந்தார். அதனுள் இருந்த ஓலையை எடுத்துப் படித்தார்.ஒருமுறை அல்ல... பலமுறை. பூவிக்கிரமரின் முகத்தில் இனம் புரியாத உணர்வுகள் தாண்டவமாடின.விக்கிரமாதித்தர் தன் கைப்பட அந்த ஓலையை எழுதியிருக்கிறார். ஓலை நறுக்கில் சாளுக்கிய மன்னர் எப்படி எழுதுவார் என்பதை அருகில் இருந்து சில முறை கங்க மன்னர் பார்த்திருப்பதால் அவருக்கு அதில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. போலவே ஓலையின் இறுதியில் கையெழுத்திட்டதும் விக்கிரமாதித்தர்தான். அதற்குக் கீழே சாளுக்கிய மன்னரின் அந்தரங்க முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. எனவே, ஓலை போலியாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஓலையில் எழுதப்பட்டிருக்கும் செய்தி..?

பூவிக்கிரமர் நிமிர்ந்து புலவர் தண்டியைப் பார்த்தார். ‘‘இதற்கான விளக்கத்தை தாங்கள் அளித்து இந்த எளியவனுக்கு புரிய வைப்பீர்கள் என நம்புகிறேன்...’’
புலவர் எழுந்து கங்க மன்னரின் அருகில் வந்தார். பூவிக்கிரமரின் சிரசில் கைவைத்து ஆசீர்வதித்தார். ‘‘நாடாளும் தகுதி படைத்தவன் என்பதை இக்கணத்திலும் நிரூபிக்கிறாய். உன்னை மன்னராகப் பெற இந்த கங்க நாடு புண்ணியம் செய்திருக்க வேண்டும்...’’‘‘தங்கள் ஆசீர்வாதம் புலவரே... ஆனால், இந்த எளியவன் எழுப்பிய வினாவுக்கான விடை..?’’‘‘சாளுக்கிய மன்னர் உனக்கு அனுப்பியிருக்கும் ஓலைதான்!’’ சொன்ன புலவர் கூடாரத்துக்கு வெளியே குழுமியிருந்த கங்க வீரர்களைப் பார்த்தார்.

‘‘பூவிக்கிரமா! இந்தப் போரை சாளுக்கிய மன்னர் விரும்பவில்லை... அதனால் வெற்றி தோல்வி இன்றி இந்த யுத்த களத்தை விட்டு கங்க வீரர்களுடன் உன்னை வெளியேறும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்...’’‘‘கட்டளையிட்டிருக்கிறார்...’’ கங்க மன்னர் அழுத்திச் சொன்னார். ‘‘தனது ஆளுகைக்கு உட்பட்ட இந்த சிற்றரசனுக்கு சாளுக்கிய மன்னர் கட்டளையிட்டிருக்கிறார்... அதற்கு பணிவதுதான் முறை. அப்படித்தான் அடியேன் செய்யவும் போகிறேன். ஆனால்...’’‘‘என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது பூவிக்கிரமா! சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரின் ஓலைக்கு கட்டுப்பட்டு பல்லவப் படையைத் தடுத்து நிறுத்தியிருக்கிறாய்... சாளுக்கிய மன்னர் தடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்... விளிந்தையில் இருந்து பல்லவப் படை தன்னைத் தேடி வரட்டும் என காத்திருக்கிறார்...’’கங்க மன்னரின் புருவங்கள் முடிச்சிட்டன.

‘‘உன்னுள் பூக்குள் அடுத்த வினாவுக்கும் விடையளித்து விடுகிறேன் பூவிக்கிரமா! பல்லவ - கங்க போரை சாளுக்கிய மன்னர் விரும்பவில்லை... அவரது விருப்பத்துக்கு மாறாக பல்லவ - கங்க யுத்தத்தை நடத்த ராமபுண்ய வல்லபர் திட்டமிடுகிறார்... ராமபுண்ய வல்லபரின் நோக்கத்தை விக்கிரமாதித்தர் சந்தேகிக்கவில்லை... மாறாக அந்த நோக்கத்தைச் செயல்படுத்த சாளுக்கிய போர் அமைச்சர் கையாளும் முறை தவறு என சாளுக்கிய மன்னர் கருதுகிறார். எனவேதான் என் வழியாக இந்த ஓலையை உனக்குக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

பூவிக்கிரமா! உண்மையில் விக்கிரமாதித்தர் போன்ற மன்னருக்கு சிற்றரசாக இருக்க நீயும் உனது கங்க நாடும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தனது தலைநகரான வாதாபியை பல்லவர்கள் தீயிட்டு எரித்ததற்கும் தன் தந்தையை போரில் கொன்றதற்கும் பழிவாங்க சாளுக்கிய மன்னர் காத்திருக்கிறார். அதுவும் பல்லவர்கள் எப்படி நேருக்கு நேர் சாளுக்கியர்களை மணிமங்கலத்தில் எதிர்கொண்டு தாக்கினார்களோ அப்படி பல்லவர்களை தானும் நேருக்கு நேர் எதிர்கொண்டு தாக்கி அழிக்க வேண்டும் என விக்கிரமாதித்தர் நினைக்கிறார்... அப்படிச் செய்வதே யுத்த தர்மம் என்றும் கருதுகிறார். அதனால்தான் சிற்றரசுகள் தனித்தனியே யுத்தம் செய்வதை  அவர் விரும்பவில்லை.

காஞ்சியில் சோழ மன்னரை சாளுக்கியர்கள் பக்கம் இழுக்க ராமபுண்ய வல்லபர் முயற்சி செய்தபோதும் இப்படித்தான் விக்கிரமாதித்தர் சோழ இளவரசனான கரிகாலனை வைத்து முறியடித்தார். இப்போது இந்த பல்லவ - கங்க யுத்தத்தைத் தடுக்க பல்லவர்களின் குருநாதரான அடியேனை அனுப்பியிருக்கிறார்...’’சொன்ன புலவர் தண்டி திரும்பி பூவிக்கிரமரைப் பார்த்து கண்சிமிட்டியபடியே அடுத்த பிரம்மாஸ்திரத்தை வீசினார். ‘‘சம்பந்திகளுக்குள் எதற்கு சண்டை பூவிக்கிரமா..?!’’
கேட்ட கங்க மன்னர் தலை கிறுகிறுக்க சிலையென நின்றார்.

கடகடவென நகைத்த புலவர், பூவிக்கிரமரின் அருகில் வந்து ‘‘பல்லவ சாளுக்கிய போர் முடிந்ததும் உன் தலைநகருக்கு வருகிறேன்... பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் சார்பாக பல்லவ இளவலும் எனது முதன்மை மாணவனுமான இராஜசிம்மனுக்கு பெண் கேட்டு! மறுக்காமல் உன் மகள் ரங்கபதாகையை மணமுடித்து பல்லவ அரியணையில் அவளை மகாராணியாக அமர வை!’’பதிலை எதிர்பார்க்காமல் கூடாரத்தை விட்டு புலவர் தண்டி வெளியேறினார். ‘‘நிச்சயம் நமக்கு வெற்றிதான்...’’ என மந்திராலோசனை அவையில் எழுந்த கூச்சலை அடக்கிவிட்டு கரிகாலன் சொன்னான்.‘‘எப்படி..?’’ ஆவேசத்துடன் கேட்டார் கரிகாலனின் தந்தையான சோழ மன்னர்.‘‘சொல்கிறேன்... நாம் விளிந்தையில் இருக்கிறோம்... கங்க நாட்டுடன் இனி நாம் போர் புரியப் போவதில்லை. நமது ஆசான் புலவர் தண்டி இப்போரைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

இதை அறியாத சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன், வாதாபி யில் இருக்கும் படைகளுடன் நம்மை பின்புறம் தாக்க வருகிறான். நேருக்கு நேர் அப்படையை நாம் எதிர்கொள்வது சிரமம். வெற்றி பெறுவோம் என்றாலும் சேதாரம் அதிகமாகும். அதைத் தவிர்க்கத்தான் திட்டமிட்டிருக்கிறேன்... இங்கே பாருங்கள்...’’சொன்ன கரிகாலன், தரையில் துங்க பத்ரையின் ஆரம்பப் பகுதியை சிறுகோடாக இழுத்து அதில் குறுக்காகக் கோடு கிழித்தான். ‘‘இங்குதான் விநயாதித்தனின் படைகள் தங்கும்...’’ ‘‘ஆமாம்...’’ என்றார் சோழ மன்னர்.‘‘துங்கபத்ரை வடமேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்கிறது... இதை சாதகமாகப் பயன்படுத்தி எதிரியை சந்திக்காமல் நாம் இந்த வழியாகச் செல்லப் போகிறோம்...’’ என துங்கபத்ரையின் உற்பத்தி இடத்துக்கு அப்பால் கரிகாலன் ஒரு கோட்டினை இழுத்தான்.

‘‘அது குடகு மலைத் தொடரின் கடுமையான பாதை...’’ சோழ மன்னர் உறுமினார்.‘‘ஆம்... கடுமையான பாறைகளும் அடர் வனங்களும் நிறைந்தது. புரவிகள் செல்வது கடினம். எதையும் நான் மறுக்கவில்லை. இதே கருத்துதான் விநயாதித்தனிடமும் இருக்கும். எனவே, இந்த வழியாக நாம் வடக்கே செல்லமாட்டோம் என்றே நினைப்பான். எதிரி எதிர்பார்க்காத பாதையில் செல்வதே விவேகம். இப்படி பயணித்து சாளுக்கிய தேசத்தின் மத்தியில் கிழக்கே நாம் திரும்பினால் வாதாபிக்கும் துங்கபத்ரைக்கும் இடையில் இருப்போம்.

அந்த மத்தியிலுள்ள நகரங்களின் வழியாக நாம் பயணப்பட்டால் சிவகாமி சேகரித்து வைத்துள்ள சாளுக்கியர்களின் பொக்கிஷக் குவியலை எடுத்துக்கொள்ளலாம். பல்லவ மன்னர் தயாரித்துள்ள ஆயுதக் குவியலுடன் துங்கபத்ரையை நோக்கி வந்தால் கரையிலிருக்கும் விநயாதித்தனுக்குப் பின்னால் இருப்போம்.

விநயாதித்தனின் படை ஒன்று துங்கபத்ரையின் நீரில் இறங்கி அக்கரைக்குச் செல்ல வேண்டும் அல்லது நம்மை நோக்கி வரவேண்டும். பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இறங்கிச் செல்வது தற்கொலைக்கு சமம். எனவே விநயாதித்தன் அச்செயலில் ஈடுபடமாட்டான். இதுதான் நமக்குத் தேவை. நமக்கும் ஆற்றுக்கும் இடையில் சிக்கிய சாளுக்கியப் படையை சுலபமாக நசுக்கிவிடலாம்...’’சொல்லி முடித்துவிட்டு கரிகாலன் நிமிர்ந்தான். தன் தந்தை உட்பட மந்திராலோசனையில் இருந்த அனைவரது முகங்களும் தன் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக ஒளிர்வதைக் கண்டான்.

‘‘கரிகாலரின் திட்டத்தை முறியடிக்க விநயாதித்தன் காய்களை நகர்த்துகிறான். அதற்கு நாம் இடம் தரக்கூடாது. வெறும் நூறு வீரர்கள்தானே இருக்கிறோம் என நினைக்காதீர்கள்... நீங்கள் ஒவ்வொருவரும் நூறு வீரர்களுக்கு சமம். புரிகிறதல்லவா..? வாருங்கள்... வெற்றியை ருசிப்போம்...’’  கர்ஜித்த சிவகாமி தன் வாளைச் சுழற்றி படைகளுக்குள் ஊடுருவினாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்