அங்கே இப்போ என்ன தேதி?



சுசீலா முகம் அலம்பிவிட்டுக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். பொட்டு அழிந்திருந்தது. அழுத்தித் துடைக்க முகம் சிவந்தது. எனக்கு என்ன குறைச்சல்? இந்த மனுஷனுக்கு இது பத்தாதா?

படுக்கையில் இன்னும் புரண்டு கொண்டிருந்தாள் அவள். பதினொரு மணிவரை தூங்கும் சக்களத்தி. எங்கிருந்து வந்தாள்? கோபம் வந்தாலும் காட்டிக்கொள்ளக்கூடாது. அவரிடம் சொல்லிவிட்டால்?குங்குமத்தை நடு நெற்றியில் வைத்து வலிக்க அழுத்திக்கொண்டாள். பக்கத்து வீட்டு பங்கஜம்கூட ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறிவிட்டாள்.
இங்கே? ஒரு நாள் வைத்ததற்கே சிடுசிடுவென்று இருந்தார் நாள்முழுவதும். “இன்னிக்கு இதுல ஆரம்பிப்பே. அப்புறம் உதட்டுக்கு சாயம், முகத்துக்கு மாவுன்னு ஆட்டக்காரியா ஆயிடுவே...”சமையல் உள்ளுக்குள் சென்றால் பாத்திரங்கள் மலையாக இருந்தன. எல்லாவற்றையும் அலம்ப நேரமில்லை. பால் பாத்திரத்தை மட்டும் எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு பாத்திரங்களைப் பிரிக்க ஆரம்பிக்கும்போது டெலிபோன் அடித்தது.

‘‘ஹலோ...” ஆண்குரல். அவருக்காகத்தான் இருக்கும்.“அவர் ஆபீஸுக்குப் போயிருக்காரே. நீங்க யாரு?” என்றாள்.“ஒன் மொமெண்ட். கால் கட் பண்ணாதீங்க. நீங்க யாரா இருந்தாலும் டஸண்ட் மேட்டர். கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்...” தெரிந்த குரலாகத் தெரியவில்லை. பேசும் பாஷையும் பாதி புரியவில்லை.

“உங்க பேரைச் சொன்னா, அவரைப் பேசச் சொல்லு வேன்...”“என் பேர் செல்வா. என்னைப் பத்தி விவரம் சொல்றதுக்கு முன்னாடி ஒரு மேட்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கணும். அங்கே இப்ப டேட் என்னன்னு சொல்ல முடியுமா?”“புரியலை. அவர் இல்லை. வச்சுடவா?”‘‘இல்லைங்க. அவர்னு யாரைச் சொல்றீங்கன்னு கூட எனக்குத் தெரியாது. அங்கே இப்ப டேட்...” ஒரு நொடி நிதானித்து, ‘‘ஆங்... தேதி... தேதி இன்னைக்கு என்னன்னு சொல்ல முடியுமா?”சுசீலா ரேடியோவுக்குப் பக்கத்தில் இருந்த பழனிமலை முருகனைப் பார்த்தாள். “ஆடி 25ன்னு போட்டிருக்கு. முந்தாநாள்தானே சஷ்டி...”“சரியாப்போச்சு. இங்கிலீஷ் தேதி சொல்ல முடியுமா?”
“ஆகஸ்ட் 10...””வருஷம்?”

அதுகூடவா தெரியாது?
“1960...” என்றாள் சுசீலா. பால் பொங்கும் நேரம் ஆகிவிட்டது. “வச்சுடறேன்...” என்று போனை கட் செய்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். சக்களத்தி காபி குடித்துக்கொண்டிருந்தாள்.
புருஷனைக்கூட பங்கு போடலாம். சமையலறையை? “நீ இங்கல்லாம் வரவேண்டாம்...” அவள் கண்டுகொள்ளாமல்  காபியை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்கு மீண்டும் போனாள்..
‘‘பல்லைக்கூட தேய்க்காம என்ன காபி வேண்டியிருக்கு..?” சுசீலா சண்டைபிடிக்கத் தயாராகும்போது மறுபடி போன் அடித்தது.
‘‘உன்னை வந்து வச்சுக்கிறேன்...” சுசீலா போனை எடுத்தாள்.

“நான்தான் பேசறேன். செல்வா. இப்ப உங்ககிட்ட டேட் கேட்டேனே...”“அதுதான் சொல்லிட்டேனே. அவர் இல்லை. சாயரட்சைக்குப் பண்ணுங்கோ. வந்துடுவார்...”
“பரவாயில்லை. உங்ககிட்ட பேசினாலே போதும். நான் ஒண்ணு சொன்னா நம்புவீங்களா மிசஸ்... உங்க பேர் என்ன?”“அதெல்லாம் உனக்கு என்னத்துக்கு? அவரண்ட பேசணும்னா அப்புறமாப் பேசு...” சுசீலா கோபத்தில் ஒருமைக்கு மாறிவிட்டாள்.“கோபப்படாதீங்க. நான் சொல்லப்போற விஷயம் ரொம்ப முக்கியமானது.  இங்கே இப்ப தேதி என்னன்னு சொல்லட்
டுமா?”சுசீலா போனை வைக்கப்போனாலும் அவன் குரலில் இருந்த ஒரு கவர்ச்சியில் போனை வைக்கவில்லை. அமெரிக்கால இருந்து பேசறானோ? அங்கே ஒருநாள் முன்னயோ பின்னயோ இருக்கும்னு பேசிக்கறாளே.

“...”
“ஓக்கே... டேட் சொல்றேன், அதிர்ச்சி ஆகாதீங்க, அதே ஆகஸ்ட் 10தான், ஆனா வருஷம் 2020..!”
அப்படியெல்லாம் கூட வருஷம் வருமா என்ன?“என்னை முதல்ல முழுசா இண்ட்ரொட்யூஸ் பண்ணிக்கறேன். என் பேர் செல்வா. பார்ட்டிகிள் பிசிக்ஸ்ல ஆராய்ச்சி ஆரம்பிச்சு, லைஃப்டைம் ஹாஃப் லைஃப் எல்லாம் பண்ணிக்கிட்டே வரும்போது டைம் ட்ராவல்ல ஒரு ஐடியா வந்தது. அதை டெவலப் பண்ணிக்கிட்டிருக்கேன்...”

சுசீலாவுக்கு இப்போது சுத்தமாகவே ஒன்றும் புரியவில்லை. “என்ன பேத்தறீங்க? எனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியாது...”
“ஓ ஐ அம் சாரி. நான் ஒரு விஞ்ஞானி. காலத்துல பயணம் செய்ய முடியுமான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன். முதல்கட்டமா காலத்துல பின்னோக்கிப் போய் பேச முடியுமான்னு முயற்சி பண்ணேன்... சக்சஸ். இப்ப உங்ககூட 1960ல  பேசிக்கிட்டிருக்கேன்...”
“இப்பவும் புரியலை. காலத்துல பயணம்னா என்ன?”

“உங்க அப்பா அம்மா வீடு ஞாபகம் இருக்கா?”
“அப்பா போயிட்டார், அம்மா சிறுவாச்சூர்ல இருக்கா...”
‘‘அங்க சின்ன வயசுல விளையாடினது ஞாபகம் வருதா? அப்பா இருந்த காலம்?”
“மறந்துடுமா என்ன? ஏழாங்கல், பல்லாங்குழி எல்லாம் ஞாபகமிருக்கு...” சுசீலாவுக்கு பழைய நினைவுகளில் இந்த போன் காலின் வினோதம்
மறந்துவிட்டது.

“நீங்க திரும்பிப்போய் அதே மாதிரி ஆடினா எப்படி இருக்கும்?”நாலரைக்கு எழுந்து யார் கண்ணிலும் படாமல் கொல்லைக்குப் போய்விட்டு, குளித்துவிட்டு கோலம்போட்டு அடுப்பேற்றி விளக்கேற்றி... இதெல்லாம் இல்லாத காலமா?“அதெப்படி போக முடியும்?”“அந்த ஆராய்ச்சிதான் நான் செய்யறேன். அதுல கொஞ்சம் வெற்றியும் கிடைச்சிருக்கு. இப்ப உங்ககூடப் பேசற
வரைக்கும் வந்துட்டேன்... இப்ப கொஞ்சம் உங்களைப்பத்திக் கேக்கப் போறேன். ஆர் யூ மேரீட்?” செல்வா ஒரு நொடி நிதானித்து “உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா?”“ஆச்சு, 10 வருஷம் முன்னே...”“குழந்தைகள்?”

“ஒண்ணும் அமையலை. மாமியார் இன்னும் ஒரு வருஷம் பார்ப்பேன்னு சொன்னா... அதுக்குள்ள இந்த மனுஷன் நேத்து ஒருத்தியை...” யாரென்றே தெரியாதவனிடம் குடும்பக்
கதையைச் சொல்கிறோமே என்ற உணர்வு வந்ததும் நிறுத்தினாள்.“பரவாயில்லை சொல்லுங்க. உங்களுக்கு கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணணும்னா... சாரி... உங்களுக்கு வசதியா இருக்கறதுக்கு நானும் வேணும்னா என் கதையைச் சொல்றேன்...”“அதுக்கில்லை...”“இருக்கட்டும். எனக்கு கூட வேலை செய்யற ஒரு பொண்ணு கூட காதல். கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். அவ ஓவர் பொசஸிவ் டைப்...” ஒரு நொடி விட்டு, “நான் எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அவளுக்குப் பிடிக்காது. வீண் சந்தேகம் எல்லா நேரமும். இவளுக்குக் குழந்தை பிறக்கற நேரத்துல உதவிக்கு வேற ஒரு பொண்ணை வேலைக்கு வைச்சேன். சந்தேகம் அதிகமாகி, விவாகரத்து வாங்கிக்கிட்டு தனியாப் போயிட்டாள்...”
“விவாகரத்தா?”

“ஆமாம். உங்க காலத்துக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான வார்த்தைதான். இருந்த காசையெல்லாம் பிடுங்கிக்கிட்டா. இப்ப அவ தனி, நான் தனி. சரி, எனக்கும் ஆராய்ச்சிக்கு அதிக நேரம் கிடைக்குதுன்னு விட்டுட்டேன்...”“குழந்தை?”“என்கிட்டதான்.  பார்த்துக்க ஆள் போட்டிருக்கேன்... சரி இப்ப நீங்க சொல்லுங்க...”
சுசீலா சுற்றுமுற்றும் பார்த்தாள். மாமனாரும் மாமியாரும் கோயிலில் இருந்து திரும்ப நேரம் இருக்கிறது. இந்த மகாராணி மறுபடி படுக்கையில் விழுந்துவிட்டாள். சொன்னால்தான் என்ன? கேட்க வேறு யார் இருக்கிறார்கள்?

“இவர் பெரிய வக்கீல். நல்லா நாலு பேரை விசாரிச்சுத்தான் அப்பா கல்யாணப்பேச்சையே எடுத்தா. இப்பகூட என்ன? அப்பா இருந்தாலும் அவரண்ட போய் எதையும் சொல்ல முடியாது. அவருக்கே பெரம்பலூர்ல ஒரு நாட்டியக்காரிகூட சகவாசம் உண்டு...”“ரகசிய உறவா?”“அதெல்லாம் இல்லை. எல்லாருக்கும் தெரியும். ஆனா, யாரும் பேசமாட்டா...”‘‘உங்க வீட்டுக்காரர்?”

‘‘இவருக்கு அந்த தப்புத்தண்டா எல்லாம் கிடையாதுன்னுதான் நினைச்சுண்டிருந்தேன். ராத்திரில வேலை வெட்டின்னு ரொம்பநேரம் கதைபேசிட்டு வந்து தொம்முன்னு படுத்துத் தூங்கிகிட்டுதான் இருந்தார்...”“அதான் குழந்தைங்க இல்லையா?”

“மாமியார் சொல்லுவா... அவன் வர நேரத்துக்குக் கொஞ்சம் பளிச்சுன்னு முகம் அலம்பி தலை நிறையப் பூவச்சிண்டு காபியோட நின்னா, ஆசை வரும். இப்படிப் பேய் மாதிரி நின்னா மலடியாவே போகவேண்டியதுதான்னு...”“ஓ அதுக்குதான் நாள் குறிச்சிருந்தாங்களா?”“ஆமாம். ஜாதகம் பாத்ததுல அடுத்த வருஷம் குழந்தை பிறக்கலைன்னா இனிமே பிறக்கவே பிறக்காதுன்னு கோணிமலை ஜோசியர் சொல்லிட்டாராம்...”“ஓ!”“திடுதிப்புன்னு நேத்திக்கு என் காலேஜ் சினேகிதன் தங்கச்சி, தெருவில பார்த்தேன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டார்...”
“ஜஸ்ட் லைக் தட்..? அவங்க அம்மா அப்பா எதுவும் சொல்லலியா..? நீங்க எதுவும் சொல்லலியா..?”

“அப்பா கேட்டதுக்கு நம்மளவாதாம்ப்பான்னுட்டார். அது போறும் அவருக்கு. மாமியார் என்னைத்தான் இடிக்கறா, நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் இப்படிப் போறான்னு...”
“நீங்க என்ன ஒழுங்கா இல்லை?”“கேக்க முடியுமா? மண்ணைப் பிடிச்சு வைச்சு மாமியார்ன்னாலும் கெத்து வந்துடுமே...

அவளைத் திட்டாதே, வேண்டியதைச் செஞ்சுகொடுன்னு சொல்லியிருக்கா...”“சரி, குழந்தை பிறக்கலைன்னு இன்னொருத்தியக்கூட்டி வந்துட்டார், இவங்களுக்கும் குழந்தை பொறக்கலைன்னா?”‘‘இன்னொரு கல்யாணம் பண்ணுவா. நாட்டுல பொம்மனாட்டிங்களுக்கா பஞ்சம்? உங்க ஆம்படையா மாதிரி ரத்து செய்யவா முடியும் எங்களால?”“இன்ட்ரஸ்டிங். ஆம்பளையா இருந்தா செம பீரியடுங்க உங்க டைம்...”

“ஆதரவாக் கதை கேட்டீங்களேன்னு பார்த்தேன். ஆனா, நீங்களும் ஆம்பளைன்னு காட்டிட்டேள். நான் படற பாடு பத்திக் கவலை இல்லை. உங்களுக்கு எது விசேஷம்னு மட்டும் பார்க்கறேள்...”‘‘அட நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாலே 2020 வந்துடும். நாங்க எல்லாம் டைம் ட்ராவல் பண்ணாத்தான் அந்த மாதிரி காலத்தைப் பார்க்க முடியும். முடிவு பண்ணிட்டேன், எந்தக்காலத்துக்கு வர்றதுன்னு...”“நிஜமாவே வரப்போறீங்களா?”“நிஜமாத்தான்.

உங்க விலாசம் கொடுங்க...”சுசீலா சொல்லி முடிக்கும் முன்னரே டெலிபோன் ஙொய் என்றது.“எதோ டெக்னிக்கல் ஃபால்ட். அதுக்கப்புறம் பேசமுடியலை...” திடீர்க்குரல் கேட்டதும் சுசீலாவுக்கு அதிர்ச்சி.  இவள் குரலை முதல் முறையாகக் கேட்கிறாள். எப்போது படுக்கையறையில் இருந்து வந்தாள்? எவ்வளவு நேரமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்?

“அதுக்கப்புறம் 2 வருஷம் ஆராய்ச்சில 1960க்குப் போக ஒரு வழியைக் கண்டுபிடிச்சேன்.  என்கூடப் பேசினவங்களையே பார்த்துடலாம்னு இங்கே வந்தேன்... உங்க ஹஸ்பண்டைக் கண்டுபிடிச்சுட்டேன்...”சுசீலா ஆச்சரியமாகப் பார்த்தாள். இதென்ன கனவா?“உங்ககூட பேசின டேட்டு, நேரம் எல்லாம் கரெக்டாத்தான் செட் செஞ்சிருந்தேன்.

எதோ பிரச்சினை 2 நாள் முன்னாடி வந்துட்டேன்...”சுசீலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.‘‘டைம் ட்ராவல் முதல் முறை செஞ்சதால சில பிரச்னைகள். Grandfather Paradoxன்னு சொல்வாங்க - பயணம் செஞ்சு இங்கே வந்த நான் என் தாத்தாவைக் கொன்னுட்டேன்னா? நானே பிறக்க முடியாது, டைம் ட்ராவலைக் கண்டுபிடிக்கவும் முடியாது... அதை இயற்கையே தடுக்குது. திரும்பப் போக வச்சிருந்த வழி கெட்டுப்போச்சு. இனி போகமுடியாது...”“போன்ல பேசினது ஆம்பளைன்னா...”

‘‘அது இன்னொரு சைட் எஃபக்ட். எதோ க்ரோமோசோம் எல்லாம் மாறிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம, உங்ககிட்ட நான் பேசின நேரம் வரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். உங்களைத் தவிர வேற யார்கிட்டயும் பேசவும் முடியலை. அட்வான்ஸ்ட் டெக்னாலஜி பத்தி சொல்லிட்டேன்னா? இயற்கை அதையும் தடுக்குது...” அழுகிறாளா என்ன?சுசீலா யோசித்தாள்.“கவலைப்படாதே செல்வி. இப்ப என்கூட சேந்துட்டியோல்லியோ. என் மாமியாரை ஒரு கை பார்த்துறலாம்..!”

- பினாத்தல் சுரேஷ்