மின் தடைக்கு காரணம் திமுக அரசு அல்ல!



சமீப நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி சிறிய அளவில் மின் தடை ஏற்படுகிறது. புகார் அளித்தால் உடனடியாக சரிசெய்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் பேசுபொருளான மின்வெட்டு, இப்போது மீண்டும் மெதுவாகத் தலைதூக்குவது தற்செயலா அல்லது திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதா... என்கிற கேள்வியை மின்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் முன்வைத்தோம்.
“பொதுவாக நாம் குறிப்பிடும் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது -தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்  (TANTRANSCO), தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற உடைமை நிறுவனம்... என்று மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் TANGEDCO உற்பத்தி, பகிர்மானம், தமிழ்நாடு டிஸ்டிரிபியூசன், தமிழ்நாடு கார்ப்பரேஷன் ஆகவும் - TANTRANSCO ட்ரான்ஸ்மிஷனாகவும் இருக்கிறது.

இதற்குமேல் இருக்கும் CMDதான் முதன்மையானது. இதில்தான் பாஜக அரசு எல்லா துறைகளிலும் தனது ஆட்களை வைப்பது போல் தங்களுக்கு வேண்டிய நபர் ஒருவரை கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரியாக நியமித்தது.இந்த அதிகாரி பிரதமருக்கு வேண்டப்பட்ட ஒரு பெரு நிறுவனத்தின் உரிமையாளரோடு நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.
2020 நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு சில சட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்தது. அதில் மின்துறையும் அடக்கம். அந்த நேரத்தில் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போது, ‘மின் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்குகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டினை சில தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.

அதனோடு தூத்துக்குடி, வடசென்னை, எண்ணூர், மேட்டூர் உட்பட தெர்மல் பிளான்டுகளின் உற்பத்தித்திறனை வேண்டுமென்றே குறைத்தனர். இதன் மூலமாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவு மின் கொள்முதல் செய்யத் தொடங்கினர் என்ற குற்றச்சாட்டை தொழிற்சங்கங்கள் ஆதாரங்களோடு கூறின. இதேபோல் அதிக விலையில் மின்சாரம் வாங்குவதுதான் மின் துறையினர் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. உண்மையில் மின்துறை கிட்டத்தட்ட 40 - 50 ஆயிரம் கோடி நஷ்டத்தில்தான் இருக்கிறது.

இதைச் சரிசெய்வதற்கு அதிகமான விலை கொடுத்து தனியாரிடமிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்குகிறார்கள் என்றும், அதை சாக்காக வைத்து சென்ற ஆட்சியில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.தவிர 63 செக்‌ஷனில் AE அளவிலும்; அதேபோல் SC, JE, AEL-இல் இருந்து லைன்மேன் வரை  தோராயமாக 40ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் வேலைப்பளு அதிகமாக உள்ளது. காலியிடப் பணியினை ஒப்பந்த ஊழியர்கள் கொண்டு செய்கிறார்கள்.

இதனால் இது தனியார் வேலையாக மாறிவிடுகிறது.பணியாட்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் செலவீனத்தைக் குறைக்கலாம் என்று மின் துறை ஆடிட்டிங்கில் ஒரு பாயிண்டாக முன் வைத்தார்கள். நிதிச் சுமையைக் குறைப்பது என்கிற பெயரில் சர்வீஸ், மெயின்டனன்ஸை தனியாரிடம் கொடுத்து முதல் கட்டமாகச் செய்து பார்த்தார்கள். பாஜக சார்பான அந்த அதிகாரி அதைத்தான் அமல்படுத்தினார்.அதேபோல் தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் உள்ளிட்ட பவர் பிளான்டுகளை வேண்டுமென்றே நிறுத்தி, உதய் திட்டத்தில் இணைந்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அந்த அதிகாரி ஏற்படுத்தினார். ஆனால், இந்த அதிகாரிக்கு அடுத்த இடத்தில் இருக்கக் கூடியவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்கடுத்து மின் பயன்பாட்டை டொமஸ்டிக் யூசேஜ், ஹவுசிங் யூசேஜ், இண்டஸ்டிரியல் யூசேஜ், அக்ரிகல்ச்சுரல் யூசேஜ் என்று நான்காக பிரிக்கிறார்கள். அப்படி பிரிக்கும்போது இண்டஸ்டிரியலை தனியார் எடுக்க முன்வருகிறார்கள். அக்ரிகல்ச்சுரல் யூசேஜை மானியத்தின் அடிப்படையில் மின் துறை பராமரிக்கும். தனியாருக்கு லாபம் தரக்கூடிய துறையை அவர்களே தேர்வு செய்கிறார்கள். இவை எல்லாம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளாக  போய்க் கொண்டிருக்கின்றன.

மின் தயாரிப்பினைப் பொறுத்தவரை நான்கு வகைகளில் இருக்கிறது. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை, வெப்ப மின் நிலையம் (சோலார், கேஸ் - பெட்ரோலியம்). இதில் கேஸ் - பெட்ரோலில் ஓடக்கூடியதற்கு ஒன்றிய அரசு மானியம் கொடுக்கிறது. இதை நிறுத்திவிட்டு, பிரதமருக்கு நெருக்கமான தனியார் பெருநிறுவனங்களுக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள தெர்மல் பிளான்டுகளை குறிப்பிட்ட கால அளவுக்கு ஒருமுறை - அதாவது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை - மொத்த உற்பத்தியையும் நிறுத்திவிட்டு பராமரிக்க வேண்டும். அப்படி உற்பத்தியை நிறுத்தினால் மற்றொரு தெர்மல் பிளான்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இந்த நடைமுறைக்கு மாறாக 2018 - 19ம் ஆண்டுகளிலிருந்து சரியான முறையில் எங்கும் சர்வீஸ் நடத்தப்படவில்லை. இதனால் திடீர், திடீர் என தெர்மல் பிளான்டுகள் ஷட் டவுன் ஆகின்றன.

இந்த கோடை காலத்தில் மின் தடைக்கு காரணம், நீர் மின் நிலையங்கள் மூலமாக வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டிருப்பதுதான். எந்த அணையிலும் நீர் இல்லை. தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை, எண்ணூர், வள்ளூர் ஆகிய யூனிட்டுகளில் ஏதாவது இரண்டு யூனிட் கட் ஆகிறது. இதனால் 2000 - 3000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கர்நாடகா, மும்பைக்கு போகிற நெய்வேலி மெயின் லைனிலிருந்து கணிசமான மின்சாரம்  தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்படவில்லை. இதே மின் பற்றாக்குறை பிரச்னை அங்கேயும் ஆரம்பித்துள்ளதால், நெய்வேலி லைன் மொத்தமாக மற்ற மாநிலத்திற்கு போகிறது.

இயல்பாகவே தமிழ்நாட்டிற்கு சப்ளை செய்ய வேண்டியது 15,000 -17,000 மெகாவாட். அதில் தெர்மல் பிளான்டிலிருந்து 13,750 மெகாவாட் ஒரு நாளைக்கு உற்பத்தி ஆகிறது. இதில் இரண்டு யூனிட் பிரச்னையானால் கூட 2000 - 3000 யூனிட் பற்றாக்குறை ஆகும். அதை மின் தடை மூலம் சரி செய்கிறார்கள்.உண்மையில் மின் உபரி, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் ஓரளவு இருந்தது. கோடை நெருங்க நெருங்க எல்லோருக்கும் பற்றாக்குறை. கர்நாடகாவிலும் இதே பிரச்னை ஆரம்பித்துள்ளது...” என்று கூறுபவர், இந்தப் பிரச்னைக்கான காரணத்தையும் அடுக்கினார்.

“மின்சாரம் தயாரிப்பதற்கான முதலீட்டை தொடர்ச்சியாக செய்யவில்லை. ராமநாதபுரம், சிவகங்கையில் பிரதமருக்கு நெருக்கமான பெரு நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்டது. அதில் உற்பத்தி ஏதும் தொடங்கப்படவில்லை. அதற்கு ஒதுக்கிய நிதியை காரணம் காட்டி மற்ற இடங்களில் பராமரிப்பு போன்ற மற்ற விஷயங்கள் நடக்கவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பற்றாக்குறையைத்தான் ஜெயலலிதாவின் தொடக்ககால ஆட்சியில் சரிசெய்யும் விதமாக உற்பத்தியைத் தொடங்கினார்கள். ஆனால், இந்த பத்தாண்டுகளில் பயன்பாட்டின் அளவு கூடியிருப்பதை மறந்துவிட்டார்கள். அதாவது, அதிகரிக்கும் பயன்பாட்டுக்கு ஏற்ற உற்பத்தியைக் குறித்து கடந்த அதிமுக அரசு சிந்திக்கவேயில்லை. இதனால்தான் இப்போது இந்த மின் தடை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல் நிலக்கரி கொள்முதலில் ஏற்பட்ட பற்றாக்குறை, அனல்மின் நிலையத்துக்கான மிகப்பெரிய சிக்கலாக வெடித்தது. இதனால் ஜெயலலிதா நிலக்கரி சுரங்கங்களை தமிழ்நாடு மின்வாரியம் நேரடியாக துவங்க சில இடங்களை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்தார். அதுவும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கானதாக இருந்தது.

நீண்ட கால கொள்முதலுக்கு தமிழ்நாடு அரசு கேட்டபோது ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. நிலக்கரி டெண்டர் 2020ம் ஆண்டோடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆக, இந்த நிலக்கரி பற்றாக்குறையும் கூடுதல் சிக்கல்.தேர்தலுக்குப் பின் இந்த ஒரு மாத காலத்தில் சர்வீஸ், புரொடக்‌ஷன், மெயின்டனன்ஸ் ஆகிய இந்த மூன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய கோளாறு இப்போது பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது.
 
உதய் திட்டத்திற்கு எதிரானவர்கள், ஆதரவானவர்கள் என்று இரு பிரிவாக மின் ஊழியர்கள் உள்ளனர். மூன்று சப் ஸ்டேஷனை தனியார்வசமாக்க ரூ.93,000 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. பொதுத்துறை மின் உற்பத்தி, பகிர்மானம், ட்ரான்ஸ்மிஷன் ஆகிய மூன்றையும் கண்டுகொள்ளாமல் விட்டு, மீண்டும் பராமரிப்பு என்கிற பெயரில் தனியாருக்கு கொடுத்து, மொத்த உற்பத்தியையும் கையகப்படுத்த பாஜக சார்பான அந்த அதிகாரி துணை போனதால், புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு அந்த அதிகாரியை நீக்கிவிட்டு ராஜேஷ் குமார் லக்கானியை நியமித்துள்ளது.இது போல் பல விஷயங்களை ஆராய்ந்து, அறிக்கையை தாக்கல் செய்து மின்துறையில் உள்ள சிக்கல்களைக்களைய வேண்டிய பொறுப்பு புதிதாக பொறுப்பேற்றிருக்கக் கூடிய திமுக அரசுக்கு இருக்கிறது...’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த மின்வாரிய அதிகாரி.
                                             
அன்னம் அரசு