கூட்டமாக உறங்கும் யானைகள்!



கடந்த வாரம் உலகைக் குலுங்கவைத்த புகைப்படம் இதுதான்! கூட்டமாகத் தூங்கும் யானைகள்!

உண்மையிலேயே இது அபூர்வமான புகைப்படம். ஏனெனில், தனியாக யானை ஒன்று தூங்கு வதை மட்டுமே இதுவரை பார்த்திருக்கிறோம். இப்பொழுது தான் முதல் முறையாக கூட்டமாகத் தூங்கும் யானைகளைப் பார்க்கிறோம்.சீனாவின் ஷி சுவாங்பன்னா டாய் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியிலிருந்து கூட்டமாக வெளியேறிய 15 யானைகள் கொண்ட அந்தக் குடும்பம், 500 கிமீக்கு அதிகமான தூரத்தைக் கடந்து வடக்கு நோக்கி நகர்ந்து மனித வாழ்விடங்களுக்குள் நுழைந்ததால் கவனத்தை ஈர்த்து வருகிறது. னத்தைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் பயணித்து வரும் இந்த யானைக் குடும்பம் சமீபத்தில் ஒன்பது கோடிப் பேர் வசிக்கும் யூனான் மாகாணத் தலைநகர் கன்மிங்கிற்கு வந்துள்ளது.  

நகர்ப் பகுதியில் யானைகள் இருப்பதால், மனிதர்களுக்கும், மனிதர்களால்  யானைக் குடும்பத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக

நூற்றுக்கணக்கான காவல் பணியாளர்களையும், பத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் கொண்டு சீன அரசு கண்காணித்து வருகிறது.
யானைகள் ஏன் வனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தன என்பது யாருக்கும் தெரியாது. யானை இனத்துக்குப் பருவகால இடப்பெயர்வு பழக்கமும் கிடையாது. எனவே, இந்தப் பயணம் உணவுக்கான தேடலால் தூண்டப்பட்ட ஒரு தன்னிச்சையான பயணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  “யானைகள் தொலைந்து போகும் நிலையில் உள்ளன.

 இந்த யானைக் குடும்பம் எங்கு செல்கிறது என்பது அவற்றுக்கே தெரியாது. உணவைக் கொண்டிருக்கும் ஒப்பீட்டளவில் திறந்த பகுதிகளை நோக்கிச் செல்கிறது என்பது மட்டும் இதிலிருந்து தெரிய வருகிறது...” என்கிறார் லண்டன் விலங்கியல் சங்கத்தின் பாதுகாவலர் பெக்கி ஷு சென்.‘‘யூனானில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை சுமார் 150.

அதுவே இன்று 300 வரை இரட்டிப்பாகியுள்ளது.  அதேநேரம் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காடுகள் அழிப்பு காரணமாக தெற்கு யூனானில் யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருகின்றன. இதன் காரணமாக சில யானைகள் தங்கள் சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுகின்றன.

இது விஞ்ஞானிகளால் ‘சிதறல்’ என்று அழைக்கப்படுகிறது. யானைகள் ஏழு அல்லது எட்டு வயதுக் குழந்தைகளைப் போன்றது. மிகவும் புத்திசாலியும் கூட. நல்ல உணவு மற்றும் தண்ணீர் எங்கு கிடைக்கும் என்பது யானைகளுக்குத் தெரியும்...” என்கிறார் பெக்கி ஷு சென்.இந்த யானைக் குடும்பம் தங்களின் செயல்களால் இணையவாசி களைக் கவர்ந்து வருகிறது.

இந்த யானைகளின் நெடும் பயணம் குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். யானைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மனிதர்களும் - யானைகளும் ஒன்றாக நிம்மதியாக வாழ்வதற்கான வழிகளை ஆராய்வதற்குமான ஓர் அரிய வாய்ப்பாக இப்புகைப்படங்கள் நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன.

அன்னம் அரசு