இறுதி அஞ்சலி செலுத்திய யானை!



சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவைப் பார்த்து இணையமே கண்ணீர் வடித்தது. அதில் பிரமாண்டமான யானை ஒன்று, இறந்து கிடக்கும் தனது பாகனுக்கு அஞ்சலி செலுத்தியது. அதை அருகிலிருந்து பார்த்த மக்கள் அனைவரும் கதறி அழுதனர். கேரளாவைச் சேர்ந்த தாமோதரன் நாயர் எனும் ஓமணச்சேட்டன் சிறந்த யானைப் பாகன்களில் ஒருவர்.
60 வருடங்களுக்கு மேலாக யானைகளுக்கு பயிற்சியளித்து வந்தார். 25 வருடங்களுக்கு முன்பு பிரம்மதத்தன் என்ற யானை அவருக்கு அறிமுகமானது. தன் சொந்த மகன் போல பிரம்மதத்தனைப் பராமரித்து பயிற்சி கொடுத்து வந்தார் ஓமணச்சேட்டன். கேரளாவில் நடந்த  நூற்றுக்கணக்கான கோயில் திருவிழாக்களுக்கு இருவரும் சேர்ந்து போயிருக்கின்றனர்.

எவ்வளவோ யானைகளுடன்  பழக்கமிருந்தாலும் பிரம்மதத்தன்தான் அவருக்கு ஸ்பெஷல். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். பிரம்மதத்தனைக் காண வேண்டும் என்பது அவரது கடைசி ஆசை. அவரது ஆசையை நிறைவேற்றவே அன்றைக்கு பிரம்மதத்தன் வந்திருக்கிறார்.

த.சக்திவேல்