எஸ் .பி.பி. பாடிய கடைசி ஆல்பம் இதுதான்!



குயிலின் இசைக்குக் கூட மயங்காதோர் இருப்பர். ஆனால், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலுக்கு மயங்காதோர் இருப்பது அரிதே. அப்படிப்பட்ட மனிதரின் மறைவு சென்ற வருடம் கொரோனாவையும் தாண்டி நம்மை அசைத்துப் பார்த்தது.
என்னதான் பல்லாயிரம் பாடல்களைக் கொடுத்தாலும், அவர் குரலில் இனி புது பாடல்கள் கிடையாதே என்னும் ஏக்கத்துக்கு ஓரளவு ஆறுதலாக ‘அண்ணாத்த’ படப் பாடல் இருக்கும் என மனதைத் தேற்றிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இன்னொரு சர்ப்ரைஸாக அவரது பிறந்தநாள் சிறப்பாக எஸ்.பி.பி. பாடிய கடைசி ஆல்பம் பாடல் ‘காத்தாடி மேகம்’ வெளியாகியுள்ளது.

‘‘சென்னைதான் சொந்த ஊர். எம்.எஸ்.சி சவுண்ட் இன்ஜினியரிங் படிச்சிட்டு ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவிலே வேலை செய்தேன். அப்பதான் எஸ்.பி.பி. சார் கூட அதிகமா வேலை செய்கிற வாய்ப்பு கிடைச்சது...’’ பெருமையாக பேசத் துவங்கினார் இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன். ‘‘எப்போ ரெக்கார்டிங் வந்தாலும், தான் பாடப்போகிற பாட்டு, ஸ்டூடியோ, எழுத்தாளர், இசையமைப்பாளர், ரெக்கார்ட் செய்கிற சவுண்ட் இன்ஜினியர், என்ன ஸ்கேல்... இப்படி எல்லாமே டைரியிலே சார் நோட் செய்துக்குவார்.

அதேபோல் பாடலை தெலுங்கிலே எழுதிட்டு ரெக்கார்டிங் தியேட்டருக்குள்ளே போவார். தனக்குத் தானே அரைமணி நேரம் டிரெயினிங் எடுத்துட்டு உள்ளே இருந்து ஒரு குரல் மட்டும் ‘ரெடி’னு வரும்.  அடுத்த 10 நிமிஷத்திலே பாடல் முடிஞ்சிடும். இதெல்லாம் மறக்கவே முடியாத தருணங்கள். படம் இயக்கி அல்லது படத்திலே சான்ஸ் கிடைச்சு சார் வாய்ஸ் எடுக்கறதைவிட ஏன் ஒரு ஆல்பம் பாடல் எடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படித்தான் சார்கிட்ட கேட்டேன். சாரும் ஓகே சொன்னார்.

நான் ‘சூரியன் எப்.எம்.’ல 2015 முதல் 2018 வரை வேலை செய்தேன். ‘சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்’ அணிக்கு ஆன்தம் பாடலுக்கு நான்தான் இசையமைச்சேன். இப்ப ‘சூரியன் எப்.எம்.’ல ஓடுகிற ஸ்டேஷன் புரமோஷன் பாடல்கள் எல்லாமே நான் உருவாக்கினதுதான். அனிருத், அருண்ராஜா காமராஜா, சின்மயி, பென்னி தயால், சக்தி கோபால்நாத், திப்பு உள்பட இருக்கற அத்தனை டாப் பாடகர்களும் பாடியிருப்பாங்க.

இந்தியாவிலேயே முதன்முறையா டாப் பாடகர்கள் குரல்ல புரமோஷன் ஜிங்கிள்கள் (பாடல்கள்) ஓடுறது நம்ம ‘சூரியன் எப்.எம்.’லதான். 50 புரமோஷன் பாடல்கள் செய்திருக்கேன். இப்போ அருண்ராஜா காமராஜா கம்பெனியிலே அவருக்கு ஆல்பம் பாடல் ஒண்ணு முடிச்சிட்டேன். அடுத்து ரெண்டு படங்களுக்கு வேலை செய்திருக்கேன்...” என்னும் விக்னேஷ்வர் ‘காத்தாடி...’ பாடல் குறித்து பகிர்ந்தார். ‘‘எந்த கருத்தும் இல்லை. லைட்டா ரிலாக்ஸா ஒரு பாடல். ஓர் ஆணுக்கு ஒரு பெண் மேல் இருக்கற ஈர்ப்பு, அதுக்குள்ள ஒரு அழகான பயணம்... அவ்வளவுதான் ‘காத்தாடி மேகம்’.

கவிஞர் குட்டி ரேவதி கூட ஒரு புராஜெக்ட் சேர்ந்து செய்தேன். அப்படியே என் தனி ஆல்பம் கனவு பத்தியும் சொன்னேன். சந்தோஷமா எழுதிக் கொடுத்தாங்க. எஸ்.பி.பி. சார் கிட்ட கேட்டபோது, புதுமுக இசையமைப்பாளர்னு எல்லாம் பார்க்காம கொஞ்சம் கூட யோசிக்காம உடனே ஓகே சொன்னார். சார் ஏற்கனவே நிறைய தனி ஆல்பங்கள்ல பாடியிருக்கார்.

ஆனா, பெரும்பாலும் அவை ஆன்மீகம்... தத்துவம் சார்ந்த பாடலாவே இருக்கு. இந்த ‘காத்தாடி மேகம்’ அப்படியில்ல. இது ரிலாக்சான பாடல்.எஸ்.பி.பி. சார் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருந்தப்ப, டிராக்கை அனுப்பினேன். கேட்டுப் பாராட்டினார். ‘உனக்கு நிறைய திறமை இருக்கு, நல்லபடியாக வர வாழ்த்துகள்’னு வாழ்த்தினார்.

அவரை வெச்சே வீடியோ எடுக்கவும் நினைச்சேன். ஆனால், துரதிர்ஷ்டவசமா சார் மறைவு எல்லாத்தையும், எல்லாரையும் திருப்பிப் போட்டுடுச்சு. இப்ப அவருடைய பிறந்தநாள் காரணமா பாடலை ஸ்கெட்ச் கான்செப்ட்ல அனிமேஷன் வீடியோவா ரிலீஸ் செய்திருக்கோம்...’’ என்னும் விக்னேஷ்வர், ஏன் அப்போதே பாடலை வெளியிடவில்லை என்பதையும் சொன்னார்.

‘‘அவர் மறைவைக் காரணமா வெச்சு கோடானு கோடி ரசிகர்களுடைய இழப்பையும், அன்பையும் இந்தப் பாடலுக்கு அனுதாபமா மாத்திக்கக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். இப்ப அவர் பிறந்த நாள் ஸ்பெஷலா இந்தப் பாட்டை வெளியிடுறது சந்தோஷமா இருக்கு...’’
 
ஷாலினி நியூட்டன்