லூட்கேஸ்
கடந்த வருடம் ‘ஹாட் ஸ்டாரி’ல் நேரடியாக ரிலீஸாகி ஹிட் அடித்த இந்திப் படம், ‘லூட்கேஸ்’.பிரின்டிங் பிரஸ்ஸில் உள்ள இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் வேலையைச் செய்து வருகிறான் நந்தன். அவனுடைய மனைவிக்கும் மகனுக்கும் ஏகப்பட்ட கனவுகள். ஆனால், நந்தனுக்குக் கிடைக்கும் சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்டுவதே படுசிரமமாக இருக்கிறது. இந்நிலையில் ஓர் இரவு நேரம் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் நந்தனுக்கு ஒரு சூட்கேஸ் கிடைக்கிறது. அதைத் திறந்தால் கட்டுக் கட்டாக பணம்.
 யாருக்கும் தெரியாமல் சூட்கேஸை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறான். ஆள் இல்லாத பக்கத்து வீட்டில் அதை பதுக்கி வைக்கிறான். சூட்கேஸில் இருக்கும் பணம் ஒரு எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமானது. மட்டுமல்ல; முக்கிய ஃபைல் ஒன்றும் அந்த சூட்கேஸுக்குள் இருக்கிறது. அது வெளிவந்தால் எம்.எல்.ஏ.வின் அரசியல் வாழ்க்கையே காலியாகிவிடும். அதனால் தன்னுடைய ஆட்களை அனுப்பி அந்த சூட்கேஸைத் தேடுகிறார்.
இதை அறிந்த இன்னொரு கூட்டமும் சூட்கேஸைத் தேட வேகமெடுக்கும் திரைக்கதை கிளைமேக்ஸில்தான் நிற்கிறது. நகைச்சுவையும் அரசியல் விளையாட்டும் சரிவிகிதத்தில் கலந்த பானமாக ருசிக்கிறது இந்தப் படம். நந்தனாக குணால் கெம்மு அசத்தியிருக்கிறார். இயக்குநர் ராஜேஷ் கிருஷ்ணன் தனது முதல் படத்திலேயே அப்ளாஸை அள்ளிவிட்டார்.
|