களை!



திகட்டத் திகட்ட ஒரு ஆக்‌ஷன் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘களை’. ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த மலையாளப்படம். தெனாவட்டான ஓர் ஆள் ஷாஜி. ஆதிக்க மனப்பானமை வாய்ந்த அவனுக்கு மனைவியும் மகனும் இருக்கிறார்கள்.
அவன் செய்த பிசினஸ் எல்லாம் தோல்வியில் முடிகிறது. அதனால் ஷாஜியுடைய அப்பா அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. இந்நிலையில் அவனுடைய தோட்டத்தில் வேலை செய்ய சிலர் வருகின்றனர். வேலை செய்ய வந்தவர்களில் ஒரு பழங்குடி இளைஞன் ஷாஜியைப் பழிவாங்குவதற்காக வந்திருக்கிறான். அந்த இளைஞனுக்கும் ஷாஜிக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை.

இரண்டு மிருகங்கள் சண்டை போட்டுக்கொள்வதைப் போல ஷாஜியும் பழங்குடி இளைஞனும் மோதிக்கொள்கிறார்கள். படத்தில் பாதிக்கு மேல் இந்த சண்டையே தொடர்கிறது. இருந்தாலும் ஓர் இடத்தில் கூட சலிப்புத் தட்டுவதில்லை. ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது திரைக்கதை.ஷாஜியாக டோவினோ தாமஸ் அதகளம் செய்திருக்கிறார். பழங்குடியாக நடித்த இளைஞன் ஆக்‌ஷனில் மிரட்டியிருக்கிறார். படத்தின் இயக்குநர் வி.எஸ்.ரோஹித்.