அசத்துது டோலிவுட்...தேயுது கோலிவுட்..?



கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஐம்பது சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன. சில படங்கள் திரைக்கு வந்தும், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. இதனால் எல்லோரின் கவனமும் டாப் ஹீரோ படமான ‘மாஸ்டரை' நோக்கி நகர்ந்தது. ‘விஜய் படம் ரிலீஸானால்தான் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு படையெடுக்கும்’ என்ற நம்பிக்கை அதிகரித்தது. அதற்கேற்ப ‘மாஸ்டர்’ வெளியானதும் கூட்டமும் திரையரங்குக்கு படையெடுத்தது.

அதன் பிறகு..? கிட்டத்தட்ட 45 படங்களுக்கு மேல் கொரோனா பொது ஊரடங்குக்குப் பின் தமிழில் வெளியாகியிருக்கின்றன. ஆனால், எந்த படத்திற்கும் தியேட்டர்களில் கூட்டம் இல்லை.  தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டில் நிலைமை அப்படியில்லை. அங்கு சினிமா இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. வாரத்திற்கு மினிமம் மூன்று படங்களாவது ரிலீஸாகின்றன. மூன்றுமே லாபம் பார்க்கின்றன. ஒன்றல்ல இரண்டல்ல... கிட்டத்தட்ட ஆறு படங்கள் கொரோனா பொது ஊரடங்குக்குப் பின் அங்கு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.

இதில் குறைந்த பட்ஜெட்டில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘உப்பண்ணா’ நூறு ப்ளஸ் கோடியை ஆந்திராவில் வசூலித்துள்ளது!இதுபற்றி தமிழக திரையுலக ஜாம்பவான்கள் என்ன சொல்கிறார்கள்? ‘‘ஒரு காலத்துல தமிழ்ச் சினிமா ஆரோக்கியமா இருந்துச்சு. ‘காதல்’, ‘வெயில்’னு சின்னச் சின்ன  படங்கள் நல்லா ஓடுச்சு. ஆனா, இனி அப்படி நடக்கறது சிரமம்...’’ என வருத்தத்துடன் ஆரம்பித்தார் முப்பது ஆண்டு அனுபவமிக்க  ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம்.

சமீபத்தில் வெளியான ‘மிருகா’ என்ற  படத்தின் மூலம் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் கால் பதித்தவர் இவர்.‘‘இப்ப உட்கார்ந்த இடத்துல இருந்தே செலக்ட்டிவ்வா ஆன்லைன்ல பொருட்களை வாங்க ஆரம்பிச்சிட்டோம். கொரோனா லாக்டவுன்ல வீட்டில் இருந்தபடியே எல்லா மொழிப் படங்களும் பார்க்க முடியும்னு சூழல் வந்துடுச்சு.

தவிர தியேட்டர்ல படம் பார்க்கணும்னாலே செலவுகள் தலைசுத்த வைக்குது. டிக்கெட் கட்டணம் தவிர, கேன்டீன் செலவு, பார்க்கிங் செலவுனு ஓர் ஆளுக்கு ஐநூறு ரூபாயாவது ஆகிடுது. ஆனா, ஓடிடில ஒரு முறை பணம் கட்டினா போதும். ஆயிரக்கணக்கில படங்கள் ஜானர் வாரியா வரிசை கட்டி நிக்குது. ‘த்ரிஷ்யம் 2’, ‘சூரரைப் போற்று’னு டாப் ஹீரோக்கள் படங்களையும் எக்ஸ்க்ளூசிவ்வா பார்க்க முடியுது.

இன்னிக்கு சூழல்ல தியேட்டர்களுக்கு யங்ஸ்டர்ஸ்தான் படம் பார்க்க வர்றாங்க. ஃபேமிலி ஆடியன்ஸ் குறைஞ்சுட்டாங்க. முன்னாடியெல்லாம் ஒரு படத்தை தியேட்டர்ல மிஸ் பண்ணினா... மிஸ் பண்ணினதுதான். அப்புறம் அந்தப் படத்தை டிவில ஒரு ஃபெஸ்டிவல் டைம்லதான் பார்க்க முடியும்.

இப்ப ஒடிடில எந்த நேரம் யார் வேணாலும் பார்க்க முடியும். டைம் ஃப்ரேம் கிடையாது. வேலையை முடிச்சுட்டு ரிலாக்ஸா படம் பார்க்கலாம் என்கிற நிலை வந்தாச்சு...’’ என்ற எம்.வி.பன்னீர்செல்வம், ஆந்திராவின் நிலை குறித்த தன் பார்வையை விளக்கினார்.

‘‘அங்க சினிமா லவ்வர்ஸ் இன்னும் அப்படியே இருக்காங்க. எந்த படம்னாலும் தியேட்டருக்கு போய் கொண்டாட்ட மனநிலையோடு பார்க்கறாங்க. தியேட்டருக்கான ஆடியன்ஸ் கட்டுக்கோப்பா இருக்காங்க. திரையரங்க கட்டணம் அங்க குறைவா இருப்பதும் இந்தக் கொண்டாட்டம் குறையாம இருக்க ஒரு காரணம். 120 ரூபா டிக்கெட்டும் தர்றாங்க. 50 - 60 ரூபா டிக்கெட்டும் கொடுக்கறாங்க. தமிழகத்துல 120 ரூபாய்க்கு குறைஞ்சு டிக்கெட் தர்றதே இல்லையே..?’’ வேதனையுடன் சொல்கிறார் பன்னீர்செல்வம்.

எழுத்தாளரும், இயக்குநருமான கேபிள் சங்கர், ‘‘எந்த ஒரு பழக்கத்தையும் நூறு நாட்கள் தொடர்ந்துட்டா அது வாழ்க்கையாகிடும். நம் மக்கள் தியேட்டருக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. வீட்டிலேயே படம் பார்த்து பழகிட்டாங்க. இந்நிலைல அவங்க இழந்த தியேட்டர் அனுபவத்தை கொடுக்க ஏதாவது செய்ய வேண்டாமா?’’ என்ற கேள்வியை முன்வைத்தபடி பேச ஆரம்பித்தார்.

‘‘சாலிக்கிராமத்தில் இருக்கும் ஒரு டீக்கடைல தரமான டீ கிடைக்குது. இதனால அங்க கூட்டத்துக்கு பஞ்சமில்ல. ஆனாலும் வாடிக்கையாளர்களை இழுக்க விளம்பரம், பரிசுகள், சலுகைகள்னு அறிவிக்கிறாங்க.ஒரு டீக்கடையே இப்படி மெனக்கெடும்போது திரையரங்குகள் என்னவெல்லாம் செய்யணும்..? விஜய் படம் வெளிவந்தப்ப டிக்கெட் விலை, கேன்டீன் பண்டங்கள் விலை, பார்க்கிங் கட்டணத்தை ஏத்தினாங்க. இதனால தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவங்க மிரண்டுட்டாங்க. ‘ஆஹா... தியேட்டர் இப்படித்தான் இருக்கும்போல... இனி எப்பவாவது வந்தா போதும்’னு முடிவு எடுத்துட்டாங்க.

அதுமட்டுமா..? ‘நாங்க அப்படியேதான் இருப்போம். படமெடுத்த நீ அங்க வியாபாரம் செய்யக்கூடாது... இங்க வியாபாரம் செய்யக்கூடாது’னு திரையரங்குகள் ரூல்ஸ் போடுறது அபத்தமா இல்லையா? சிங்கிளா வரும் ஆடியன்ஸுக்கும் அதே டிக்கெட்தான். குறைந்த டிக்கெட் கிடையாது. ‘டிக்கெட்டுக்கு ஒரு பப்ஸ் இலவசம்; நான்கு டிக்கெட் வாங்கினால் அனைவருக்கும் பாப்கார்ன் - கூல் டிரிங்க்ஸ் இலவசம்; தரமான ஒலி, ஒளி அமைப்பு; ஏசி’னு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து திரையரங்கு அனுபவத்தை ரசிகர்களின் பாக்கெட் பழுக்காதபடி பார்த்துக்கிட்டா கண்டிப்பா மக்கள் தியேட்டர்ஸுக்கு வருவாங்க.

நம் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் படங்கள் நல்லா போகுது. கொரோனாவுக்குப் பிறகு நிறைய ஹிட் படங்கள் தொடர்ச்சியா கொடுத்திருக்காங்க. காரணம், அங்குள்ள தியேட்டர்கள்ல இருக்கும் டிக்கெட் விலை. ஸ்நாக்ஸுக்கு எம்ஆர்பி விலைதான் வசூலிக்கிறாங்க. இங்க மாதிரி ஆன்லைன் புக்கிங்குக்கு கூடுதலா 30 ரூபா அங்க கிடையாது...’’ என அடுக்கு கிறார் கேபிள் சங்கர்.

தமிழ்ச் சினிமாவில் நாற்பதாண்டு கால அனுபவமிக்கவர் தயாரிப்பாளரும், இயக்குநருமான கேயார். தயாரிப்பாளர் சங்கத்திலும் பொறுப்புகள் வகித்தவர் அவர். ‘‘விஷால் படங்கள் குறைஞ்சது 10 ஷோஸ் ஆவது ஃபுல்லாகும். ஆனா, ‘சக்ரா’வுக்கு 40% இருக்கைகள் கூட நிரம்பல. ஆனந்தி நடிச்ச ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’க்கு மவுத் டாக் நல்லா இருந்துச்சு. ஆனா, படம் ஓடல.

நான் நாற்பது வருஷங்களா இந்த இண்டஸ்ட்ரீல இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு நல்லபடம்னு மவுத் டாக் வந்தா, அட்லீஸ்ட் சனி, ஞாயிறுகள்ல ஷோஸ் ஃபுல்லாகும். அந்த நிலை இப்ப இல்ல. முன்னாடி மக்கள் மனசுல உணவு, உடை, இருப்பிடம் மாதிரி ஓர் அத்தியாவசியமா சினிமாவும் இருந்துச்சு. இப்ப அத்தியாவசிய பட்டியல்ல சினிமா இல்ல. தேவைனா பாத்துக்கலாம்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.

நல்ல படமா இருந்தாக் கூட தியேட்டருக்கு வந்து பார்க்காததுக்கு காரணம், டிவி, ஓடிடில அந்தப் படம் வந்துடும் என்கிற நிலைதான். இப்ப மறுபடியும் கொரோனா வேகமா பரவுதுனு சொல்றாங்க. ஸோ, எனக்குத் தெரிஞ்சு சினிமா சகஜ நிலைக்கு வர எப்படியும் ஒரு வருஷமாவது ஆகும்...’’ என்கிறார் கேயார்.

நடப்பு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயலாளரான டி.சிவாவின் கருத்தோ வேறு கோணத்தில் இருக்கிறது. ‘‘தியேட்டர்ல கேன்டீன்ல பார்ப்கார்ன், காஃபி ரேட் அதிகமா இருக்கறது இங்க பிரச்சினை இல்ல. காசு இருக்கறவங்க சாப்பிடப் போறாங்க.

இல்லாதவங்க விட்டுடப்போறாங்க!

ஆனா, ஃபேமிலியோடு போறவங்க நிலை தர்மசங்கடம் என்பதை ஏத்துக்கறேன். முன்னாடி எல்லாம் தியேட்டர் டிக்கெட் வாங்குறது மட்டும்தான் செலவா இருந்துச்சு. அதிக பட்சம் ஒரு பார்ப்கார்ன்தான். இப்ப கேன்டீனே ஒரு மினி ஃபுட் கோர்ட்டாகிடுச்சு. ஸோ, குழந்தைகள் கேட்கறாங்கனு அவங்க வாங்க வேண்டிய சூழல் வந்திடுச்சு.

ஆனா, இது எல்லாமே மல்டி ஃபிளக்ஸுக்கானதுதான். மால் இல்லாத தியேட்டர்கள்ல இன்னிக்கும் ஐம்பது ரூபாய்க்குள் பார்ப்கார்ன் வாங்க முடியும். சினிமா இயல்பு நிலைக்குத் திரும்பாததற்கு இதெல்லாம் முக்கியமான காரணமல்ல...’’ என சஸ்பென்ஸ் வைத்தவர், சில நொடிகள் மவுனத்திற்குப் பின் தொடர்ந் தார்.

‘‘‘மாஸ்டர்’ மேஜிக்கை அதுக்குப் பிறகு வந்த எந்தப் படமும் நிகழ்த்தல. அந்தப் படத்துக்குப் பிறகு பரவாயில்லனு பார்டரைத் தொட்ட படம்னு ‘நெஞ்சம் மறப்பதில்லை’யைச் சொல்லலாம். மீதி எல்லா படங்களும் காலி. பல மல்டிஃப்ளக்ஸ் தியேட்டர்கள்ல அஞ்சு ஸ்கிரீன்ஸ் இருக்கற இடத்துல ரெண்டுலதான் ஷோ ஓடுது. மீதியை சும்மா வச்சிருக்காங்க. வெளியே இருந்து பார்த்தா தியேட்டர் ஓப்பனிங்ல இருக்கும். உள்ளுக்குள்ள போனா, ஸ்கிரீன் வெறிச்சோடியிருக்கும்.

மக்களுக்கு கொரோனா பயம் போகலைங்கறது முக்கியமான ஒரு காரணமா இருந்தாலும், ‘பணப்புழக்கம் இல்லாத சூழல்ல இந்தப் படத்துக்கு இவ்வளவு செலவழிச்சு போகணுமா’னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. மக்களுக்கும் வாழ்வாதாரப் பிரச்னை. லாக்டவுனுக்குப் பிறகு பலருக்கும் தங்களோட வேலை போச்சு, சம்பளத்தை குறைச்சிட்டாங்க. வருமானம் கிடையாது. இப்படி பல காரணங்களும் இருக்கு...’’ என்கிறார் சிவா.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம், ‘‘தமிழ்சினிமா இயல்பு நிலைக்கு வரலைங்க...’’ என ஒப்புக்கொள்கிறார். கூடவே ‘‘இதற்கெல்லாம் காரணம் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும்தான்...’’ என அதிர்ச்சியை வீசுகிறார்.

‘‘மக்கள் எதிர்பார்க்கறது நல்ல கன்டன்ட் உள்ள படங்கள். அதைக் கொடுக்காம போனதனாலதான் சினிமா இயல்பு நிலைக்கு வராமல் இருக்கு. ‘மாஸ்டர்’ மாதிரி ஒரு நாலு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தா இயல்பு நிலைக்கு வந்திருக்கும். ஆனா வந்தது எல்லாமே சுமாரான படங்கள்.

மக்களுக்கு கொரொனா பயம் இல்லைனு சொல்ல வரல. இருக்கத்தான் செய்யுது. ஆனா, அந்த பயம் வெறும் 20%தான். இப்ப ‘சுல்தான்’ படத்துக்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும்னு நம்பறோம். படத்துல கதை இருந்தா, மக்கள் ரசிக்க ரெடியா இருக்காங்க.

தமிழ் சினிமாவுல கதையே கிடையாது. நடிகர்களுடைய பில்டப்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க. நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதில்ல. ஆரவாரங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. அதை சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் தவிர்த்து 80 பர்சன்ட் பொதுமக்கள் விரும்புறதில்ல.

இதனாலதான் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ இன்னும் இயல்புக்கு திரும்பலை. ஆந்திராவுல கன்டன்டுக்கு முக்கியத்துவம் தர்றாங்க. அதனால அங்க சினிமா வாழுது...’’ உறுதி யாகச் சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம். கோலிவுட்டில் மீண்டும் வசந்தம் வீசவேண்டும் என்பதுதான் சினிமாவை நேசிப்பவர்களின் விருப்பம். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.        

மை.பாரதிராஜா