70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..?‘உன்ன நான் தொட்டதுக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு / மாடா உழைச்சவன்டி மானம் கெட்டுப் போனவன்டி...’ என்ற பாடல் 1990களில் பிரபலம். தேவா இசையில் ‘ஊர் மரியாதை’ படத்துக்காக அந்தப் பாடல் அமைந்திருந்தது. ஆர்.பி.செளத்ரி தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். சரத்குமார் துணை நடிகராக, வில்லனாக, குணச்சித்திர நாயகனாக என்று மெல்ல மெல்ல அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த வேளையில் நாயகனாக நடித்து வெளிவந்த படம்.

ஆனால், இந்த ‘உன்ன நான் தொட்டதுக்கு...’ பாட்டு ஏற்கனவே இதே சரத்குமாரை நாயகனாக்கி ‘கருணாநிதி சாந்தாராம்’ என்ற இயக்குநர் கொடுக்கவிருந்த ‘அதிகாலை சுபவேளை’ படத்துக்காகப் பதிவு செய்தது!இந்த ‘கருணாநிதி சாந்தாராம்’ பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயக்குநர் அகத்தியன் என்றால் பளிச்சென்று மின்னுமே! அவரேதான். ராமராஜனின் ‘மனசுக்கேத்த மகராசா’ படத்தின் கதாசிரியராக இதே பெயரிலும், பின்னர் ஒரே காட்சியோடு பெட்டி திரும்பிய ‘மாங்கல்யம் தந்துனானே’ படத்தின் இயக்குநராக ரவிதாசன் என்ற பெயரிலும் இவர் அறிமுகமானதெல்லாம் தனிக்கதை.

தான், இயக்கிய ஆரம்ப காலப் படமான ‘அதிகாலை சுபவேளை’ குறித்து அகத்தியன் எங்கும் பேசியதாக நான் அறியவில்லை. அத்தோடு தன்னுடைய எந்தப் படத்திலும் சரத்குமாரோடு இவர் இணையாததும் ஒரு விநோதம் கலந்த மர்மம்.‘அதிகாலை சுபவேளை’ படப் பாடல்கள் 1989ம் ஆண்டில் வெளிவந்த போது அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் திருப்பத்தூரான்.

இவரே பின்னாளில் காளிதாசனாக தேவாவோடு தொடர் இன்னிசை விருந்து படைத்தவர்! அப்போது ‘உன்ன நான் தொட்டதுக்கு’ பாடலை கிருஷ்ணராஜ் பாடியிருந்தார். அப்போது கிருஷ்ணராஜ் பெயர் ராஜன் சக்ரவர்த்தி!‘அதிகாலை சுபவேளை’ படம் வெளிவராத காரணத்தால் அந்தப் படத்தின் அருமையான பாடல்கள் வீணாகக் கூடாதென்று நினைத்தாரோ என்னமோ, தன்னுடைய இசையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ படத்தில் இடம் பெற்ற ‘ராகம் ஒன்று அது சுகமானது...’ என்ற மனோ, எஸ்.ஜானகி பாடிய இனிய பாடலைப்  பொருத்தினார்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தப் ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் சாட்சாத் அகத்தியன்தான்!இதற்குமுன் இன்னொரு புதினமும் இடம்பெற்றிருக்கிறது.‘ராகம் ஒன்று அது சுகமானது...’ பாடலையும், கங்கை அமரன் பாடிய ‘பூஞ்சோலைக் குருவிகளே...’ பாடலையும் வெளிவராத ‘அதிகாலை சுபவேளை’ படத்தில் இருந்து கார்த்திக் நடித்த ‘நீலக்குயிலே நீலக்குயிலே’ படத்திலும் பாவிக்க இருந்தார்கள். இப்படமும் வெளிவரவில்லை! ரமி இசைத்தட்டில் இந்தப் பாடல்கள் நீலக்குயிலே நீலக்குயிலே படப் பெயருடனேயே இருக்கின்றன.

இன்னொன்று - ‘ஓரடி காதல் வாழ...’ என்ற எஸ்.ஜானகி பாடிய ‘அதிகாலை சுபவேளை’ படப்பாட்டு, பின்னர் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் குழுப்பாடலில் (‘அன்பே சரணம்...’ / ‘தண்ணிக் குடம் எடுத்து...’) தொகையறாவில் மெல்லத் தழுவியது. ஆகவே, இளையராஜா காலத்தில் மட்டுமல்ல, தேவா காலத்திலும் எப்பவோ போட்ட பாட்டு எதுக்கோ பயன்பட்டிருக்கு!

கானா பிரபா