காடன்மானம் கெட்ட மனிதர்கள் தலை நிமிர்ந்து வாழும் போது, மண்ணுக்காக போராடு பவன் தலைகுனியக் கூடாது என்பதை உணர்த்துகிறான் ‘காடன்’.சூரிய ஒளியே தரையில் பாயாத அளவிற்கு அடர்ந்த காடு அது. ஓங்குதாங்காக உயர்ந்து நிற்கும் மரங்களுடன் யானைகள், பறவைகளென இயற்கையோடு இயைந்து வாழ்பவர் ராணா.
அந்த காடு, அவரது தாத்தா வழி பூர்வீக சொத்து. அந்த காட்டின் மீது வனத்துறை அமைச்சருக்கு ஒரு கண். காட்டை அழித்து அங்கே தனது ட்ரீம் புராஜெக்ட்டாக நகரம் ஒன்றை உருவாக்க நினைக்கிறார். அதன் முதல் முயற்சியாக காட்டில் நீளமான சுவரை எழுப்புகிறார்.

தன் திட்டத்திற்கு இடையூறு செய்யும் ராணாவையும், அங்கே வசிக்கும் பழங்குடியினரையும் அழிக்கும் முயற்சியில் காவல்துறையை ஏவி விடுகிறார் அமைச்சர்.இதில் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட, கொதித்தெழுகிறார் ராணா. அமைச்சரால் காட்டை அழிக்க முடிந்ததா? ஹீரோ அதனை முறியடித்தாரா? அந்த யானைகளின் கதி என்ன? காட்டை அழித்தால் உலகம் என்னவாகும்... என்பதெல்லாம் மீதிக்கதை.

அசாம் மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானைகளின் வழித்தடங்களை மறித்து பல கிலோமீட்டர் தூரத்துக்கு சுவர் எழுப்பியுள்ளனர். இந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். நமக்கு நன்மை செய்யும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற சமூக அக்கறைக்காகவே அவருக்கு ஒரு பூங்கொத்து. கொஞ்சம் பிசகியிருந்தாலும் டாகுமெண்டரி சாயல் வந்துவிடும் என்பதை உணர்ந்து இயக்கியிருக்கிறார்காடனாக ராணா. அவரது உயரமும், தாடியும், உடையும் அவர் காட்டில் விலங்குகளோடு வசிப்பவர் என்பதைச் சொல்லிவிடுகிறது.  

யானைகளை நேசிக்கும் இதயமும், துளிர்த்த செடியைப் பார்த்து பூக்கும் புன்முறுவலும், இயலாமையால் வெறுமையான கண்களுமாக காடனாகவே வாழ்ந்திருக்கிரார் ராணா. கும்கி யானைப் பாகனாக விஷ்ணு விஷால். காடுகளைப் பாதுகாப்பதன் மகத்துவத்தை அறியாத பாகனாக, பணத்திற்காக, தான் நேசிக்கும் யானையின் நலனைக் கூட கண்டுகொள்ளாதவராக கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார்.

அவரது உதவி யாளராக வரும் தெலுங்கு நடிகர் ரகுபாபு, காமெடியும் குணச்சித்திரமுமாக கலந்தடித்திருக்கிறார். ஹீரோயின்களான சோயா ஹூசைன், ஷிரியா பில்கான்கர் இருவருக்கும் அவ்வளவு ஸ்கோப் இல்லை. வனத்துறை அமைச்சராக அனந்த் மகாதேவன் மிரட்டியிருக்கிறார்.

காடும் காடு சார்ந்த இடமும்தான் கதைக்களம் என்பதை உணர்ந்து, விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார். பாடல்களில் கவனம் செலுத்தத் தவறிவிட்டது சாந்தனு மொய்த்ராவின் இசை. புவன் னிவாசனின் எடிட்டிங், நறுக்.   இயற்கை ஆர்வலர்களுக்கானவன் ‘காடன்’.

குங்குமம் விமர்சனக் குழு