இந்திய எழுந்து நிற்க 13 ஆண்டுகளாகும்!கடந்த ஆண்டு இந்நேரத்தில் உலகையே உலுக்கத் தொடங்கியது கொரோனா. உலக நாடுகளின் ஆரோக்கியம், மக்களின் உயிர், தேசங்களின் பொருளாதாரம், வணிகம் உட்பட சகலத்தையும் முடக்கிப்போட்டுவிட்டது.
வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை எப்படி இந்த சரிவிலிருந்து மீள்வதென திகைத்து நிற்கின்றன. தீ பட்ட காயத்தில் தேள் வந்து கொட்டியது போல், ஏற்கெனவே மோடி தலைமையிலான அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் நிலைகுலைந்து நின்றிருந்த இந்தியப் பொருளாதாரம் கொரோனா வந்ததும் படுத்தேவிட்டது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் சிறு தொழில் நிறுவனங்கள் வரை திவாலாகின. பல கோடிப் பேர் வேலையிழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். ஒரு கட்டத்தில் லாக் டவுன் தளர்வுகள் அமலாகி கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரம் உருளத் தொடங்க, இறுக்கிய கழுத்துக்கு மூச்சுக் காற்று கிடைத்தது போல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது இந்தியப் பொருளாதாரம்.

இந்த ஆண்டாவது நம் பொருளாதாரம் தலையெடுக்குமா என்று நாம் ஏக்கத்துடன் காத்திருக்க, கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். இப்படியான சூழலில்தான் சர்வதேச நாடுகள் உறுப்பினராக உள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டுறவு அமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இதில், இந்தியப் பொருளாதாரம் நிமிரத் தொடங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. அதே சமயம் கொரோனா உருவாக்கிய பொருளாதாரப் பாதிப்பிலிருந்து நாம் இன்னமும் மீளவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. உலக அளவில் 2020 - 21ம் நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நிலவரம் திட்டமிடப்பட்டதைவிட -3% சரிவடைந்துள்ளது. இதில், இந்தியாதான் உச்சபட்ச சரிவைக் கண்டுள்ளது. அதாவது 7.8% சரிவு. இது உலக அளவிலான சரிவைவிடவும் இரண்டு மடங்குகளுக்கு மேல் அதிகம்.

இந்த மாற்றம் சீனாவில் வெறும் ஒரு சதவீத சரிவாகவும், ஐரோப்பிய யூனியனுக்கு 3.8% சரிவாகவும் உள்ளது. அமெரிக்காவில் 0.2% சரிவுதான் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால், என்ன பாதிப்பு இருந்தாலும் லாக்டவுனை அமெரிக்காவில் முழுமையாக அமல்படுத்த மறுத்ததே அவர்களின் பொருளாதாரம் சரிவடையாமல் சமாளித்ததற்குக் காரணம் என்கிறார்கள். மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக முன்னேறி இயல்பான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

2021ம் ஆண்டைப் பொறுத்த வரை உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும் ஒன்றாகவே கருதப்படுகிறது. அதாவது, நம்முடைய ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 12.6% என்பதாக இருக்கும் என்று ஓஇசிடி அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு என்பது ஜிடிபியில் 7.4% தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒட்டு மொத்த சராசரியில் பெரிய பாதிப்பை உருவாக்குவதால் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் இந்தியாவின் ஜிடிபி இந்த ஆண்டும் சிறிதாகவே இருக்கும் என்கிறது அந்த அறிக்கை.

2020 - 21ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு ஜிடிபியில் சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுவதற்கு கொரோனா காலப் பின்னடைவே காரணம் என்கிறார்கள்.இந்தியப் பொருளாதாரம் கொரோனாவால் சரிவைச் சந்தித்தாலும் உலக அரங்கில் சீனா மீதான அதிருப்தி வழியாக உருவான புதிய தொழில் வாய்ப்புகள் இந்தியப் பொருளாதாரத்துக்கு வலுவைச் சேர்க்கும். எனவே, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது ‘V’ வடிவில் வேகமாகக் கீழே இறங்கி, அதே வேகத்தில் மேலே ஏறுவதாக இருக்கும் என்கிறார்கள்.

தேசிய பொது நிதி மற்றும் நிதிக்கொள்கை நிறுவனத்தில் ரிசர்வ் வங்கிக்கான நியமன உறுப்பினராக உள்ள சுப்யாச்சி கர் போன்ற நிதி ஆலோசகர்கள் கருத்தோ வேறாக உள்ளது. ‘இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால், என்னதான் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு நாம் தொடர்ச்சியாக 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியே கண்டாலும் இந்த கொரோனாவின் தாக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி சிறப்பான வளர்ச்சி காண குறைந்தது 13 ஆண்டுகளாவது ஆகும். இதுதான் நிதர்சனம்’ என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

13 ஆண்டுகள் என்பது நிஜமாகவே மிகப் பெரிய காலம்தான். இவ்வளவு நீண்ட கால அளவில் போராடித்தான் நாம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பது ஒரு நிதர்சனம் என்றால் அதைச் செய்யவும் ஆக்கபூர்வமான தொலைநோக்குப் பார்வையும், திறமையான பேரிடர் காலத் திட்டமிடலும் கொண்ட மத்திய அரசு ஒன்று நமக்கு அமைய வேண்டியதும் அவசியம்.

எப்படி இருந்தாலும் ஓஇசிடியின் அறிக்கையில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறது என்கிற செய்திதான் நமக்கு இருக்கும் மிகப் பெரிய ஆறுதல். ஆசிய அளவில் சீனா, இந்தியாவின் பொருளாதாரங்கள் நன்றாகவே முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்கிறது இந்த அறிக்கை. உற்பத்தி மற்றும் தொழில்துறையில் கொரோனா வுக்குப் பிறகு இந்தியா, சீனாவோடு போட்டியிடும் நாடு என்று துருக்கியைச் சொல்கிறார்கள். புதிய வாய்ப்புகள் வழியாக இந்த மூன்றும்தான் வேகமாக நகரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறதாம்.

இளங்கோ கிருஷ்ணன்