கூத்துக் கலைஞர்களின் வாழ்வியல்!



மனதைக் குளிர்விக்கும் ஒரு மராத்தியப் படம், ‘பிகாஸோ’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. தசாவதார் (கூத்து) கலைஞனின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது இப்படத்தின் கதை. ஓவியர், சிற்பி என்று பன்முகத் திறமை கொண்ட கலைஞன், பாண்டுரங். கோயில்களில் ராஜா வேடம் தரித்து கூத்து நிகழ்த்துவதிலும் கைதேர்ந்தவன்.
அவனுக்கு உடல்நிலை சரியில்லாத மனைவியும், கந்தர்வா என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கின்றனர். மதுப்பழக்கமும் குடும்ப வறுமையும் பாண்டுரங்கின் கலைக்குத் தடையாக இருக்கின்றன. இருந்தாலும் ஒரு கோயிலில் நடக்கும் கூத்தில் நடிப்பதற்கு தன்னை தயார் செய்கிறான்.

இந்நிலையில் ஓவியம் வரைவதில் கில்லாடியான கந்தர்வா, மகாராஷ்டிரா மாநில அளவில் நடந்த ஓவியப்போட்டியில் முதல் பரிசையும் தங்கப் பதக்கத்தையும் தட்டுகிறான். அடுத்து அவன் தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால், ஸ்பெயினில் உள்ள பிகாஸோ பிறந்த இடத்துக்குச் சென்று ஒரு வருடம் பயிற்சி பெற ஸ்காலர்ஷிப் கிடைக்கும். ஆனால், தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள 1,500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த ஒரு நாள் மட்டுமே உள்ளது.

உடல் நிலை சரியில்லாத அம்மாவிடம் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருக்கிறது. அப்பாவோ கூத்து நிகழ்த்த வேறு ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார். அப்பாவைத் தேடிச் செல்கிறான். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று நொந்துபோகிறார் அப்பா. அத்துடன் ஓவியம் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று மகனுக்கு அறிவுரை வேறு சொல்கிறார்.

உடைந்துபோகிறான் கந்தர்வா. ஆனால், அவனுக்கு உண்டான பணம் கிடைக்கிறது. அந்தப் பணம் எப்படி கிடைக்கிறது என்பதுதான் நெகிழ்ச்சியான திரைக்கதை. கூத்துக்கலையின் ஆரம்ப நிலையாக ‘தசாவதார்’ கலை கருதப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் உள்ள தெற்கு கொங்கண் பகுதியில் தசாவதார் கலை தோன்றியிருக்கிறது. இந்தக் கலை தோன்றிய நாட்களில் தெற்கு கொங்கணில் உள்ள லட்சுமி - நாராயணா கோயிலில் தசாவதார் கலைஞர்கள் ஒன்றுகூடி, கூத்து நிகழ்த்தி மக்களை மகிழ்வித்திருக்கின்றனர்.

கடந்த 800 வருடங்களாக யாருடைய உதவியுமின்றி இந்தக் கலை உயிர்ப்பித்து இருக்கிறது. இன்று 3 லட்சத்து 50 ஆயிரம் கலைஞர்களின் வாழ்வாதாரமாக தசாவதார் இருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து இயங்கி வரும் தசாவதார் கலைஞர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தில் வரும் கூத்துக் காட்சிகள் லட்சுமி - நாராயணா கோயிலில் படமாக்கப்பட்டது சிறப்பு. கதையின் பெரும்பகுதியை கூத்தும், தசாவதார் கலைஞர்களின் வாழ்வுமே ஆக்கிரமித்திருப்பதால் இந்தப் படம் தசாவதார் கலைக்கு ஓர் ஆவணமாகவும் இருக்கிறது. அப்பாவாக பிரசாத் ஓக்கின் நடிப்பும் மகனாக சமாய் தம்பேவும் கச்சிதம். படத்தின் இயக்குநர் அபிஜீத் மோகன் வராங்கிற்கு இது முதல் படம்.