குருவிகளைப் பாதுகாக்கும் குட்டி பாய்ஸ்!



கீச்… கீச்… கீச்… என இசைக்கும் சிட்டுக்குருவிகளின் சின்ன இறக்கைகளும், குட்டி உடலும் இயற்கையின் படைப்பில் மிக ஆச்சர்யமான ஒன்று.ஆனால், பெருகி வரும் நகரமயமாக்கலால் இந்தச் சின்ன ஜீவன்கள் மெல்ல அழிந்து வரும் நிலைக்கு எப்போதோ தள்ளப்பட்டுவிட்டன.
இயற்கை ஆர்வலர்கள் இதுகுறித்து பலவிதங்களில் விழிப்புணர்வு கொடுத்து வந்தாலும் பயனில்லை. இதையறிந்து புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பள்ளிச் சிறுவர்கள் குழு சிட்டுக்குருவிகளை பாதுகாக்க களத்தில் இறங்கி குழுவாக செயல்பட்டு வருகின்றனர்!

‘‘கோடைகாலம் வந்திடுச்சு. குறைந்தபட்சம் உங்க வீட்டு மாடிகள், திட்டுகள்ல எல்லாம் கொஞ்சம் தானியமும், தண்ணீரும் வைங்க. சிட்டுக்குருவி மட்டுமில்லை. ஏதோ சில பறவைகளும் வந்து குடிச்சிட்டு, சாப்பிட்டுட்டு போகும்…’’ ஆரம்பமே பக்குவப்பட்ட மனநிலையில் பேசத்துவங்கியது இந்த சிறுவர் குழு.

‘‘எங்களுக்கு இந்த சிட்டுக்குருவிகள் பத்தி சொல்லிக் கொடுத்தது, அதை எப்படி பராமரிக்கணும்னு பயிற்சி கொடுத்தது எல்லாமே ராமன் அண்ணாதான். பள்ளிக்குப் போன நேரம் போக மீதி நேரம் இங்கதான் இருப்போம். நாங்க மொத்தம் 10 பேர். ராமன் அண்ணாவும், கிஷோர் அண்ணாவும் குருவிக்கான செயற்கை மரக்கூடுகள், தானிய டப்பாக்கள் எல்லாம் ரெடி செய்திடுவாங்க. எந்த கூட்டை எங்கே எப்படி அமைக்கணும்னு எங்களுக்கு சொல்லிடுவாங்க.

நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பகுதியா போயி கூட்டைப் பொருத்திட்டு - ஆட்டோமெட்டிக்கா தானியம் கொட்டுற மாதிரி அமைப்பு இருக்கும் - அதிலே பாட்டிலையும் கவிழ்த்து வெச்சிட்டு வந்திடு வோம்.

ராமன் அண்ணா கூட போயி ஒவ்வொரு ஸ்கூல், கல்லூரிகள்லயும் நாங்க இந்த சிட்டுக்குருவிகள் பத்தி நிறைய பேசிட்டு இருக்கோம். நிறைய மாணவர்களை இந்தக் கூடுகளை வாங்கச் செய்து, அவங்க அவங்க வீட்டளவில் குருவிகள் வந்து போக நாங்க சொல்லிக்கொடுத்திட்டு இருக்கோம்...’’ ஏதோ சாதித்த திருப்தியுடன் கபடமின்றி சிறுவர்கள் குழு பேசிக்கொண்டிருக்க அவர்களை அணைத்தபடி தொடர்ந்தார் ராமன்.

‘‘மொபைல் டவர்கள் ஒரு பங்குதான்… மத்த எல்லா பங்கும் நம்ம வாழும் வாழ்க்கை முறையும் வசிப்பிடங்களும்தான் இந்தக் குருவிகள் வாழ முடியாத நிலைக்குக் காரணம்.  நானும் கிஷோரும் இந்த குருவிகள் பாதுகாப்பு முயற்சியை நான்கு வருடங்களுக்கு முன்பு உலக சிட்டுக்குருவி தினத்தில் ஆரம்பிச்சோம். ‘இண்டிஜீனஸ் பயோடைவர்சிடி ஃபௌண்டேஷன்’-இதுதான் பேரு. அதாவது ‘உள்நாட்டு பல்லுயிர் அமைப்பு’. பாண்டிச்சேரியைச் சேர்ந்த அமைப்பு இது.

ரொம்பச் சின்ன வயதிலேயே நானும், கிஷோரும் இந்த அமைப்பை ஆரம்பிச்சோம். இயற்கை உயிர்கள் சார்ந்த சேவைகள் எல்லாம் எங்க அமைப்பு செய்யும். ஆமைகள் பாதுகாப்பு, பறவைகள் பாதுகாப்பு, பாம்புக் கடிக்கு சரியான விழிப்புணர்வு... இப்படி நிறைய விஷயங்கள். அதிலே ஒண்ணுதான் இந்த சிட்டுக்குருவி பாதுகாப்பு.

சிட்டுக்குருவிகள் அழிய உண்மையாகவே ஓட்டு வீடுகள், பண்ணை வீடுகள், முற்றம் வைச்ச வீடுகள் எல்லாம் முழுமையா குறைஞ்சதுதான் காரணம். அடுத்த சிக்கல் இனப்பெருக்கம். வயல் புழுக்கள்தான் பறவைக் குஞ்சுகளுக்கு பிரதான உணவு. அதிலும் சிட்டுக்குருவிகள் வேற உணவை அதனுடைய குஞ்சுகளுக்குக் கொடுக்கவே முடியாது.
 
இப்ப நாம வயல்கள்ல பூச்சிக்கொல்லி மருந்தை அடிச்சு வெச்சிடுறோம். இதிலிருந்து தப்பித் தவறி உயிரோடு இருக்கிற புழுக்களை குருவிகள் கொடுக்கும் போது குஞ்சுகள் இறந்துடுது. இதையெல்லாம் ஆராய்ச்சி செய்துதான் நாங்க இந்த பாதுகாப்புப் பயணத்திலே இறங்கினோம். செயற்கைக் கூடுகள் - குறிப்பா காக்கா உள்ளிட்ட மத்த பறவைகள் அந்த கூட்டிற்குள்ள நுழையக் கூடாது. பூனை உள்ளிட்ட விலங்குகள் கிட்ட சிக்கக் கூடாது. இப்படி நிறைய சவால்கள்...’’ என்னும் ராமன் இதில் சிறார்கள் எப்படி வந்தனர் என விளக்கினார்.

‘‘ரெண்டு வருடங்களுக்கு முன்னாடி என் சகோதரர் பையன் நாங்க கூடுகள் செய்திட்டு இருக்கும்போது வந்து அவன் ஃபிரண்ட்ஸ் கூட பார்த்தான். அப்படியே இன்னும் ரெண்டு பசங்க, அவங்க ஃபிரண்ட்ஸ்னு ஆகி இன்னைக்கு பத்து குட்டிப் பசங்க ஓடி ஓடி கூடு வெச்சிட்டு வராங்க. இப்ப அவங்களே மரக்கூடு தயார் செய்து தானியம் வைக்கிற அளவுக்கு முன்னேறிட்டாங்க. எங்க கிட்ட ரூ.250ல இருந்து தேவை, ஆர்வம் பொருத்து கூடுகள் இருக்கு.

தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமில்லாம ஆந்திரா, கேரளானு மத்த மாநிலங்களுக்கும் கூடுகள் சப்ளை செய்றோம். கூடு செட் செய்து கூடவே எப்படி பராமரிக்கணும்னு சொல்லியும் கொடுத்திடுவோம். இப்ப இந்தப் பசங்க கூட நிறைய ஸ்கூல்கள், சேவை மையங்களுக்குப் போயி விழிப்புணர்வுகள் கொடுத்திட்டு இருக்கோம். பரவாயில்லை... இப்ப கூடு செய்த ஒரு வாரத்துல மக்கள் வாங்கிடறாங்க. இயற்கை ஆர்வம் அதிகரிச்சிருக்கு. இதையே நாங்க நல்ல மாற்றமா பார்க்கறோம்...’’ நெகிழ்கிறார் ராமன். ஆமோதிக்கிறார்கள் கிஷோரும் குட்டி பாய்ஸ் குருவிக் குழுவும்.   

ஷாலினி நியூட்டன்