Family Tree-புத்தகப் பதிப்பில் ஜாம்பவான்!ஒரு நிறுவனம் வளரும்போது அதனுடன் சேர்ந்து அதில் பணியாற்றும் ஊழியர்கள், நிறுவனம் இயங்கும் ஊர் மற்றும் நாடும் சேர்ந்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி. ஆம்; ஜெர்மனியின் தொழில் வளர்ச்சியில், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை முறையில், கலாசாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அந்நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்சென்ற காரணிகளில் ‘பெர்டல்ஸ்மான்’ நிறுவனமும் ஒன்று.

ஊடகம், சேவை மற்றும் கல்வித்துறையில் இயங்கிவரும் குடும்ப நிறுவனம் இது. டிஜிட்டல் யுகத்தில் புத்தகப் பதிப்பக நிறுவனம் நடத்துவது சவாலான விஷயம். இந்தச் சவாலை வெற்றி கொண்டு 185 வருடங்களாக பதிப்புத்துறையில் இருப்பது இதன் சாதனை.

*கார்ல் பெர்டல்ஸ்மான்

ஜெர்மனியில் உள்ள கூடர்ஸ்லோ என்ற ஊரில் 1791ம் வருடம் பிறந்தார் கார்ல் பெர்டல்ஸ்மான். கிறிஸ்துவ பக்திமானாக வளர்ந்த கார்ல், பிரின்டிங் மற்றும் புத்தக பைண்டிங் செய்பவராக வாழ்க்கையைத் தொடங்கினார். பிசினஸைவிட அவருக்கு கிறிஸ்துவத்தின் மீதுதான் ஈடுபாடு அதிகம். அதனால் கூடர்ஸ்லோவில் 1835ம் வருடம், ‘சி.பெர்டல்ஸ்மான் வெர்லாக்’ என்ற பெயரில் மதரீதியான புத்தகங்களை அச்சிட்டு, வெளியிட ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்தார்.

இந்தப் பதிப்பகத்தில் திருச்சபை பக்தி நூல்கள், பள்ளிப் பாடப்புத்தகங்கள், கிறிஸ்துவப் பாடல்கள், கிறிஸ்துவ இறையியல் சார்ந்த விஷயங்கள் மட்டுமே அச்சாகின. கார்ல் வெளியிட்ட முதல் புத்தகத்தின் பெயர், ‘Theomele’. கிறிஸ்துவப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு இது. தவிர, கார்லின் பதிப்பகத்திலிருந்து இரண்டு நாளிதழ்கள் வெளியாயின.

வெறுமனே தொழில் செய்தோம், லாபம் சம்பாதித்தோம், தொழிலை பெரிதாக விரிவாக்கினோம், அடுத்த தலைமுறைக்குச் சொத்து சேர்த்தோம் என்று இல்லாமல் கூடர்ஸ்லோவில் வாழ்ந்த ஏழை, எளியவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தார் கார்ல்.
இப்படி உதவுவது அவரது தொழில் கொள்கைகளில் ஒன்று. நிறுவனம் வளர, வளர கூடர்ஸ்லோவும் அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை முறையும் சேர்ந்து வளர்ந்தது. இன்று கூடர்ஸ்லோ முக்கிய தொழில் நகரமாக இருக்கக் காரணமே ‘பெர்டல்ஸ்மான்’தான்.

1850ல் கார்ல் மரணமடைய, அவருடைய மகன் ஹெயின்ரிச் பதிப்பகத்தை எடுத்து நடத்தினார். அப்பாவைப் போல ஹெயின்ரிச்சும் பெரிய பக்திமான். ஆனால், நல்ல பிசினஸ் மேன். மதம் சார்ந்த நூல்களை மட்டுமே பதிப்பித்து வந்த ‘பெர்டல்ஸ்மானை’ வரலாறு, இலக்கியம், தத்துவம் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்கும் ஒரு நிறுவனமாக விரிவாக்கினார் ஹெயின்ரிச். கிரிம் சகோதரர்களின் பிரபலமான தேவதைக் கதைகள் பதிப்பிக்கப்பட்டு விற்பனையில் அள்ளின.

ஹெயின்ரிச்சின் மகளைத் திருமணம் செய்ததன் மூலம் ‘பெர்டல்ஸ்மான்’ குடும்ப உறுப்பினரானார் ஜோகன்னஸ் மோன்.
ஹெயின்ரிச் இறந்தபிறகு  மருமகன் ஜோகன்னஸ்ஸின் கைக்கு குடும்ப பிசினஸ் வந்தது. கிறிஸ்துவ சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடுடையவராக இருந்தார் ஜோகன்னஸ். அதனால் அதிகமாக இறையியல் சம்பந்தமான நூல்களைப் பதிப்பிக்க முக்கியத்துவம் கொடுத்தார். ஹெயின்ரிச், கார்ல் காலத்தைவிட அதிகமான சமய நூல்கள் ஜோகன்னஸ்ஸின் நிர்வாகத்தின் கீழ் அச்சாகின.

நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், சுற்றியிருந்த மக்கள் என அனைவருடனும் நட்புடன் பழகினார். குறிப்பாக குழந்தைகள் என்றால் இவருக்குக் கொள்ளைப் பிரியம். குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர் வரவேண்டிய அவசியம் இல்லை; ஜோகன்னஸ் வந்தால் போதும் என்று மக்களால் புகழப்படுகிற அளவுக்கு குழந்தைகளுடன் நெருக்கமாக இருந்தார். இவர் காலத்தில் பிசினஸ் சீராகச் சென்றது. ஆனால், பெரிய அளவில் வளர்ச்சி ஏதும் இல்லை.

1921ம் வருடம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த ஹெயின்ரிச் மோன் நிர்வாகத்துக்கு வந்தார். 84 ஊழியர்களுடன் இயங்கிவந்த குடும்ப நிறுவனத்தை நவீனமாக்கினார். இறையியல் சார்ந்த புத்தகங்களின் பதிப்பு குறைக்கப்பட்டது. புனைவு இலக்கியங்கள் பக்கம் அவரது கவனம் திரும்பியது.
இரண்டு வருடங்களிலேயே பிசினஸ் ஏறுமுகத்தில் சென்றது. ‘பெர்டல்ஸ்மானி’ல் அச்சாகிய மில்லியன் கணக்கான புத்தகங்கள் சில நாட்களிலேயே விற்றுத்தீர்ந்தன.

இந்நிலையில் 1923ல் ஏற்பட்ட ஹைப்பர் பணவீக்கத்தால் சொல்ல முடியாத அளவுக்கு நஷ்டமடைந்தது நிறுவனம். அப்போது ஹெயின்ரிச் கையில் ஏந்திய புனைவு இலக்கியம் என்ற ஆயுதம்தான் நிறுவனம் தொடர்ந்து இயங்க அச்சாணியாக இருந்தது. ஹெயின்ரிச்சின் வருகைக்கு முன்பு புனைவு இலக்கியம் என்ற சொல்லே பெரிதாக ஜெர்மானிய மக்களைச் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெயின்ரிச் காலத்தில் விற்பனை இயக்குனராக இருந்த ஃப்ரிட்ஸ் விக்ஸ்ஃபோர்த், விற்பனையை அதிகரிக்க சில பரிசோதனைகளைச் செய்தார். அதில் முக்கியமானது விளம்பரம். பெரிய அளவில் சுவரொட்டி களைத் தயார் செய்து அவற்றை கடைகளின் ஜன்னல்களில் காட்சிப்படுத்தினார்.

புத்தகங்களின் முன்னட்டைகளை ஆங்காங்கே வைத்து அலங்காரப்படுத்தினார். அடுத்து நாவல்களை அழகான சிறிய அட்டை பாக்ஸுக்குள் வைத்து விற்பனை செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த பாக்ஸ் நாவல்களை பயணம் செய்வோர் அதிகமாக வாங்கினார்கள். அத்துடன் அதை வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும் சுலபமாக இருந்தது. அதன் கவர்ச்சி வாசகர்கள் அல்லாதவர்களையும் புத்தகம் நோக்கி இழுத்தது.

தவிர, ஹெயின்ரிச் நாவலாசிரியர்களை அழைத்து சிறிய வடிவிலான நாவல்கள் எழுது வதற்காக தீட்டிய திட்டம்தான் இன்றைய பாக்கெட் நாவல்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி. நாவல்கள் மட்டுமல்லாமல் கவிதைகள், வரலாற்றுப் புதினங்களிலும் அவர் கவனத்தைச் செலுத்த, விற்பனை எங்கேயோ போய்விட்டது. ஹைப்பர் பணவீக்கத்தால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து நிறுவனம் மீண்டது. அடுத்து போர் சம்பந்தமான நூல்களை அச்சிட, ஜெர்மன் இராணுவ வீரர்களின் மத்தியில் பிரபலமடைந்தது ‘பெர்டல்ஸ்மான்’.

அதனால் இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப நாட்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்தக விற்பனை அதிகரித்தது. குறிப்பாக போர்க்களத்தில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கென்று பிரத்யேகமாக புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டன. இதற்கு ‘Special Armed Forces Editions’ என்று பெயர்.

அஞ்சலில் அனுப்புவதற்கு ஏற்றவாறு இந்தப் புத்தகங்களின் எடையும் அளவும் குறைவு. கைக்கு அடக்கமாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் போரின் கொடுமைகளிலிருந்து வேறு உலகிற்கு அழைத்துச்செல்லும் கதைப்புத்தகங்கள் பொதுமக்களிடையே சக்கைப்போடு போட்டன.

இரண்டாம் உலகப் போர்க் காலங்களில் மட்டும் ஜெர்மன் இராணுவத்துக்கு 1.9 கோடிப் புத்தகங்களை சப்ளை செய்து, ‘அதிக அளவு இராணுவத்துக்குபுத்தகங்களை சப்ளை செய்த நிறுவனம்’ என்ற பெருமையைப் பெற்றது ‘பெர்டல்ஸ்மான்’. இந்தப் புத்தகங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான பிரின்டிங் பிரஸ்ஸிலும் ஹாலந்து, கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பிரின்டிங் பிரஸ்களிலும் அச்சாகின.

1945ம் வருடம் நிறுவனத்துக்கு செம அடி. குண்டு வீச்சால் நிறுவனம் இயங்கி வந்த கூடர்ஸ்லோ நகரமே தரைமட்டமானது; நிறுவனத்துக்குச் சொந்தமான பிரின்டிங் பிரஸ்கள் சுவடில்லாமல் போயின. போர் முடிந்த பிறகே நிறுவனம் திறக்கப்பட்டது. ஹெயின்ரிச் வலுக்கட்டாயமாக நிறுவனப் பொறுப்புகளைத் தனது மகன் ரெய்ன்ஹார்டு மோனிடம் ஒப்படைத்தார். அதற்குப்பிறகு ‘பெர்டல்ஸ்மானி’ன் தலையெழுத்தே மாறியது.

*ரெய்ன்ஹார்டு மோன்

ஜெர்மன் இராணுவத்தில் இளம் அதிகாரியாக இருந்தவர் ரெய்ன்ஹார்டு மோன். இவரது அண்ணன் போரில் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் போரில் காணாமல் போய்விட்டார். தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. நிறுவனமும் குண்டு வெடிப்பில் சிதைந்துவிட்டது. இயந்திரங்கள் வேலைக்கு ஆகாமல் போயின. 400 ஊழியர்களில் 150 பேர் மட்டுமே வேலைக்கு இருந்தனர்.

இதற்கிடையில் சட்ட விரோதமாக பேப்பர் வாங்கியதால் நிறுவனத்தின் இயக்கமும் முடக்கப்பட்டது. உணவுக்கே மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, எப்படி புத்தகம் வாங்குவார்கள் என்ற நிலை வேறு. வருமானம் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மூடும் நிலைக்குச் சென்றுகொண்டிருந்தது ‘பெர்டல்ஸ்மான்’. இவ்வளவு கடுமையான சூழலில்தான் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ரெய்ன்ஹார்டு.

இவருக்கு நடைப்பயணம் ரொம்பவே பிடிக்கும். வார இறுதியில் 30 கிலோ மீட்டருக்கும் குறைவில்லாமல் நடப்பார். அப்படி நடக்கும்போது தன்நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு எது தேவைப்படுகிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பார். இதையெல்லாம் அவர் செய்யும்போது 30 வயதுதான் இருக்கும். போரின்போது அதிகாரியாக இருந்த அனுபவம் நிறுவனத்தை தலைமையேற்று வழிநடத்த ரெய்ன்ஹார்டுக்கு உதவியாக இருந்தது.

இவரது தலைமையில்தான் மாபெரும் மாஸ் மீடியா கார்ப்பரேட்டாக வளர்ந்தது, ‘பெர்டல்ஸ்மான்’.ரெய்ன்ஹார்டின் ஆரம்ப நாட்களில் பிசினஸ் சரியாகப் போகவில்லை. விற்பனையைப் பெருக்குவதற்குப் பல வழிகளிலும் முயற்சி செய்தார். அதில் ஒன்று, ‘புக் கிளப்’. இது வாசகப் பரப்பை விரிவடையச் செய்ததோடு மட்டு மல்லாமல் புத்தக விற்பனையையும் எகிறச் செய்தது. அத்துடன் வேலை நடக்கும் இடத்தை நவீனமாக மாற்றினார். ஊழியர்களை பிசினஸ் பார்ட்னர்களைப் போல அணுகினார். புதுப்புது தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு நிறுவனத்தை தகவமைத்துக் கொண்டே இருந்தார்.

இதன் நீட்சியாக இசைத்துறையில் தனது கவனத்தைச் செலுத்தினார். 1968ல் ஜாஸ், பாப், கிளாசிக்கல் என 5 கோடி ரெக்கார்டுகளை தயாரிக்கும் ஒரு நிறுவனமாக உயர்ந்தது ‘பெர்டல்ஸ்மான்’. தனது துறைக்கு நெருக்கமான மாஸ் மீடியா நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ‘பெர்டல்ஸ்மானு’டன் இணைத்தார்.

மீடியா துறையில் முன்னணி நிறுவனமான ‘ஆர்டிஎல் குரூப்’, புத்தகத் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமான ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ்’, நாளிதழ், பத்திரிகைத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் ‘குரூனர் + ஜார்’, அமெரிக்காவின் புத்தகப் பதிப்பக நிறுவனமான, ‘சைமன் அண்ட் சூஸ்டர்’, பிரபல இசை நிறுவனமான ‘பிஎம்ஜி’, சேவைத் துறையில் அசைக்க முடியாத ‘அர்வாட்டோ’ போன்ற நிறுவனங்கள் எல்லாம் ‘பெர்டல்ஸ்மானி’ன் வசமாகின. ‘இருபதாம் நூற்றாண்டின் தொழிலதிபர்’ என்று இவரை ஜெர்மனி கொண்டாடியது. 2009ல் மரணமடைந்தார்.  

*இன்று

ஐம்பதுக்கும் மேலான நாடுகளில் இயங்கிவரும் இந்நிறுவனத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் பிளாட்பார்மிலும் தனி முத்திரை பதித்து வருகிறது. ரெய்ன்ஹார்டின் மனைவியான எலிசபெத் மோனும், மகனான கிறிஸ்டோப் மோனும் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர். 2019ம் ஆண்டின் வருமானம் சுமார் 1,54,000 கோடி ரூபாய்!