3000 ஆண்களுக்கு முன்பே விவசாயம் செய்த...இரும்பை பயன்படுத்திய மக்கள் தென்தமிழகத்தில் வாழ்ந்தார்கள்!



தேர்தல் கலாட்டாவுக்கு இடையில் வெளிவந்திருக்கிறது ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை

அனல் பறக்கும் தேர்தல் களத்திற்கு நடுவே ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட அகழாய்வு அறிக்கை சத்தமில்லாமல் வெளியாகி இருக்கிறது. இதில் சிறப்புவாய்ந்த செய்தி, ‘மூத்த குடி’ என்பதை பறைசாற்றும் வகையில் சான்றுகள் கிடைத்திருப்பதுதான்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கிறது ஆதிச்சநல்லூர். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் 24 கிமீ தொலைவில் வரும் இந்த இடத்தை உலக நாகரிகத்தின் தொட்டில் என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.

காரணம், இங்கு கிடைத்த பொருட்கள் எல்லாம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அதாவது, கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே ஆதிச்சநல்லூரில் தமிழினம் தழைத்தோங்கி வாழ்ந்து வந்திருக்கிறது. இங்கு முதன்முதலாக 1876ம் ஆண்டு அகழாய்வு நடந்தது. இதை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் செய்தார். ஆனால், அதுசம்பந்தமான தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

பிறகு, கால்டுவெல் காலத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1902ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ அகழாய்வு மேற்கொண்டார். இதன்வழியாக ஆதிச்சநல்லூர் பற்றிய பல விஷயங்கள் உலகளவில் தெரியவந்தன. பின்னர் 2004ம் ஆண்டு மீண்டும் இந்திய தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டது. ஆனால், அதன் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில்தான் கடந்த 2017ம் ஆண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை வேண்டி வழக்கு தாக்கல் செய்தார். அப்படியாக இப்போது ஆதிச்சநல்லூரின் அகழாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. ‘‘ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஏரியா மட்டும் 114 ஏக்கர். முதன்முதலா இங்க ஆய்வு செய்த ஜெர்மன் அறிஞர் ஜாகோர் தன்னுடைய அறிக்கையை ஏன் வெளியிடலனு தெரியல.

பிறகு, 1901ம் ஆண்டு திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே ரயில்பாதை போடுறாங்க. அது ஆதிச்சநல்லூர் வழியாகத்தான் போகுது. அப்ப தோண்டும்போது நிறைய பொருட்கள் கிடைக்குது. உடனே, அக்கம்பக்கத்துல உள்ளவங்க நம்முன்னோர்கள் எதையோ விட்டுட்டு போயிருக்காங்கனு நினைச்சு ேதாண்ட முடிவெடுத்திருக்காங்க. உடனே, இந்திய தொல்லியல் துறை அலெக்சாண்டர் ரீ என்பவரைக் கொண்டு ஆய்வு செய்றாங்க.
வெண்கலம், இரும்பு, முதுமக்கள் தாழி, நெற்றிப் பட்டயம், நெற்றியில் ஓட்டை காணப்பட்ட மண்டை ஓடுகள்னு நூற்றுக்கணக்கான பொருட்கள் கிடைக்குது.

அதை அவர் இருபத்தியொரு மாட்டு வண்டிகள்ல எடுத்திட்டு போய் சென்னை அருங்காட்சியகத்துல வைக்கிறார். இவரை ஆதிச்சநல்லூரின் தந்தைனு சொல்லணும். ஏன்னா, இவர்தான் முதன்முதலா ஆதிச்சநல்லூரில் கிடைச்ச பொருட்களை பட்டியலிட்டு வெளியிட்டவர். இதன்பிறகு பெரிதாக எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படல.

இதற்கிடையே 1920ல் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி வங்கதேசத்து தொல்லியல் அறிஞர் ரக்கல்தாஸ் பானர்ஜி ஆய்வு ெசய்கிறார். அவர், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய நாகரிகம் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள ஆதிச்சநல்லூர் நாகரிகம்னு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் எழுதுறார். மறுபடியும் உலகத்தின் கவனம் ஆதிச்சநல்லூர் பக்கம் திரும்புது. இதை திராவிட நாகரிகம்னு அவர் சொல்றார்.

அடுத்து, எழுத்தாளர் சாத்தான்குளம் ராகவன் ‘ஆதிச்சநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்’னு ஒரு புத்தகம் போடுறார். அதுல, இங்குள்ள எலும்புக்கூடு களுக்கும் மெசபடோமியா எலும்புக்கூடுகளுக்கும் ஒத்துப்போகுதுனு சொல்றார். உலகிற்கு நாகரிகமே தாமிரபரணி நதிக்கரையில் இருந்துதான் சென்றதுனு குறிப்பிடுறார். இப்படியாக ஆதிச்சநல்லூர் பற்றிய விஷயங்கள் வெளியே வந்தன’’ என்கிற முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கிற்குள் வந்தார்.

‘‘2004ல் இந்திய தொல்லியல் துறை அதிகாரி தியாக சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தாங்க. அப்ப நான் பத்திரிகை நிருபராக இருந்தேன். அடிக்கடி ஆதிச்சநல்லூர் போய் செய்தி சேகரிப்பேன். ஆனா, அவங்க ஒழுங்கான தகவல்கள் எதையும் சொல்லமாட்டாங்க.

கிடைச்ச பொருட்களை எல்லாம் சென்னை கோட்டையில் உள்ள மத்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வச்சாங்க. 2010ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தினார். அதுல ஆதிச்சநல்லூர் நாகரிகம் கிமு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதுனு பேசினாங்க. அதாவது, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது! இதன்பிறகு அமைச்சர்கள் எல்லாம் இந்த இடத்தை வந்து பார்வையிட்டாங்க. ஆனாலும், 2004ல் செய்த அகழாய்வின் ஆய்வறிக்கை மட்டும் வரவேயில்ல.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடினாங்க. அப்ப முதுமக்கள் தாழி தகவல் மையம்னு ஒண்ணை ஆதிச்சநல்லூர் பக்கத்திலுள்ள புளியங்குளம் கிராமப் பகுதியில் ஆரம்பிச்சாங்க. அங்க ஆதிச்சநல்லூரின் புகைப்படங்களை வைக்க முடிவெடுக்கப்பட்டது. சில காரணங்களால அந்த ஐடியா செயல்படுத்தப்படலை. இதுக்கிடையில நான் ஆதிச்சநல்லூர் சம்பந்தமா ஒரு புத்தகம் கொண்டு வந்தேன்.

2017ல் இந்தப் பகுதியை பார்வையிட மதுரை ஐகோர்ட் வழக்கறிஞர் அழகுமணி வந்தார். என்னுடன் கலந்து பேசியவர், ‘வழக்கு போட்டால்தான் அறிக்கை வெளியே வரும்’னு சொன்னார். அந்த ஆண்டே வழக்குத் தொடர்ந்தோம்.  வழக்கு எண் 13096/2017.
இதே பெயர்ல இன்னொரு புத்தகமும் கொண்டு வந்தேன். வழக்கு விசாரணைக்கு வந்ததும், முதலாவதா 2004ல் செய்த அகழாய்வு அறிக்கை வேணும்னு கேட்டோம். அடுத்து, ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்யணும்னும், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் அமைக்கணும்னும் சொன்னோம்.

அப்ப கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர்னு ரெண்டு நீதியரசர்கள், இங்குள்ள ஒரு முதுமக்கள் தாழியை ஆய்வுக்காக அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்துக்கு அனுப்பி வைச்சாங்க. கார்பன் பரிசோதனை மூலம் ஆய்வு மேற்கொண்டதில் அதன் வயது 2900னு தெரிய வந்துச்சு. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுனு நிரூபணமாச்சு. ஆதிச்சநல்லூரை உலகம் முழுவதும் உற்று நோக்கியது. உடனே மாநில அரசு, நாங்களே ஆய்வு களை மேற்கொள்றோம்னு மத்திய அரசுகிட்ட அனுமதி வாங்கினாங்க.  மாநில அரசின் அகழாய்வு தொடங்குச்சு.

இந்நேரம், ஆரம்பத்துல அகழாய்வு செய்த அதிகாரி தியாக சத்தியமூர்த்தி ஒரு முன்னோடி அறிக்கையை கோர்ட்ல சமர்ப்பிச்சார். அப்ப முறைப்படி அறிக்கை வேணும்னு கேட்டோம். இதுக்கிடையில் 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும்னு அறிவிச்சார். கொரோனா வந்ததால கொஞ்சம் தடைபட்டுடுச்சு.

பிறகு, நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருச்சி சர்க்கிளில் ஒரு தொல்லியல் துறை அலுவலகத்தைத் திறந்தாங்க. அப்பவும் நமக்கு அறிக்கை வரல. பிறகு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘மத்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையைத் தந்திருக்கு. நாங்க இதன் சுருக்க அறிக்கையை வெளியிடுவோம்.

முழு அறிக்கையை கோர்ட்ல கொடுப்போம். அப்புறம், இதன் தமிழ் அறிக்கையை மாநில அரசு வெளியிடும். இது மார்ச் மாதத்திற்குள் வந்திடும்’னு சொன்னார். இந்நேரம், தேர்தல் வந்ததால் இப்ப அறிக்கையை பிடிஎஃப் ஃபைலாக வெளியிட்டிருக்காங்க...’’ என விவரித்தவர் அதிலுள்ள சிறப்புகளைக் குறிப்பிட்டார்.  

‘‘இங்க வாழ்ந்த மக்கள் நடுத்தர உயரமும், வலுவான உடலமைப்பும் கொண்டவங்களா இருந்திருக்காங்க. சில எலும்புகள்ல கால்சியம் குறைபாடு காணப்பட்டதா சொல்றாங்க. அடுத்து, இங்குள்ள கடற்கரைப் பகுதில முத்துக்குளிக்கிறவங்க நிறைய பேர் குடியிருந்திருக்காங்க.

அதனால, அவங்களுக்கு புதுவிதமான நோய் வந்திருக்கு. இதை சைனஸ் நோய்னுதான் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்காங்க. அதனால, நெற்றியில் ஓட்டை விழுந்திருக்கு. முன்னாடி இந்த நெற்றி ஓட்டையைப் பார்த்து, இங்க நெற்றிக்கண் மனிதன் வாழ்ந்தான்னு செய்தி பரப்பினாங்க. இப்ப அதுக்கு விடை கிடைச்சிருக்கு.
அப்புறம் ஆணும், பெண்ணும் ஒரு தாழியில் புதைக்கப்பட்டிருக்காங்க.

இது புறநானூறுல வருது. என் தலைவன் இறந்திட்டால் அந்த இடத்துல என்னையும் சேர்த்து புதைக்கணும்னு சொல்றதா பாடல் இருக்கு. அதேமாதிரி தாயும், குழந்தையும் ஒரு தாழியில் புதைச்சிருக்காங்க. அப்புறம், இங்க இரும்புத் தொழிற்சாலை இருந்திருக்கு. பன்னாட்டு வர்த்தகமும் நடந்திருக்கு. இதெல்லாம் அறிக்கையில் இருக்கு. தவிர, 600 சதுர மீட்டருக்குள் 178 அடக்கம் செய்யப்பட்ட தாழிகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

இந்த முதுமக்கள் தாழிகள் கருப்பு சிவப்பு வண்ணத்தில் உள்ளதாகவும், இவை ஈமச்சடங்கிற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்காங்க. சில செம்பு பொருட்களும், நிறைய இரும்பு பொருட்களும் கிடைச்சிருப்பதாகச் சொல்லி யிருக்காங்க. இதுல இரும்பு பொருட்கள்ல விவசாய உபகரணங்களும், ஆயுதங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்காங்க.

கடைசியாக ஆதிச்சநல்லூரில் வசித்த ஆதிக் குடிகள் விவசாயத்துடன், பானை செய்தும், முத்துக்குளித்தும், பாசி மணிகள் தொழிலில் ஈடுபட்டும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததாக ஆய்வில் தெரிய வந்திருக்குனு சொல்றாங்க. இன்னும் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தணும். இது தொல்லியல் துறையின் அறிக்கை. இதுதவிர பலரும் இங்க ஆய்வுகள் செய்திருக்காங்க. மத்திய அரசு அறிக்கை வெளியிடாததால் அவங்களும் அறிக்கைகள் வெளியிடாமல் இருந்தாங்க. இப்ப தடை நீங்கிடுச்சு. அதனால, இதுசம்பந்தமாக யாரெல்லாம் ஆய்வு செய்திருக்காங்களோ அவங்க எல்லாம் இனி ஆய்வறிக்கையை வெளியிடு வாங்கனு எதிர்பார்க்கறோம்.

நம்முடைய வழக்கால் இந்தாண்டு ஆதிச்சநல்லூரிலும், அலெக்சாண்டர் ரீ அடையாளம் காட்டிய தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 37 இடங்களிலும், சிவகளை, கொற்கை போன்ற இடங்களிலும் ஆய்வு செய்ய அரசு நிதி ஒதுக்கியிருக்கு. வேலையும் ஆரம்பிச்சிட்டாங்க.ஆதிச்சநல்லூரில் புதைத்த இடமே இப்படி நாகரிகமாக இருந்தால் வாழ்ந்த இடம் எப்படி நாகரிகமானதாக இருந்திருக்கும்? அதைத் தேடும் பணி இப்ப நடக்குது. அந்த வாழ்விடங்களை கண்டுபிடிப்பாங்கனு நம்பிக்கையோடு இருக்கோம்.

ஆனா, இதுல ஒரு சிக்கல் இருக்கு. ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், அந்த 114 ஏக்கருக்குள்ள ஆய்வு செய்ய அனுமதி வழங்கல. அதுக்கு வெளியே பண்ணத் தான் அனுமதி தந்திருக்காங்க. இந்தத் தடையை நீக்கணும்னு சொல்றோம். அடுத்து, இங்க அருங்காட்சியகம் பெரியளவில் வரும்னு சொல்றாங்க. அதற்காக பத்து ஏக்கர் இடம் பார்த்திட்டு இருக்காங்க. முதற்கட்டமாக மூன்று மொழியில் தகவல் பலகை வச்சிருக்காங்க.

அப்படி அருங்காட்சியகம் வரும்போது இங்கே ஆய்வகமும் அமையும். ஆய்வு மாணவர்கள் கூடும் இடமாகவும் இருக்கும். ஆனா, இதுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவி செய்யல. அதைச் செய்யணும். அப்பதான் உலக நாகரிககத்தின் ெதாட்டில்னு ஆதிச்சநல்லூர் உலகளவில் வியந்து போற்றப்படும்…’’ என்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு.   

பேராச்சி கண்ணன்