மாமனார் பத்திரிகையாளர்... கணவர் ஒளிப்பதிவாளர்... நான் உங்கள் சுந்தரி!



கேப்ரில்லா feeling happy

கறுப்பழகியாக நயன்தாரா நடித்த ‘ஐரா’வில் ஃப்ளாஷ்பேக் நயனாக புன்னகைத்த கேப்ரில்லா செலஸ், இப்போது சன் டிவியில் ‘சுந்தரி’யாக அசத்துகிறார்.ஒரு பாவப்பட்ட ஜீவனாக, பரிதாபப்பட வைக்கும் கறுப்பழகியாக, கண்களில் ஈரம் சுரக்க வைக்கும் கேரக்டரை தனது இயல்பான, வெள்ளந்தியான நடிப்பால் இல்லத்தரசிகளின் இதயங்களில் இடம்பிடித்து வருகிறார் கேப்ரில்லா.

‘‘சன் டிவியால பெரிய ரீச் கிடைச்சிருக்கு. இப்ப என் ஒரிஜினல் பெயரே மறந்திடுச்சு. எங்க போனாலும் ‘சுந்தரி’னு கூப்பிடறாங்க. சந்தோஷமா இருக்கு. சீரியல்ல வர்றதுக்கு முன்னாடி, ‘ஐரா’னு ஒரு படம் பண்ணியிருந்தேன். டிவில வரும்போது நமக்கு கேரக்டர் எப்படி அமையுமோ... நம்மளால அதுல ஸ்கோர் பண்ண முடியுமா... பெயர் வாங்க முடியுமானு பயம் இருந்துச்சு.

ஆனா, ‘சுந்தரி’யாக ஒரு சூப்பர் கேரக்டர் அமைஞ்சது. ஒரு படத்துக்காக எவ்ளோ எஃபர்ட் போடுவேனோ அதை விட பல மடங்கு எஃபர்ட் ‘சுந்தரி’க்காக போடுவதில் ஒரு சந்தோஷமிருக்கு. படம்தான் பண்ணுவேன்னு ஒரு நேரத்துல பிடிவாதமா இருந்திருக்கேன். நான் சீரியல்ல கமிட் ஆனப்ப என் நட்பு வட்டத்துல எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனா, நான் நம்பிக்கையா ‘சுந்தரி’க்குள் வந்தேன். இப்ப எல்லாருக்கும் தெரிஞ்ச பொண்ணா மாறியிருக்கேன். எல்லாரும் என்னைக் கொண்டாடறாங்க.

ஆக்சுவலா எல்லாருக்கும் என்னைப் பிடிக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். இப்ப அது நிறைவேறியிருக்கு. இதுக்கு காரணமான சன் டிவிக்கும் ‘சுந்தரி’ டீமுக்கும் பெரிய நன்றி...’’ நெகிழும் கேப்ரில்லா, ‘சுந்தரி’யான ரகசியத்தையும் உடைக்கிறார்.‘‘லாக்டவுன் டைம்லதான் ‘சுந்தரி’ வாய்ப்பு தேடி வந்துச்சு. நான் இந்த சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே ‘சுந்தரி’ கேரக்டருக்காக ஆடிஷன் வச்சிருந்தாங்க. அதுல ஏகப்பட்ட பேர் ரிஜக்ட் ஆகிட்டாங்கனு கேள்விப்பட்டதும் ஆச்சரியமாகிடுச்சு.  

‘சுந்தரி’யில் நடிப்பது இனிமையான அனுபவம். இயற்கையான ஸ்கின் டோன்ல, மேக்கப் இல்லாம நடிக்கறதால இன்னும் ஹேப்பியா ஃபீலாகறேன். ‘பிதாமகன்’ கேமராமேன் பாலசுப்ரமணியம் சார்தான், இந்த சீரியலின் தயாரிப்பாளர். தொடரின் ஆரம்ப டைம்ல அவர்தான் ஒளிப்பதிவும் பண்ணினார். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் என்கரேஜ் பண்ணுவார். அப்புறம், தொடரின் டைரக்டர் அழகர் சார், கேமராமேன் முருகன் அண்ணா எல்லாருமே அருமையா உற்சாகப்படுத்தி, செம கூலா ஒர்க் வாங்கறாங்க.

இதுல நான் பாவப்பட்ட பொண்ணா இருப்பேன். ஆனா, நிஜத்துல நான் அப்படி இல்ல. எப்பவும் கலகலனு இருக்கறவ. என்னைச் சுத்தி எப்பவும் சிரிப்பு சத்தம் கேட்கும். ஸ்பாட்ல கூட, அப்படித்தான் இருப்பேன். ஷாட் ரெடினு குரல் கேட்ட அடுத்த செகண்டே ‘சுந்தரி’யா மாறிடுவேன். ‘அப்படி இருந்த பொண்ணா இப்படி அப்பாவியா மூஞ்ச மாத்தியிருக்கு’னு யூனிட்ல ஆச்சரியமாவாங்க.

ஆஃப் த ஸ்கிரீன்ல அத்தனை பேருமே தாயா புள்ளையா பழகறோம். காரைக்குடி ஷெட்யூல் ஷூட்ல, ஒரு உணர்ச்சிகரமான சீன் எடுத்திட்டிருந்தாங்க. நான் அதுல அழுதுடுவேன். அப்ப ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டு இருந்தவங்க, நான் உண்மையிலேயே அழுறேன்னு நினைச்சு அவங்களும் கண்கலங்கி நின்னாங்க. மறக்கவே முடியாத அனுபவம்...’’ சிலிர்க்கும் கேப்ரில்லா, ஒரு மைம் கலைஞி.

‘‘காலேஜ் டைம்ல மைம்ல கலக்கியிருக்கேன். மைம்ல நம்ம முகம் வெளியே தெரியலைனாலும் முகமும் சேர்ந்து நடிச்சிட்டிருக்கும். இதனாலதான் நடிக்க வந்தபிறகு டயலாக் இல்லாத இடங்கள்ல எக்ஸ்பிரஷன்ஸ்ல கலக்க முடியுது. என் சொந்த ஊர் திருச்சில அல்லித்துரை. அம்மா தமிழ் வாத்தியார். அப்பாவும் ஆசிரியர்தான். ரெண்டு பேருமே அரசு பள்ளி தலைமையாசிரியர்களா இருக்காங்க. ஒரு அண்ணா. அவருக்கு மேரேஜ் ஆகி, ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. எனக்கு முழு சப்போர்ட்னா, எங்க அம்மாதான். ‘என்னிக்காவது நீ சாதிப்பே’னு எப்பவும் என்கரேஜ் பண்ணுவாங்க.

எட்டு வருஷங்களுக்கு முன்னாடி சென்னைக்கு தனியா வந்தேன். ஒரு ஆன்லைன் சேனல்ல ஒர்க் பண்ணினேன். நான் டிகிரி டிஸ்கன்டினியூனாலும், காலேஜ் டைம்ல மைம் தவிர தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கேன்.  தனியார் சேனல்ல ரியாலிட்டி ஷோ பதினைந்து எபிசோட் செய்தேன். இந்த நேரத்துல ஏராளமான குறும்படங்கள்ல நடிச்சேன். பெரும்பாலும் ஃபெஸ்டிவலுக்கு போகும் ஷார்ட் ஃபிலிம்ஸ். அந்த வகைல இதுவரைக்கும் 25 அவார்டுக்கு மேல வாங்கியிருக்கேன்!

நான் நடிச்ச குறும்பட இயக்குநர்கள் சினிமா எடுக்கிறப்ப எனக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. அப்படிதான் ‘ஐரா’ல நடிச்சேன். எங்க அம்மா தமிழ் வாத்தியா இருக்கறதாலும், எனக்கும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததாலும் எழுத்திலும் ஆர்வம் உண்டு. ‘கடுதாசிக்காரி’யா எழுதி டிக்டாக்கிலும் சொந்தக் குரல்ல பேசி பெயர் வாங்கினேன். ‘சுந்தரி’ கமிட் பண்றதுக்கு முன்னாடி ‘எண் - 4’னு ஒரு படம் கமிட் ஆகி, நடிச்சும் முடிச்சிட்டேன். அதுவும் ரிலீஸுக்கு ரெடி...’’ என மகிழ்பவர், தன் திருமண வாழ்க்கை குறித்தும் மனம் திறந்தார்.

‘‘மேரேஜ் லைஃப் நல்லா போயிட்டிருக்கு. என்னை நல்லா புரிஞ்சுக்கக் கூடிய கணவரா ஆகாஷ் அமைஞ்சிருக்கார். அவர் ஒளிப்பதிவாளரா இருக்கார். கணவரோட அப்பா தாமோதரன் பிரகாஷ், பத்திரிகையாளர். ‘நக்கீரன்’ல ஒர்க் பண்றார். தாமோதரன் அப்பா, ஆகாஷ்னு புகுந்த வீட்டுல எனக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்கறதாலதான், சீரியல்ல அதிக கவனம் செலுத்த முடியுது. கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அம்மா எப்பவும் என்கிட்ட, ‘நீ எதுக்கும் கவலப்படாத, தைரியமா இரு’னு நம்பிக்கை கொடுப்பாங்க. அதே நம்பிக்கையை கணவர் வீட்டிலும் தர்றாங்க!’’ நெகிழ்ந்து உருகுகிறார் கேப்ரில்லா.
 

மை.பாரதிராஜா