ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி!
ம்ஹும். இது ‘முதல்வன் 2’ படத்தின் ஒன்லைன் அல்ல!உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. அங்குதான் தேசிய அளவில் ஹெட்லைன் ஆன இச்சம்பவம் நடைபெற்றது. அதுவும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில்! இதையொட்டித்தான் உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டம், தவுலதாப்பூரைச் சேர்ந்த 20 வயது சிருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பதவி வகித்தார்!
விவசாயக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சிருஷ்டி, 2018ம் ஆண்டு முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக இருந்து வருகிறார்.பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை உத்தரகண்ட் மாநிலத்தின் கோடை காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் முதல்வராகப் பணியாற்றினார். அரசின் பல வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். பல்வேறு துறை அதிகாரிகள், தங்களின் திட்டங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் வழியாக அவருக்கு விளக்கம் அளித்தனர்!
நிரஞ்சனா
|