வலைப்பேச்சு



@Kannan_Twitz - காதலிக்கற வரையிலும்தான் பெண்கள் வேற வேற மாதிரி; கல்யாணத்துக்கு அப்பறம் எல்லா பொண்டாட்டிகளும் ஒரே மாதிரிதான்!

@THARZIKA - விரும்பிய பாவத்திற்காக கதறி அழுத இரவுகளைக் கடக்காமல் யாருமில்லை.

@sammutweets - யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறைகளைப் பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பாதவரை உங்கள் நிம்மதி
பறிபோவதில்லை.

@Gokul Prasad - கூகுள் நம் மனதைப் படிக்கிறது. நேற்று ‘மாஸ்டர்’ என டைப் அடித்தபோது விஜய் நடித்த படத்திற்கு பதிலாக பால் தாமஸ் ஆண்டர்சனின் பட இணைப்பைக் காட்டியதும் சற்று பெருமையாக இருந்தது. இன்றைக்கு ப்ளூ டார்ட் தளத்தைத் தேடுவதற்காக ‘ப்ளூ’ என டைப் அடித்ததும் ‘the blue lagoon’ பட இணைப்பை எடுத்துக்காட்டி மானபங்கப்படுத்திவிட்டது.

@little_heartsss - முகம் காட்டாமல் பல யுகங்கள் கடந்தாலும் ஈர்க்க வைப்பவள் பெண்..!முகம் பார்த்த நொடிப்பொழு திலே வீழ்ந்து விடுபவன் ஆண்..!

@_iniyal_Twitz_ - நமது குறைகளை மட்டுமே காணுகின்ற இடங்களில் சற்று திமிராகவே இருங்க..!அவ்விடத்தில் பணிவு கோழைத்தனமாகவும் திமிர் அழகாகவும் மாறும்..!

@Kozhiyaar - வெளிநாட்டில் ஒரு வண்டி வழியிலே நின்னுடுச்சுனா, எஞ்சின்ல பிரச்னை இருக்கான்னு பார்க்கணும்; நம்ம ஊரில் நின்னா, முதல்ல பெட்ரோல் இருக்கான்னு வண்டியை ஆட்டிப் பார்க்கணும்!

@ShakthiBoy_ - உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான மாற்றங்களை மற்றவர்களிடம் எதிர்பாக்காதீர்கள், உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள்.

@nchokkan - இப்போதெல்லாம் மக்கள் எந்த இணைய தளத்தையும் மொபைல் செயலியையும் (App) எளிதில் நம்புவதில்லை. இவர்கள் நம்முடைய தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறார்களோ என்கிற ஐயத்துடனே அவற்றைக் குறுகுறுவென்று பார்க்கிறார்கள்.

@LonelyTwitz - உடைந்தது உடைந்ததாகவே இருந்துவிட்டுப் போகட்டும்; ஒட்ட வைக்க முயன்று சில பகுதிகளைத் தொலைத்துவிட்டு
தேடாதீர்கள்...

@Vinayaga Murugan - தொலைக்காட்சியில் ஓர் அரசு விளம்பரம் காட்டுறாங்க. இரவில் தனியாகச் செல்லும் இளம்பெண்ணின் ஸ்கூட்டர் பழுதாக SOS செயலி வழியாக காவல்துறையை அழைக்க, மூன்று பெண் காவலர்கள் வந்து வண்டி பஞ்சர் ஒட்டும்வரை காத்திருந்து அந்தப்பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். எடப்பாடி அரசின் சாதனையாம். என்னடா இது? டென்மார்க், பிரான்ஸ்ல கூட இப்படி இல்லையே. அடிச்சுவிடுறதுக்கு அளவு வேண்டாம்?

@Thiyavan_David - விலைமதிக்கமுடியாத பாசங்கள் எல்லாம் நேரில் பேச முடியாமல் பயந்து வெறும் அலைபேசியோடு முடிந்து விடுகிறது..!

@Rey15061803 - தன் வலிகளை மற்றவர்களிடம் விளக்க விரும்பாதவர்கள் தனிமையில் அழவும்... கூட்டத்தில் சிரிக்கவும்... கற்றுக் கொண்டவர்களே..!

@Mindvoice__ - விடை கொடுத்தலைப் போல் சுலபமாக இல்லை விடை பெறுதல்...

@Pa Raghavan - மேலுக்கு ஒரு நாலு முழ வேட்டியைப் போட்டுக்கொண்டேனும் நைட்டியில் வந்துதான் துணி காயப்போடுவேன் என்று அழிச்சாட்டியம் செய்யும் எதிர்வீட்டு மொட்டை மாடிப் பெண்ணே, உனக்குத் தெரியுமா...? நைட்டியைக்கூட சகித்துக்கொள்வார்கள் ஆண்கள். நைட்டிக்கு மேலே போடும் துண்டு துப்பட்டாக்களைக் கண்டால் கவிதை எழுதும் அளவுக்கே வெறுத்துப் போவார்கள்.

@deepaakumaran - கெட்டவங்களா இருக்கிறவங்களை நல்லவர்களா மாற்றுவது நம்பிக்கை துரோகிகள்தான்...

@Karl Max Ganapathy - ‘மாஸ்டர்’ படத்தில் சிறார்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு குறித்த மசாலாத்தனமான ஒரு சித்திரம் வருகிறது. கமர்ஷியல் குப்பையில் அது ஒரு கன்டென்ட், அவ்வளவே. அதைத்தாண்டி நாம் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், இன்றைய தமிழகத்தின் யதார்த்தம் அதுவே.

வழக்கம் போல சினிமாக்கள் இவற்றை ஒரு வில்லனின் தவறாக வரையறுத்து பிரச்னையை எளிமைப்படுத்துகின்றன. இது உலகம் முழுதும் இருக்கும் போக்கு. ஆனால், அங்கு அதற்கு நிகரான parallel சினிமாக்களும் எடுக்கப்படுவதால் அந்தப் பிரச்னை பரவலாக விவாதத்துக்கு உள்ளாகிறது.
சென்ற வாரம் எனது வக்கீல் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். வக்கீல் என்றால் அதன் முழு அர்த்தத்தில், எல்லா வகையிலும் செயல்படக் கூடிய ஒரு வக்கீல்.

சிரித்துக்கொண்டே ஒரு விஷயம் சொன்னார். ‘இப்போதெல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. எதிலும் இறங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு நூறு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. ரொம்ப சின்னப் பயலா இருக்கானுவ, பட்டுனு கத்தியை எடுத்து சொருவுறானுவோ...
நாம பெரிய ஆளு, நாம பதிலுக்கு செய்ய முடியும் அப்படிங்கறது அடுத்த விஷயம். ஆனா, அதெல்லாம் குத்து வாங்கினதுக்கு அப்புறம்தானே’ என்றார். அந்த யதார்த்தம் அப்பட்டமாக முகத்தில் அறைகிறது.

தமிழகம் முழுக்க உதிரிகள் உருவாக்கம் வெகு வேகமாக நடந்தேறியிருக்கிறது. சினிமாவில் காட்டுவது போல, இவர்களுக்குப் பின்னால் ஒரு டான் இருப்பதில்லை. தன்னிச்சையாக வளர்ந்தவர்கள் அதிகம். குற்றச் செயல் புரியும் சிறுவர்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

நான் நீதிமன்ற வாசலில் நின்று அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, இந்தப் பகுதியில் சென்ற மாதம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொலையில் சரணடைந்த இரண்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்ப்பதற்காக உறவினர்கள் திரண்டு வந்திருந்தனர். குற்றவாளிகள் இருவரும் இருபதுக்குக் குறைந்த வயதுடையவர்கள். என்னை அச்சமூட்டிய விஷயம் என்னவென்றால், வண்டியை விட்டு இறங்கி நடக்கையில் அவர்களிடம் வெளிப்பட்ட உடல்மொழி.

விஜய் படத்தில் அந்தப் பொடியன் நடப்பதைப் போன்ற கெத்து நடை. உறவினர்கள் மத்தியில் இருந்த ஓர் இளவயதுப் பெண்ணிடம் சீண்டலான கேலியுடன் உரையாடிவிட்டு அவள் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வேனுக்குள் ஏறுவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தோம்.

நண்பர் சொன்னார், ‘கொலையுண்ட தரப்பு புகாரே தரவில்லை’ என்று. அதன் பொருள், இது சட்டப்படியாக எதிர்கொள்ளப்படப்போவதில்லை என்பதுதான். இவர்கள் ஆயுள் எத்தனை மாதங்கள் என்று தெரியாது. ஆனால், மொத்த குடும்பமும் வந்து காத்திருக்கிறது. அதில் ஒருவனுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. கணக்கிட்டுப் பார்த்தால், அவன் இந்தக் கொலையில் ஈடுபடுகையில் அவள் பிரசவத்துக்கு ஒன்றிரண்டு வாரங்களே இருந்திருக்கவேண்டும்.

புனைவின் கற்பனைக்கு எட்டாததாக இருக்கின்றது யதார்த்தச் சூழல். வண்டி புறப்படுகையில் உறவினர்கள் யாரும் அழவில்லை, அவர்களைத் திட்டவில்லை. கெத்தாக கையசைத்துக்கொண்டே போகிறார்கள் இருவரும். அடுத்தடுத்த ஆஜர்களில் ஜெயிலுக்குள்ளே முழுக்கவும் விளைந்து விடுவார்கள் என்றார் நண்பர். ஆம், அறுவடை வெளியில்தான்!

@JeyaKris_offl - நீ எதை தேடிக் கொண்டிருக்கிறாயோ அதுவும் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது...

@priyavassu - வெளிச்சத்தை நோக்கிய பயணங்களில் இருளின் பக்கங்கள் ஒளிரும்...

@Bogan Sankar - மதுரையில் யாருமே மாஸ்க் போடவில்லை. பழைய பாவாடைத் துணி போன்ற ஒரு காடாத்துணியை கொஞ்ச நாட்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. போடுகிறவர்களையும் கழட்டுங்க கழட்டுங்க என்று நச்சரிக்கிறார்கள்.

நான் பொதுவெளியில் ஜட்டியைக் கூட கழட்டத் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து மாஸ்க்கை கழற்றச் சொல்லாதீர்கள். மாஸ்க் போட்டா சிரிப்பது தெரியவில்லை என்கிறார்கள். மாஸ்க் போடாவிட்டால் எனக்கு சிரிக்கத் தெரியவில்லை.ஒரே ஒரு பெண் மட்டும் ஆறுதலாய் பிங்க் நிற மாஸ்க் அணிந்திருந்தார். அதில் Tell me when you want to kiss என்று எழுதியிருந்தது.

@soundhari_twitz - காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லாதீர்கள்... ஒருநாள் சரிந்துவிடக்கூடும்..!

@Qalbi_16 - ‘பரவாயில்லை, பழகிடுச்சி...’ என்ற வார்த்தைக்குள் அடங்கி விடுகிறது பல ஆசைகளும் கனவுகளும்...

@THARZIKA - ஏமாந்து விட்டோம் என்பதை விட, எவ்வளவு நம்பியும் ஏமாற்றி விட்டார்கள் என்பது தான் அதிகம் வலிக்கிறது.

@Mona_Twits - கிடைக்காமல் போன சந்தோசங்களைவிட நாம் தேடாமல் விட்ட சந்தோசங்களே அதிகம்...

@Paadhasaari Vishwanathan - பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகள் வைத்திருப்பவன் ஞானி!