ஒரு கார் + ஒரு சின்ன கேஸ் ஸ்டவ் + ஒரு தம்பதி + 13 மாநிலங்கள் = யூ டியூப் சேனல்!



பயணம் என்பது சிலருக்கு ஆர்வம், சிலருக்கு தேவை. அது எப்போதும் ஆன்மாவுக்கு உணவளிக்கிறது. நம் கண்களை இனிமையாக்குகிறதா அல்லது நம்மை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுகிறதா... எதுவாக இருந்தாலும் பயணம் வாழ்வின் அமுதம். அதிலும் நமக்கு பிடித்தவர்களுடன், பிடித்த இடத்திற்கு சென்ற பயண அனுபவங்களின் அழகே தனி.

அவ்வாறு சென்ற அனுபவத்தை ‘Tinpin Stories’ என்ற யூ டியூப் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி கிருஷ்ணா - ஹரிகிருஷ்ணன் என்கிற இளம் தம்பதியினர். இந்தியாவின் 13 மாநிலங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு, அதற்கு துணையாக தங்களது காரினை எடுத்துக்கொண்டு அதிலேயே படுக்கை, சமையல்… போன்ற வசதிகளை ஏற்படுத்தி பயணம் செய்துள்ளனர். ஹரிகிருஷ்ணன் பெங்களூரில் விற்பனை அதிகாரி. லட்சுமி கிராஃபிக் டிசைனராக தனது இன்டர்ன்ஷிப்பை முடித்தவர். பயணத்தின் மூலம் நாட்டில் உள்ள பல அதிசயங்களை ஆராய்வதற்கும், தங்கள் கனவைத் துரத்துவதற்கும் வேலையை விட முடிவு செய்தனர்.

‘‘கடந்த ஆண்டு எங்கள் திருமணம் முடிவு செய்யப்பட்டதும் இருவரும் பேசத் தொடங்கி னோம். அந்தப் பேச்சில், கதை சொல்லியாகவும், பயணத்தை விரும்புபவர்களாகவும் இருவரும் இருப்பது தெரிந்தது. அதை நிறைவேற்ற திருமணத்திற்குப் பிறகு அதிக பயணங்கள் செய்து, அதன் சுவாரஸ்யமான தருணங்களை எங்கள் யூ டியூப் சேனல் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தோம்...” என்கிறார் லட்சுமி.

“நாங்கள் பைக்கில் தாய்லாந்து செல்ல நினைத்தோம். கொரோனாவால் அத்திட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும், வீட்டிலேயே இருப்பதை சோர்வாக உணர்ந்ததால் புதிய பயணங்களை திட்டமிடத் தொடங்கினோம்...” என்று கூறும் ஹரிகிருஷ்ணன் தம்பதியினர் கேரளாவின் முதல் ‘கார் லைஃப்’ ஜோடி.

ஒவ்வொரு இடத்தின் உணவு வகைகளை ருசிப்பது, தெரியாத கிராமங்களை எல்லோருக்கும் அறிமுகம் செய்வது இவர்களது பயண நோக்கம். இரவு நேரங்களில் காரை நிறுத்த பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிப்பது இவர்களுக்கு சவாலாகவே இருந்துள்ளது.   

‘‘பெட்ரோல் பங்க் அல்லது ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடித்து ஓய்வு எடுப்போம். பெரும்பாலும் எங்கள் ரெஃப்ரஷ் ரூம் பெட்ரோல் பங்க் பாத்ரூமாகவே இருக்கும்...” என்கிறார் ஹரிகிருஷ்ணன். குறைந்த அளவிலான சேமிப்புடன் பயணத்தைத் தொடங்கியவர்களுக்கு, இன்று அவர்களின் வருமான ஆதாரமாக யூ டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்து வரும் வியாபாரம் கை கொடுத்துள்ளது.    

அன்னம் அரசு