ஊதா கலர் கோட்டு... பின்னால் இருக்கு சீக்ரெட்டு!
அப்பாடா... ஒருவழியாக விலக மாட்டேன் என்று அடம்பிடித்த டிரம்ப் விலகிவிட்டார்.அமெரிக்காவின் 46வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சா வளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் பதவியேற்றுவிட்டனர்.விஷயம் இதுவல்ல.
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக கருப்பின, தெற்காசிய மற்றும் பெண் ஒருவர் பதவியேற்றிருப்பது சிறப்புதான் என்றாலும் அதுவும் இங்கு நியூஸ் அல்ல.பிறகு..? பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கமலா ஹாரிஸ், ஊதா நிற கோட் அணிந்திருந்தாரே... அதுதான் மேட்டர். ஏனெனில் அது வெறும் நிறம் மட்டுமல்ல. இந்த வண்ணத்துக்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் சிவப்பு நிறம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் நீல நிறம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வண்ணமே ஊதா. இதன் பொருள் ஒருங்கிணைந்த அமெரிக்கா. அமெரிக்காவின் நலனிற்காக இரு கட்சிகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பதையே ஊதா வலியுறுத்துகிறது.
மட்டுமல்ல. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சுமார் 100 ஆண்டுகால போராட்டங்களின் விளைவாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் வண்ணமாக ஊதாவே இருந்தது.
எனவே, வாக்குரிமைக்காக போராடி பெண்கள் பெற்ற வெற்றியின் அடையாளமாக விளங்கும் ஊதா நிறத்தில் கோட் அணிந்து பதவியேற்பு விழாவை கமலா ஹாரிஸ் சிறப்பித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க பெண்களின் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்துவேன் என்பதை உணர்த்தியிருக்கிறார்!
ஜான்சி
|